கரன்சி வேட்டையில் கோவை மேயர் கல்பனா..!
கோவை மாநகரில் தனது குடும்பத்தின் அன்றாட வாழ்வாதாரத்திற்காக ஜெராக்ஸ் கடை நடத்தி வந்துள்ளார் திருமதி.கல்பனா. இதில் போதிய வருமானம் இல்லாததால் எதிர்காலத்தில் குடும்பத்தை எப்படி நடத்தப்போகிறோம் என கவலைப்பட்ட நேரத்தில்தான் அவரது திசையில் அதிர்ஷ்ட காற்று வீசத்தொடங்கியுள்ளது.
கடந்த உள்ளாட்சித் தேர்தலில் கோவை மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சராக இருக்கும் செந்தில் பாலாஜியின் தயவில் திமுகவில் கவுன்சிலர் சீட்டு வாங்கி தமிழக முதல்வர் ஸ்டாலின் அலையில் வெற்றி பெற்றுள்ளார் திருமதி. கல்பனா. கோவை மாநகராட்சிக்கு பெண் மேயர் என்பதால் மேயர் தேர்வு நடப்பதற்கு முன் நான் தான் மேயர், நீதான் மேயர் என காலமெல்லாம் கட்சிக்காக உழைத்த கழக உடன்பிறப்புகள் பலர் சண்டையிட்டுக் கொண்டிருந்த வேளையில், பொறுப்பு அமைச்சர் செந்தில்பாலாஜியின் தயவில் கோவை மாநகராட்சியின் நியமன மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் திருமதி கல்பனா.
இதனால் அதிர்ச்சியடைந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மாமன்ற உறுப்பினர்களும், கழக உடன்பிறப்புகளும் யார் இந்த கல்பனா? இவருக்கும் திமுகவுக்கும் என்ன சம்பந்தம்? கட்சியில் இதுவரை இவரை பார்த்ததே இல்லையே! என பேசத் தொடங்கினர். அப்போது கல்பனா ஒன்பதாம் வகுப்பிலேயே தேர்ச்சி பெறாதவர். தேசிய கீதம், தமிழ்த்தாய் வாழ்த்து பாடலைக் கூட சரியாக பாடத் தெரியாதவர். கட்சி அறிவித்த எந்த போராட்டத்திலும் கலந்து கொள்ளாதவர். தினசரி செய்தித்தாள்களைக் கூட வாசிக்கத் தெரியாதவர். இப்படிப்பட்டவரை எப்படி தளபதி மேயராகத் தேர்வு செய்தார் என திமுக மாமன்ற உறுப்பினர்கள் மத்தியில் கூச்சல் குழப்பம் நிலவியது.
இந்நிலையில் மேயர் பதவி தனது மகள் நிவேதாவிற்குத்தான் கட்சித்தலைமை வழங்கும் என முழுமையாக நம்பிக்கொண்டிருந்த அப்போதைய கோவை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் (பொறுப்பு) பதவி வகித்த மருதமலை சேனாதிபதி விரக்தியடைந்து புலம்பிக் கொண்டே பதவியேற்பு விழாவை புறக்கணித்து வெளியேறிச் சென்றார்.
மாமன்ற கூட்டங்களில் மாமன்ற உறுப்பினர்கள் கேட்கும் கேள்விகளுக்கு மாநகராட்சி ஆணையர் பதில் சொல்வார் என்றுதான் ஆரம்பத்தில் பேசிவந்தாராம். ஆனால் தற்போது தனது இருக்கைக்கு வரும் கோப்புகளில் கையெழுத்து போட வேண்டுமானால் எனக்கு கமிஷன் கொடுக்க வேண்டும் என டவுன்பிளானிங் அதிகாரியிடமும், மற்ற அதிகாரிகளிடமும் கூறி வருகிறாராம்.
இதுசம்பந்தமாக மாநகராட்சி அதிகாரிகள் மத்தியில் விசாரித்தபோது.. சமீபகாலமாக கோவை மாநகராட்சி அதிகாரிகள் நான் சொல்வதை சரிவர செய்வதில்லை. அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பேன் என்பதோடு, எனது அண்ணன் செந்தில்பாலாஜியிடம் சொல்லி மாநகராட்சி ஆணையரை மாற்றி விடுவேன். கே.என்.நேரு யாரு எனது நிர்வாகத்தில் தலையிடுவதற்கு, அவரையும் செந்தில் பாலாஜியிடம் சொல்லி மாற்றிவிடுவேன் என புலம்பி வருகிறாராம்.
