அரசியல்

பெரியாரின் கனவு… சட்டம் இயற்றிய கலைஞர்… நிறைவேற்றிய ஸ்டாலின்..!

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டத்தின் கீழ் 58 பேரை அர்ச்சகராக நியமனம் செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பணி ஆணை வழங்கினார்.

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டம் சென்னையில் தொடங்கி வைக்கப்பட்டது. இதில், சிறப்பு விருந்தினர்களாக குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், சாந்தலிங்க மருதாசல அடிகள், குமரகுருபர சுவாமிகள் சிரவை ஆதீனம், ஆன்மீகச் சொற்பொழிவாளர் சுகி சிவம் மற்றும் அமைச்சர்கள் மா சுப்பிரமணியன், கே என் நேரு, சேகர் பாபு ஆகியோர் பங்கேற்றனர்.

விழாவில் பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், அர்ச்சகர் பயிற்சி முடித்த 29 ஒதுவார்கள் உள்பட 58 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். இவர்கள் சென்னை மயிலாப்பூர், கபாலீஸ்வரர் கோயில், திருச்சி சமயபுரம் மாரியம்மன் உள்ளிட்ட 58 கோயில் பணியார்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இதில் தமிழ்நாட்டிலேயே முதல் முறையாகச் செங்கல்பட்டு மாவட்டம் மாடம்பாக்கத்தில் உள்ள தேனுபுரீஸ்வர் கோயிலுக்குப் பெண் ஓதுவாராக சுஹாஞ்சனா நியமிக்கப்பட்டுள்ளார்.

கரூரில் பிறந்து வளர்ந்த சுஹாஞ்சனா தேவாரம், திருவாசகம் இரண்டையும் கற்றுத் தேர்ந்தவர். 27 வயதாகும் இவர், திருமணத்திற்குப் பின் சென்னை சேலையூரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். சேலையூரை அடுத்த மாடம்பாக்கத்தில் உள்ள ஸ்ரீ தேனுபுரீஸ்வரர் ஆலயத்தில் ஓதுவாராக நியமிக்கப்பட்டுள்ள இவர் அக்கோயிலில் தனது பணியைத் துவங்கினார்.

இவர் தமிழில் ‘சைவ திருமுறைகள்’ பாடும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வேகமாக வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பலரும் பகிர்ந்து பாராட்டி வருகிறார்கள். தனது பணி குறித்து சுஹாஞ்சனா மகிழ்வுடன் கூறுகையில், ‘ஓதுவார் பணி ஆணை கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இதன் மூலம் இறைவன் முன்பு பாடல்கள் பாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது. பெண்கள் விருப்பப்பட்டு ஓதுவார் பயிற்சி பெறவேண்டும். இது குழந்தைகள் பக்தி நெறியுடன் வளர தூண்டுதலாக இருக்கும். எனக்கு ஓதுவார் பணி வழங்கி பக்தி நெறியைப் பரப்பும் வாய்ப்பு அளித்த அரசுக்கு நன்றி’ என்று கூறினார்.


அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் சட்டத்தை கடந்த 2.10.70ல் அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி சட்டப்பேரவையில் நிறைவேற்றினார். எனினும் பல்வேறு சட்டப் வழக்குகள் காரணமாக இந்த சட்டத்தை அப்போது திமுகவால் நிறைவேற்ற முடியவில்லை. பெரியாரின் ஆசையாக இந்த திட்டத்தை கருணாநிதி குறிப்பிட்டார். பெரியார் உயிரோடு இருக்கும்போது இந்த சட்டத்தை நிறைவேற்ற முடியவில்லை என்றும் பெரியாரின் நெஞ்சில் தைத்த முள் என்றும் இதனை கருணாநிதி எப்போதும் குறிப்பிடுவார். தற்போது 51 ஆண்டுகள் கழித்து பெரியாரின் கனவையும் கலைஞரின் சட்டத்தை நிறைவேற்றியுள்ளார் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

திமுக தலைமையிலான அரசு பதவி ஏற்றத்தில் இருந்து இந்து அறநிலையத்துறையில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கோயில் ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்பு, தமிழில் அர்ச்சனை ஆகிய நடவடிக்கைகளுடன் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்னும் வரலாற்று சாதனையையும் திமுக சாத்தியமாக்கியுள்ளதாக பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

கார்வேந்தன்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button