தடுப்பூசியும் விவேக் மரணமும் : சில கேள்விகள்…
கொரோனாவில் இருந்து தன்னைக் காத்துக் கொள்ளவும், விழிப்புணர்வுக்காகவும் தடுப்பூசி போட்டுக் கொண்டதால் தான் நடிகர் விவேக் மரணம் அடைந்தாரா? என்பது தான் தமிழகம் முழுவதும் மக்களின் சந்தேகமாக இருக்கிறது.
சென்னை ஒமந்தூரார் மருத்துவமனையில் தடுப்பூசி போட்டுக் கொண்ட மறுநாள் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் விவேக். உடனடியாக தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நடிகர் விவேக் அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனைக்குச் சென்று விவேக் மாரடைப்பால் பாதிக்கப்பட்டிருப்பதற்கும், அவர் தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று தனியார் மருத்துவமனை மருத்துவர்களுடன் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார். இந்நிலையில் மறுநாள் அதிகாலையில் விவேக் மரணமடைந்துவிட்டார் என்கிற செய்தியை மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டது. விவேக்கின் மரணச் செய்தி வெளியான பிறகு அவருடைய மரணத்தையும் கொரோனா தடுப்பூசியையும் சம்பந்தப்படுத்தி மக்கள் விவாதிக்க ஆரம்பித்துவிட்டார்கள். தடுப்பூசிக்கும் விவேக் மரணத்திற்கும் சம்பந்தம் இல்லை என்று அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம் அளித்தார். ஆனாலும் சர்ச்சைகள் ஓயவில்லை.
விவேக் தடுப்பூசி போட்டுக் கொண்ட பிறகு மரணம் அடைந்ததால் அவருடைய மரணத்திற்கு இதுதான் காரணம் என்று விளக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் மருத்துவர்களுக்கு இருக்கிறது. அவர் தடுப்பூசியால் இறக்கவில்லை என்றால் வேறு என்ன காரணத்தால் இறந்தார் என்பதை தெளிவாக விளக்கினால் தானே மக்களுக்கு புரியும். இதற்கு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனோ தடுப்பு மருந்து எடுத்துக் கொண்டதற்குப் பிறகு மரணம் வரை செல்வதற்கு ஒவ்வாமை காரணமாக இருக்கலாம். அதுவும் அரைமணி நேரத்தில் தான் நடக்கும் என்கிறார். ஆனால் 2 முதல் நான்கு மணிநேரத்தில் கூட பலருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 24 மணிநேரம் கழித்து கூட ஒவ்வாமை ஏற்பட்டு பாதிக்கப்பட்டுள்ளனர். நடிகர் பார்த்திபன் தடுப்பூசி போட்டுக் கொண்ட மறுநாள் ஒவ்வாமை ஏற்பட்டதால் எனது கை, கால், முகம் வீங்கி விட்டது என்று டிவிட்டரில் பதிவிட்டார். கடந்த மாதம் வரை 180 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்ட பிறகு இறந்துள்ளனர். இதில் பாதிப்பேர் பக்கவாதம் ஏற்பட்டு இறந்துள்ளனர். இதனால் தான் தடுப்பூசி போட்டுக் கொண்ட மறுநாளே நடிகர் விவேக் மரணமடைந்ததால் பல்வேறு சந்தேகங்கள் எழுகிறது.
இது குறித்து மருத்துவர்கள், இயற்கையாக நிகழும் மாரடைப்பால் இறப்பதை விட தடுப்பூசியால் நிகழும் போது அடைப்பு ஓரிடத்தில் இருக்காது. இதயத்திலேயே பல இடங்களில் இருக்கும். நுரையீரல் மற்றும் மூளையிலும் இருக்கும். விவேக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது அவருடைய இரத்த ஓட்டத்திற்கும் பிரச்சனை இருந்திருக்கிறது. சுயநினைவு இல்லாமல் தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறுகிறார்கள்.
விவேக் தினசரி உடற்பயிற்சி மேற்கொள்வதோடு சைக்கிளிங், தியானம், யோகா போன்ற பயிற்சிகளை மேற்கொண்டு உடலை கட்டுக் கோப்பாக வைத்திருந்தார். அவரை அரசு அதிகாரிகள் தான் கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வுக்காக அவரை தடுப்பூசி போடச் சொல்லி அழைத்ததாகவும் அதனால் தான் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு அவர் இறந்ததாகவும் அவரது அபிமானிகள் பேசிக்கொள்கிறார்கள்.
ஆனால் ஓமந்தூரார் மருத்துவமனை மருத்துவர்கள் இதுகுறித்து கூறும்போது, விவேக் தடுப்பூசி போட்டுக் கொண்ட நாளில் 830 பேருக்கு தடுப்பூசி போட்டுள்ளோம். இவர்கள் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. கண்டிப்பாக அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதற்கும் தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்கிறார்கள்.
நடிகர் விவேக் தடுப்பூசி போட்டுக் கொண்ட பிறகு உயிரிழந்துள்ளதால் அவருடைய மரணத்துக்கான காரணத்தை உரிய அறிவியல் ஆய்வுகளின் மூலம் தமிழக அரசும், சுகாதாரத்துறையும் ஆதாரங்களுடன் வெளியிட்டால் மட்டுமே மக்களின் சந்தேகங்கள் முடிவுக்கு வரும்..
– சூரிகா