கலைவாணியின் குடும்பத்துக்கு நீதி வேண்டும்!
திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை ஒன்றியம், மோர்பட்டி ஊராட்சி G.குரும்பபட்டியில் உள்ள தமது வீட்டில் கலைவாணி என்கிற 12 வயதுச் சிறுமி வாயில் மின்சார ஒயர் கடிபட்ட நிலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்திருக்கிறார். அச் சிறுமியின் உடலில் ஆங்காங்கே காயங்களும் தென்பட்டிருக்கிறது. இது குறித்து உடனடியாக வடமதுரை காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பிரேதப்பரிசோதனையில் கலைவாணி பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாகி இறப்பை தழுவியிருப்பது தெரியவர அந்த ஏழைத்தாயும் அவரது குடும்பமும் கதறித்துடித்திருக்கிறது.
இது குறித்து வடமதுரை காவல்நிலையத்தில் அளிக்கப்பட்ட புகார்மீது எவ்வித நடவடிக்கையுமில்லாமல் அப்படியே கிடப்பில் இருந்திருக்கிறது. பிள்ளையை பறிகொடுத்து தவித்த குடும்பம் வடமதுரை காவல்நிலையத்தின் மந்த நிலையை கண்டித்து உடனடியாக எஸ்பி ஆபீஸ் முன்பு போராட்டத்தில் குதித்துள்ளனர். நெருக்கடியை உணர்ந்த மாவட்ட எஸ்பி உடனடியாக விசாரணைக்கு உத்தரவிட வடமதுரை போலீஸார் வேறு வழியில்லாமல் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். அதில் கலைவாணியின் வீட்டுக்கு எதிர்வீட்டில் வசித்த தங்கராஜ் மகன் கிருபானந்தம் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளான். தான்தான் பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் அது வெளியில் தெரிந்துவிடுமோ என எண்ணி கொலைசெய்து மின் ஒயரை வாயில் வைத்ததாகவும் வாக்குமூலம் பெற்ற போலீசார் கிருபானந்தத்தை உடனடியாக சேலம் சிறுவர் சீர்திருத்த சிறைப்பள்ளியில் அடைத்துள்ளனர்.
இதோடு விவகாரம் முடிந்ததா என்றால் இல்லை. கலைவாணியை கொன்றது கிருபானந்தம் மட்டுமில்லையென்றும் இன்னும் இரண்டு பேரோடு சேர்ந்து கூட்டு பாலியல் வன்புணர்வு செய்தே அவள் கொல்லப்பட்டதாகவும் போலீசார் அதை மறைத்து ஒருதலைப்பட்சமாக நடக்க முயல்கின்றனர் என்றும் கலைவாணியின் பெற்றோர் குற்றம் சாட்டுகின்றனர்.
அப்படி என்னதான் நடந்தது என்று நாமும் விசாரணையில் இறங்கினோம்.
கலைவாணியின் அப்பா வெங்கடாசலம் வடமதுரையில் சலூன் கடை நடத்திவருபவர். அம்மா நூறுநாள் வேலைத்திட்டத்துக்கு போய் வயிறு வளர்க்கும் எளிய குடும்பம். குற்றம்சாட்டப்பட்டு தற்போது சிறையிலிருக்கும் கிருபானந்தமும் வசதியென்று சொல்வதற்கில்லை. அன்றாடம் உழைத்தால்தான் கஞ்சி. அவரோடு சேர்ந்து வன்புணர்வு செய்த மற்ற இருவரும் பணபலமும் அரசியல் செல்வாக்கும் மிக்கவர்கள் என்று சொல்லப்படுகிறது. அதனாலேயே வடமதுரை போலீசார் பணத்தை பெற்றுக்கொண்டு நடவடிக்கை எடுக்காமல் ஜகா வாங்கிவந்ததாகவும் தெரிந்த வட்டாரங்கள் தகவல்களை புட்டுப் புட்டு வைக்கின்றனர்.
வடமதுரை போலீஸ் ஸ்டேசன் மட்டுமில்லாமல் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்களையும், மற்ற அமைப்புகள் இயக்கங்களையும், அந்த தரப்பு வாய்திறக்கவிடாமல் பணத்தை அமுக்கியதாக சொல்கிறார்கள் உள்ளூரைச் சேர்ந்த சில சமூக ஆர்வலர்கள். இதனால்தான் வசதியில்லாத கிருபானந்தத்தை மட்டும் குற்றம் செய்ததாக ஒப்புக்கொள்ள வைத்து மற்ற இருவரையும் காப்பாற்றும் முயற்சியில் சத்தமில்லாமல் தம் சாதிப்பெருமை புரையோடிப்போன சில பெரும் குடும்பத்துக்காரர்கள் ஈடுபட்டு வருவதாக சொல்கிறார்கள். இதையொட்டி வடமதுரையில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கமும் போராட்டம் செய்து ஓய்ந்த நிலையிலும் அந்த இருவர் இதுவரை கைது செய்யப்படவில்லை.
பொன்பரப்பி, பொன்னமராவதி சம்பவங்களுக்கு சற்றும் குறைந்திடாத வீரியமுள்ள இந்த சம்பவம் பெரும் பணக்காரர்களாலும் சாதிய பின்னணியோடும் மூடி மறைக்கப்படுகிறது. எது எதற்கெல்லாமோ கொடி பிடிக்கும் அரசியல் கட்சியினர் இருக்குமிடமே தெரியவில்லை. ஒருவேளை கலைவாணி மெஜாரிட்டியான ஒரு ஆதிக்கசாதியில் பிறந்திருந்தால், அல்லது வசதிபடைத்த ஒரு குடும்பத்தில் பிறந்திருந்தால் எல்லோரும் நியாயம் கேட்க, போராட வந்திருப்பார்களோ என்னவோ…?
கலைவாணியின் கொலைக்கு மறுக்கப்படும் நீதி, இச்சமூகத்தின் மிகப்பெரும் அநீதி! கலைவாணியின் குடும்பத்துக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும். விடுபட்ட காமக்கொடூரன்கள் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக இருக்கிறது.
– சுப்பிரமணி