அரசியல்

மாநில தேர்தல் ஆணையமா? மாநில அவகாச ஆணையமா? : மு.க.ஸ்டாலின் கண்டனம்

தமிழகத்தில் கடந்த 2016-ம் ஆண்டே உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவிக்காலம் முடிவுற்ற நிலையில், பல்வேறு காரணங்களால் இதுவரை உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமல் உள்ளது. இதனால் உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். இவர்களின் பதவிக்காலம் தற்போது வரை 5 முறை நீட்டிக்கப்பட்டுள்ளது. உள்ளாட்சித் தேர்தல் நடத்த தாமதமாவது குறித்து எதிர்க்கட்சிகள், ஆளும் தரப்பின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.
இந்நிலையில், உள்ளாட்சித் தேர்தலை நடத்துவது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது உள்ளாட்சித் தேர்தல் நடத்த அக்டோபர் 31ம் தேதி வரை அவகாசம் அளிக்க வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையம் சார்பில் அவகாசம் கோரப்பட்டுள்ளது.
சுமார் 3 ஆண்டுகளாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாத நிலையில், தற்போது அவகாசம் கோரப்பட்டுள்ளதால் அடுத்து வரும் 3 மாதங்களுக்கு உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாது என்பது உறுதியாகி உள்ளது.

உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதற்கு மாநிலத் தேர்தல் ஆணையம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் அனுமதி கோரப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், ‘உள்ளாட்சித் தேர்தலை நடத்த அக்டோபர் 31-ம் தேதி வரை மேலும் கால அவகாசம் வேண்டும்” என்று தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையத்தின் சார்பில் மீண்டும் உச்சநீதிமன்றத்தில் கேட்டிருப்பதற்கு தி.மு.க சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதை மாநிலத் தேர்தல் ஆணையம் என்றழைப்பதை விட, மாநில அவகாச ஆணையம் என்றே அழைக்கலாம் போலிருக்கிறது. அவகாசம் கேட்டுக் கொண்டே இருப்பதற்கு ஓர் ஆணையம் தேவைதானா, ஒன்றும் செய்யாமல் மக்கள் வரிப் பணத்தைச் செலவிட்டுக் கொண்டிருப்பதற்கு ஓர் ஆணையமா என்ற கேள்விகள் எழுகின்றன.

அக்டோபர் 2016-ல் நடத்தி முடிக்க வேண்டிய உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் உயர் நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் மாநில அரசும், மாநிலத் தேர்தல் ஆணையமும் மாறி மாறி, கால அவகாசம் கேட்டுக் கொண்டிருப்பது பஞ்சாயத்து ராஜ் சட்டத்தையே கேலிக்குரியதாக்கும் கேடு கெட்ட செயல் என்று தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

“உள்ளாட்சி அமைப்பின் பதவிக்காலம் ஐந்து வருடங்கள்” என்றும் “ உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக் காலம் முடிவதற்கு முன்பே தேர்தலை நடத்தி முடித்துவிட வேண்டும்” என்றும் அரசியல் சட்டப்பிரிவு 243-ணி மிகத் தெளிவாகக் கூறுகிறது. ஆனால் வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் ஒவ்வொரு காரணங்களாகக் கண்டுபிடித்து- மாநிலத் தேர்தல் ஆணையமும் சொல்கிறது. அ.தி.மு.க அரசும் ஆமோதிக்கிறது என்றால்- இருவரும் கூட்டணி அமைத்து உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல்- தொடர்ந்து அரசியல் சட்டத்தை மீறுகிறார்கள் என்பது தெளிவாகிறது.
மாநிலத் தேர்தல் ஆணையமும், அ.தி.மு.க அரசும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் போல் செயல்பட்டு, பஞ்சாயத்து ராஜ் அமைப்பை சீர்குலைப்பதோடு- அரசியல் சட்டத்தையும் அப்பட்டமாக மீறுகின்றன. சுதந்திரமான அமைப்பு என உருவாக்கப்பட்டுள்ள தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் இப்படி அரசின் அடிவருடியாக நின்று- உள்ளாட்சித்துறை அமைச்சரும், முதலமைச்சரும் கூறும் காரணங்களின் அடிப்படையில் உச்ச நீதிமன்றத்தில் கால அவகாசம் கேட்பது- தேர்தல் ஆணையத்தின் தன்னாட்சி அதிகாரத்தையே கிண்டலும் கேலியும் செய்யும் போக்கு என்பதில் சந்தேகமில்லை.
மாநிலத் தேர்தல் ஆணையம் ஒன்று, இப்படி உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடந்து விடாமல் முனைப்புடன் செயல்படுவது வரலாற்றுப் பிழை. அந்த அமைப்பை, தான் ஆட்டுவித்த பொம்மை போல் ஆட வைக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் நடவடிக்கை அரசியல் சட்டத்தையே தோற்கடிக்கும், சட்டவிரோத நடவடிக்கை.
உள்ளாட்சி அமைப்புகளை காலியாகவே வைத்து- உள்ளாட்சி நிர்வாகத்தை ஏதோ தன் பிரைவேட் லிமிட்டெட் கம்பெனி நிர்வாகம் போல் நடத்தி – முடிந்தவரை டெண்டர் ஊழலில் கொடிகட்டிப் பறக்கலாம் என்ற உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணியின் ஆசைக்கு முதலமைச்சர் பழனிச்சாமி ஆர்வத்துடன் துணை போவது முதலமைச்சர் பதவியின் கண்ணியத்திற்கே வேட்டு வைக்கிறது.

எந்த நேரத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தினாலும் “தோல்வி- தோல்வி” என்பது உறுதி என்பதால்- அ.தி.மு.க ஆட்சி இப்படி அலங்கோலமான காரணங்களைக் கூறி, உள்ளாட்சித் தேர்தலை தள்ளி வைத்துக் கொண்டிருக்கிறது. “33 மாதங்களாக உள்ளாட்சித் தேர்தலை நடத்தாதது ஒன்றே அரசியல் சட்டம் தமிழகத்தில் செயல்பாடாமல் இருப்பதற்கு போதிய காரணம்” என்பதை மாநில தேர்தல் ஆணையமோ அல்லது எடப்பாடி பழனிச்சாமியோ உணர்ந்ததாகத் தெரியவில்லை.

ஆகவே உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் மீண்டும் கால அவகாசம் கேட்கும் மாநிலத் தேர்தல் ஆணையரிடம், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உடனடியாக விளக்கம் கேட்க வேண்டும். அரசியல் சட்டப் பிரிவின் அடிப்படையில் உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தலை நடத்துவதற்கு மாநிலத் தேர்தல் ஆணையத்திற்கு உரிய கட்டளையைப் பிறப்பிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button