நாடாளுமன்றத்தில் ஸ்டாலின்…
கலக்கத்தில் பாஜக..!
திமுக அலுவலகமான அண்ணா – கலைஞர் அறிவாலயத்தை திறந்து வைப்பதற்காக டெல்லி சென்றார். திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நிதின்கட்கரி உள்ளிட்ட பல தலைவர்களை சந்தித்தார்.
டெல்லிக்கு புறப்படும் போதே நான் மாநில உரிமைகளை வலியுறுத்துவதற்காகச் செல்கிறேன் என்று பேசிவிட்டு கிளம்பினார். அதேபோல் பிரதமர் மோடியை சந்தித்த போது நீட் தேர்வு விவகாரத்தை வலியுறுத்தி பேசியிருக்கிறார். நீட் தேர்வு விவகாரம் குறித்து ஆளுநர் விரைந்து முடிவெடுக்க வேண்டும். ஏற்கனவே பல மாதங்கள் காத்திருக்கிறோம். இன்னும் எவ்வளவு நாள் காத்திருப்பது என்கிற கோபத்தை முதல்வர் ஸ்டாலின் மோடியிடம் வெளிப்படுத்தியிருப்பதாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் திமுக மாநிலங்களவை உறுப்பினர் வில்சன் ஒரு தனிநபர் மசோதாவை தாக்கல் செய்தார். ஆளுநரின் முடிவெடுக்கும் அதிகார காலவரையரையை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று சட்டத்திருத்தம் கோரியிருக்கிறார். அரசியல் சாசனத்தில் சட்டப்பிரிவு 200ல் ஆளுநர் மாநில அமைச்சரவை அளிக்கக் கூடிய ஒரு தீர்மானத்தின் மீது முடிவெடுக்கும் அதிகாரத்தைப் பற்றி கூறுகிறது. அந்த அதிகாரம் ஆளுநருக்கு கால வரையற்ற ஒரு தன்மையை வழங்கியிருக்கிறது. எப்போது வேண்டுமானாலும் ஆளுநர் முடிவெடுக்கலாம் என்கிற ஒரு நிலையை ஏற்படுத்தியிருக்கிறது. அதைப் பயன்படுத்திக் கொண்டு கால வரையற்று அதை கிடப்பில் போட்டு வைத்திருக்கிறார் ஆளுநர். இது மாநிலங்களின் உரிமைகளை நசுக்குவதாக மாறியிருக்கிறது என்று குறிப்பிட்டு அந்தச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரவேண்டும் என்று திமுக எம்பி வில்சன் தனிநபர் மசோதாவை தாக்கல் செய்தார்.
தனிநபர் மசோதா தாக்கல் 1970க்குப் பிறகு பெரிதாகக் கண்டுகொள்ளப்படுவதில்லை என்றாலும் கூட அது கவனிக்கப் பெறுவதாக தேசிய அளவில் மாறுகிறது. குறிப்பாக வில்சன் கொண்டு வந்திருக்கக் கூடிய இந்த தீர்மானம் பல மாநிலங்களை தூண்டி விடுவதாக அமைந்திருக்கிறது. நாடாளுமன்றத்தில் தனிநபர் மசோதா சட்டமாக மாறுகிறதா இல்லையா என்பதைவிட நாடாளுமன்ற உறுப்பினர்களின் மனதில் இந்த விஷயத்தை விதைத்திருக்கிறார். தமிழ்நாட்டிலிருந்து வந்த ஒரு பிரதிநிதி ஆளுநரின் அதிகார வரம்பை கேள்வி எழுப்பியிருக்கிறார் என்பது வரலாற்றுப் பதிவாக மாறுகிறது.
இதுபோல் கடந்த ஆண்டு சிம்லாவில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தலைவர்கள் மாநாட்டில் தமிழ்நாடு சட்டப் பேரவைத் தலைவர் இதே கருத்தை முன்மொழிந்திருந்தார். ஆளுநர் முடிவெடுக்கும் அதிகாரம் காலவரையறைக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும் என்று அவர் பேசியிருந்தார். தமிழ்நாட்டு முதல்வரும் அதை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இப்போது நாடாளுமன்றத்தில் தனிநபர் மசோதா தாக்கல் செய்திருக்கிறார். அப்போது ஜனநாயக ரீதியாக எங்கெல்லாம் இந்த கருத்தை பதிவு செய்ய முடியுமோ அந்த எல்லா இடங்களிலும் பதிவு செய்தாகி விட்டது.
இப்போது இதனை முன்னெடுத்திருக்கும் தமிழ்நாடு இதனை பிரதிநிதித்துவப்படுத்துகிறது எனும்போது அனைத்து மாநிலங்களும் இதைப்பற்றி யோசிக்கத் தொடங்குவார்கள். கேரளா, மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், தெலுங்கானா, ஆந்திரா என்று ஐந்து மாநிலங்கள் இப்போது ஆளுநரின் அதிகாரத்தை கேள்வி எழுப்பக் கூடிய மாநிலங்களாக மாநியிருக்கிறது. இவர்கள் ஒருங்கிணைந்து இந்த விஷயத்தைச் செய்யத் துவங்கிவிட்டால் தேசிய அளவில் அதுபெரிய நெருக்கடியை மத்திய அரசுக்கு ஏற்படுத்தும். இதுநேரடியாக ஆளுநர்களுக்கு விடப்படும் எச்சரிக்கையாகத்தான் பார்க்கவேண்டும் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
ஆளுநர் தனியாக ஆவர்த்தனம் செய்வதற்கு ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம் என்று திமுக பிரகடனம் செய்திருக்கிறது. இதனை மற்ற மாநிலங்கள் உடனே கையிலெடுக்க வேண்டும். அப்போது தான் உடனடியாக தீர்வு கிடைக்கும் என்கிறார்கள். இந்த நேரத்தில் ஒரு விஷயம் தேசிய ஊடகங்களின் கவனத்தைப் பெற்றது. நாடாளுமன்றத்தின் மைய வளாகத்திற்கு முதல்வர் ஸ்டாலின் சென்றிருந்தார். அங்கே பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த எம்பிக்களை நேரில் சந்தித்து பேசியிருக்கிறார். முதல்வரைப் பார்த்த எம்பிக்கள் விரும்பி வந்து அவருடன் போட்டோ எடுத்துள்ளார்கள். மற்ற மாநிலத்தின் முதல்வர்கள் டெல்லி வரும்போது தனியாக அவர்களது இல்லத்தில் தங்கி கட்சி அலுவலகம், பிரதமர் அலுவலகம் போன்ற பணிகள் முடிந்தவுடன் ஊருக்குச் சென்று விடுவார்கள்.
ஆனால் நாடாளுமன்ற மைய வளாகத்திற்குச் சென்று அத்தனை எம்பிக்களையம் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவது என்பது காங்கிரஸ் கட்சி செய்யக் கூடியது. தேசிய அளவில் பாரதிய ஜனதா கட்சி செய்யக் கூடியது. அதனை திமுகவும் இப்போது செய்திருக்கிறது. இது டெல்லி வட்டாரத்தை கலக்கத்தில் ஆழ்த்தியிருப்பதாக பார்க்கப்படுகிறது. ஸ்டாலின் பற்றவைத்த நீட் தேர்வு நெருப்பு, வில்சனின் தனிநபர் மசோதா என்ன மாதிரியான அதிர்வுகளை நாடாளுமன்றத்தில் இனி ஏற்படுத்தப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்