தமிழகம்

திறக்கப்படாத கடைகள்… : வாடகை வசூலிக்கும் பேரூராட்சி நிர்வாகம்

கோவை மாவட்டம் சூலூர் வட்டத்திற்குட்பட்ட சோமனூர் பேருந்து நிலையம் சில ஆண்டுகளுக்கு முன்பு இடிந்து விழுந்து 5 நபர்கள் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இதை யாரும் மறந்திருக்க வாய்ப்பில்லை. அந்த இடத்தில் புதிய பேருந்து நிலையம் கட்டுவதற்கான கட்டுமானப் பணிகள் தொடங்கி இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகியம் இன்னும் பணிகள் முடிவுறாத நிலையில் தான் உள்ளது. ஆனால் பேருந்து நிலையத்தில் கட்டப்பட்டு வரும் கடைகளை மூன்று மாதத்திற்கு முன்பே ஏலம் விட்டு அதற்கான வாடகையையும் வசூலித்து வருகிறது பேரூராட்சி நிர்வாகம்.

புதிய பேருந்து நிலையத்திற்கான கட்டிடப் பணிகள் நிறைவடைந்ததும் பொதுப்பணித்துறை பேரூராட்சியிடம் கட்டிடங்களை ஒப்படைத்தவுடன் தான் கடைகளை டெண்டர் மூலம் வியாபாரிகளுக்கு வழங்க வேண்டும்.

கட்டிடப் பணிகள் நடைபெறும் போதே கடந்த பிப்ரவரியில் பேருந்து நிலையத்திற்கான திறப்பு விழாவையும் நடத்தி அதற்கான கல்வெட்டையும் வைத்துள்ளனர்.

கடைகளை வாடகைக்கு எடுத்த வியாபாரிகள் ஓராண்டுக்கான வாடகை பணத்தை முன்பணமாக பேரூராட்சியில் செலுத்தி இருக்கிறார்கள். அதில் மூன்று மாதங்களுக்கான வாடகைப் பணத்தையும் பேரூராட்சி நிர்வாகத்தினர் பிடித்தம் செய்ததாக வியாபாரிகள் குற்றம் சாட்டுகிறார்கள்.

கட்டிடப் பணிகள் நிறைவடையாத நிலையில் பேருந்து நிலையத்தை உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி திறந்து வைத்திருக்கிறார். அந்த விழாவிற்கு கோவை மாவட்ட ஆட்சியராக இருந்த ராசாமணி தலைமை தாங்கியிருக்கிறார். சூலூர் சட்டமன்ற உறுப்பினர் கந்தசாமி முன்னிலை வகித்திருக்கிறார். தேர்தல் தேதி அறிவிப்பிற்கு முன்பே கட்டிடத்தை திறக்க வேண்டும் என்ற அவசரத்தில் பேருந்து நிலையத்திற்கான கட்டிடப் பணிகள் நடைபெறும் போதே திறப்பு விழா கொண்டாடியதோடு, கடைகளையும் வாடகைக்கு விட்டிருக்கிறார்கள். கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி ஆளும் கட்சிக்கு சாதகமாக செயல்பட்டதாக தேர்தல் ஆணையத்துக்கு புகார்கள் வந்ததால் சமீபத்தில் காத்திருப்போர் பட்டியலில் வைக்க தேர்தல் ஆணையர் உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருமத்தம் பட்டி பேரூராட்சி அதிகாரிகள் பேருந்து நிலைய கட்டிடப் பணிகள் நிறைவுறாத நிலையில் கடைகளை எதன் அடிப்படையில் டெண்டர் விட்டார்கள் . டெண்டர் எடுத்த வியாபாரிகளிடம் கடைகளுக்கான சாவியை ஒப்படைக்காமல் அவர்களிடம் ஒரு வருடத்திற்கான வாடகையை முன்பணமாக வசூலும் செய்திருக்கிறார்கள். கடைகளுக்கான சாவியை கொடுக்காமலேயே மூன்று மாதமாக வாடகையையும், பிடித்தம் செய்வது எந்த வகையில் நியாயம் என கடைகளை டெண்டர் எடுத்த வியாபாரிகள் புலம்புகிறார்கள்.

இதுகுறித்து சோமனூர் பேருந்து நிலையத்தில் கடைகளை டெண்டர் எடுத்த வியாபாரிகள் கூறும்போது, கட்டிடப் பணிகள் நிறைவுறாத நிலையில் கருமத்தம் பட்டி பேரூராட்சி நிர்வாகிகள் அமைச்சரை வைத்து பேருந்து நிலையத்திற்கு திறப்பு விழா நடத்தினார்கள். அங்கு உள்ள கடைகளை டெண்டர் விட்டதோடு வியாபாரிகளிடம் கடைகளுக்கான சாவியை ஒப்படைக்காமலேயே வாடகையையும் பிடித்தம் செய்கிறார்கள். கடையை டெண்டர் எடுத்தவர்களிடம் கடையின் சாவியை கொடுத்த பிறகுதான் வாடகை பணத்தை வசூல் செய்ய வேண்டும். இந்த பேருந்து நிலையம் முழுமையான செயல்பாட்டுக்கு வந்த பிறகுதான் கருமத்தம்பட்டி பேரூராட்சி நிர்வாகம் வாடகை பணம் பிடித்தம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வைக்கிறார்கள். வியாபாரிகளின் கோரிக்கையை அதிகாரிகள் செவி கொடுத்து கேட்பார்களா பொறுத்திருந்து பார்ப்போம்.

சௌந்திரராஜன்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button