அரசியல்

சிசிடிவி செயலிழப்பு, கண்டெய்னர் லாரி வந்து செல்வது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது -: கமல்ஹாசன்

சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவை சந்தித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் புகார் மனுக்களை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், வாக்கு எண்ணிக்கை மையங்களில் சிசிடிவி கேமிராக்கள் செயலிழப்பது, கண்டெய்னர்கள் மர்மமான முறையில் வந்து செல்வது, இரவு நேரங்களில் அடையாளம் தெரியாத நபர்கள் உள்ளே நுழைவது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக தெரிவித்தார்.

வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையங்களில் விதிமுறைகளை கடுமையாக கடைபிடிக்க வேண்டும் எனவும் வாக்காளர்கள், வேட்பாளர்கள், அரசியல் கட்சியினருக்கு நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமை எனவும் அவர் தெரிவித்தார்.

ஏற்கனவே 30 விழுக்காடு மக்கள் வாக்களிக்கவில்லை. இது போன்ற மர்மங்கள் தொடர்ந்தால் பொதுமக்கள் தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பிக்கையை குறைக்கும் எனவும் இது போன்ற நிகழ்வுகள் தொடர்ந்தால் ஜனநாயகத்திற்கே ஆபத்து எனவும் கூறினார்.

முதற்கட்டமாக புகார்களை வழங்கியுள்ளோம் என தெரிவித்த கமல்ஹாசன் தேர்தல் ஆணையத்தின் மீது நம்பிக்கை இல்லாத காரணத்தினாலேயே புகார்களை வழங்கியிருப்பதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், பல சந்தேகங்கள், மர்மமான விஷயங்கள் நிகழ்வதாகவும், கட்டட பணிகள் நடைப்பெறுவது சந்தேகத்திற்கு விளக்காக அமைவதாகவும் அவர் கூறினார். வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலர் கையில் நடமாடுவதாக குற்றம்சாட்டிய அவர், இரு சக்கர வாகனத்தில் வாக்குப்பதிவு இயந்திரம் கொண்டு செல்லப்பட்டது அனைவரும் அறிந்தது தான் என்றும், இது முதல் முறை அல்ல பல தேர்தலில் நடைப்பெற்றுள்ளதாக சுட்டிக்காட்டினார்.

தேர்தல் ஆணையம் பாதுகாப்பில் சரியாக செயல்படவில்லை என குற்றம்சாட்டிய கமல்ஹாசன், அதை எப்படி மேம்படுத்தலாம் என்ற பரிந்துரையை அளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button