2000 ரூபாய் டோக்கன் கொடுத்து ஏமாற்றிய அமமுக நிர்வாகி
கும்பகோணத்தில் அமமுக வேட்பாளருக்கு ஓட்டுப் போட்டால் 2000 ரூபாய்க்கு மளிகைக் கடையில் பொருட்கள் வாங்கிக் கொள்ளலாம் என்று போலியான டோக்கன் கொடுத்து அமமுகவினர் செய்த சீட்டிங் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
கும்பகோணம் பெரிய கடைத்தெரு பாட்ராச்சாரியார் தெருவில் பிரியம் மளிகை ஏஜென்சி என்ற பெரிய கடை ஒன்று உள்ளது. இந்த கடைக்கு துண்டுச்சீட்டு போன்ற டோக்கனுடன் வந்த வாடிக்கையாளர்கள் சிலர் அந்தக் கடையின் பெயர் பொறித்து ரூ.2000 என குறிப்பிடப்பட்டிருந்த டோக்கனை கொடுத்து, ஓட்டு போடுவதற்காக அரசியல் கட்சியினர் பணத்திற்கு பதிலாக தங்கள் கடையில் இலவசமாக மளிகை பொருட்கள் வாங்குவதற்கான டோக்கன் கொடுத்துள்ளனர் என கூறியுள்ளனர்.
டோக்கனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அதிமுக பிரமுகரும் அந்த கடையின் உரிமையாளருமான சேக்முகமது தான் யாருக்கும் டோக்கன் வழங்கவில்லை என்றும் இதற்கு மளிகை பொருட்கள் வழங்க இயலாது, தனக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை எனக்கூறியுள்ளார். அப்போதுதான் வாக்காளர்களுக்கு புரிந்தது அரசியல் கட்சியினர் கொடுத்தது போலி டோக்கன் என்று.
ஆனால் தொடர்ந்து கூட்டம் அதிகரிக்கவே அவர் மளிகைக் கடையை பூட்டி கடையின் கதவில் வேட்பாளர்கள் கொடுத்த டோக்கனுக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை இந்த டோக்கனுக்கு எங்கள் கடை எந்த பொறுப்பும் ஏற்காது என பிரிண்ட் எடுத்து கதவில் ஒட்டி விட்டு வீட்டுக்கு செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டார் சேக்முகமது.
இது குறித்து டோக்கன் கொண்டு வந்த பொதுமக்களிடம் விசாரித்த போது கும்பகோணம் சட்ட மன்ற தொகுதியில் போட்டியிடும் அமமுக வேட்பாளருக்கு ஆதரவாக குக்கர் சின்னத்தில் ஓட்டுபோட்டுவிட்டு 2 ஆயிரம் ரூபாய் டோக்கனுடன் மறு நாள் சென்று மளிகை பொருட்களை வாங்கிக் கொள்ளலாம் என்று ஆசையை தூண்டி இந்த டோக்கனை அமமுகவினர் வழங்கி இருப்பது வெளிச்சத்திற்கு வந்தது.
இது தொடர்பாக அமமுக மாவட்ட துணை செயலாளர் வடிவேல் வாண்டையாரிடம் கேட்ட போது, அந்த டோக்கனில் ப்ரியம் ஏஜென்ஸி என்ற மளிகை கடையில் பெயரை குறிப்பிட்டு 2000 ரூபாய் டோக்கன் வழங்கியது அமமுக ஒன்றிய செயலாளரான பாலமுருகன் என்றும் அவர் அந்த கடைக்கு அருகில் வந்து பணம் பெற்றுக் கொள்ளும்படிதானே தெரிவித்திருந்தார் மளிகை பொருட்கள் வாங்கிக் கொள்ள சொல்லவில்லையே என்று கூறி சமாளித்தார்.
ஆர்.கே நகர் தொகுதியில் டிடிவி தினகரன் போட்டியிட்ட போது ஓட்டுக்கு ஒரு 20 ரூபாய் நோட்டு கொடுத்து குக்கருக்கு வாக்களித்தால் ஒரு வாரம் கழித்து 20 ஆயிரம் ரூபாய் வாங்கிக் கொள்ளுங்கள் என்று ஏமாற்றி விட்டதாக எழுந்த புகாருக்கே இன்னும் விடை தெரியாமல் சிலர் சுற்றிக் கொண்டிருக்கும் நிலையில், 2000 என்று வெற்றுதாளில் அச்சிட்டு அவர்களது ஆசையை தூண்டி சாமர்த்தியமாக ஓட்டுக்களை திருப்பியுள்ளனர் அமமுகவினர்..!
வாக்காளர்கள் பார்வையில் இது மோசடியாக தெரிந்தாலும், அரசியல் கட்சியினர் பார்வையில் இது ஆர்.கே நகர் டெக்னிக் என்று வர்ணிக்கப்படுகிறது. வாக்காளர்களை ஏமாத்தனும்மா அவர்களது ஆசையை தூண்டனும் என்ற சத்திய வார்த்தையை மட்டுமே நம்பி, ஓட்டுக்கு பணம் என்று அலைந்தவர்களை அமுக்கி டோக்கனை கையில் கொடுத்து மூளை சலவை செய்து குக்கரில் வாக்களிக்க செய்துள்ளனர் அமமுகவினர் ..!
அதே நேரத்தில் வத்தல் விற்ற காசையும், வங்கி ஏடி.எம்முக்கு சென்ற பணத்தையும் விரட்டிப் பிடித்த தேர்தல் ஆணைய அதிகாரிகள் வீடு வீடாக 2000 ரூபாய் டோக்கன் கொடுத்த நபர் மீது வழக்குப்பதிவு கூட செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, டோக்கன் வழங்கி, தேர்தல் விதிமுறைகளை மீறியதாக அமமுக நிர்வாகி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கருப்பூரை சேர்ந்த அமமுக ஊராட்சி செயலாளராக உள்ள கனகராஜ் என்பவர் மீது உணவுப் பொருட்களை லஞ்சமாக கொடுத்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
– நமது நிருபர்