சில தினங்களுக்கு முன் தனக்கு வேண்டிய சில மண்டலத் தலைவர்களையும் நிலைக்குழுத் தலைவர்களையும் அழைத்து தனது அறையில் ரகசிய கூட்டம் நடத்தினாராம். அந்தக் கூட்டத்தில் டவுன் பிளானிங் அதிகாரிகள் மற்றும் பிற துறைகளின் அதிகாரிகள் ஒப்பந்ததாரர்களிடம் வாங்கும் கமிஷன் தொகையை எவ்வாறு பங்கு பிரித்துக் கொள்கிறார்களோ அதேபோல் நமக்கும் கேட்போம் என ஆலோசனை செய்துள்ளாராம் மேயர்.
இந்நிலையில் நம்மை தொடர்பு கொண்டு பேசிய திமுக கவுன்சிலர் கூறுகையில், மாநகராட்சி மேயர் கல்பனா பதவிக்கு வருவதற்கு முன்பு எப்படி இருந்தார்? பதவிக்கு வந்த பிறகு பலரகங்களில் பட்டுப்புடவைகளையும், ஆபரணங்களையும் எப்படி வாங்கி குவிக்கிறார் என்பது எங்களுக்கு நன்றாகவே தெரியும். மேயர் பதவிக்கு வருவதற்கு முன்பு கால்நடையாகவே மணியக்காரன் புதூரில் வலம் வந்த திருமதி கல்பனா இன்று இன்னோவா காரில் வலம் வந்து கரன்சி வேட்டையில் இறங்கி சில மண்டல தலைவர்களை கையில் வைத்துக் கொண்டு ஆட்டம் போட்டு வருகிறார். அதோடு மாநகராட்சி அதிகாரிகளிடம் கமிஷன் தொகை தரவேண்டும் என சண்டையிடுவதோடு எங்க அண்ணன் செந்தில்பாலாஜி இருக்கும்வரை என்னை ஒன்றும் செய்ய முடியாது என மிரட்டி வருகிறார்.
தீபாவளி சமயத்தில் வர்த்தக நிறுவனங்கள், ஜவுளி நிறுவனங்களில் தனக்கு தங்க காசு மற்றும் பனாரஸ், காஞ்சிபுரம், சின்னாளப்பட்டி பட்டுப்புடவைகள் கேட்டு அடம்பிடித்துள்ளார். இதேநிலை நீடித்தால் 2024ல் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் கோவை பாராளுமன்ற தொகுதியில் 100 வார்டுகளில் திமுக தேறுவது கஷ்டம்தான் என்கிறார் திமுக கவுன்சிலர்.
கோவை மாநகராட்சியில் அதிகாரிகளுக்கு நிகராக கமிஷன் கேட்டு கரன்சி வேட்டையில் இறங்கியுள்ள நியமன மேயர் கல்பனாவின் செயல்பாடுகளை கேள்விப்படும்போது கூடிய விரைவில் மீண்டும் தனது சேவை மையத்திற்கு ஜெராக்ஸ் எடுக்கச் சென்று விடுவாரோ என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.
– இந்திரஜித்
மாநகராட்சி நகராட்சி கமிஷனர்களுக்கு கூடுதல் பொறுப்பு.!
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டு கவுன்சிலர்கள், மண்டல தலைவர்கள், நிலைகுழு மற்றும் மேயர்கள் வந்தபின் பணிகளுக்கு நிதி ஒதுக்குவது, டெண்டர் கோருவது மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டு வந்ததால், கமிஷன் கேட்டு டென்டரை நிறுத்தி வைப்பது, டெண்டர் எடுத்த பணிகளுக்கு ஒர்க் ஆர்டர் வழங்காமல் இழுத்து அடிப்பது, அரசின் உத்தரவை செயல்பாட்டுக்கு கொண்டு வராமல் மன்றத்தில் நிறுத்தி வைப்பது போன்ற செயல்பாடுகளால் கோவை உட்பட பல மாநகராட்சிகளில் அரசின் திட்டங்கள் பணிகள் முடங்கி இருந்தன. இதற்கான காரணங்களை தமிழக அரசின் உள்ளாட்சித் துறை உயர் அதிகாரிகள் ஆலோசித்தனர். நிதி கையாளும் பொறுப்புகளை இரு விதமாக பிரித்து அனுமதி வழங்கும் அதிகாரத்தை மாற்றி அமைத்து தமிழக நகராட்சிகள் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலர் ஷீவ்தாஸ் மீனா ( அரசாணை எண் 158 ) உத்தரவிட்டிருக்கிறார். இதில், மாநகராட்சி பொது நிதியில் பணிகள் செய்வதற்கு மட்டும் வார்டு கமிட்டி, நிலைகுழு மாமன்றத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. புதிய திட்டங்களுக்கு மத்திய அரசு மற்றும் மாநில அரசு ஒதுக்கும் நிதியை கையாளும் பொறுப்பை மாநகராட்சி கமிஷனர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. அதாவது, மேயர் தலைமையில் இயங்கும் மாமன்றத்தின் அதிகாரம் பறிக்கப்பட்டு கமிஷனர்களுக்கு கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டிருக்கிறது.