அரசியல்

அப்செட்டில் அதிமுக… ஆலோசனையில் திமுக..!

2021-2026 ஆம் ஆண்டுக்கான சட்டமன்றத் தேர்தல் வாக்குப் பதிவு நிறைவடைந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் அந்தந்த மாவட்டங்களுக்கு பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் திமுக, அதிமுக கூட்டணிக் கட்சியினர் பல்வேறு ஆலோசனைகளையம், விவாதங்களையும் தனித்தனியாக நடத்தி வருகின்றனர்.

அதிமுக தரப்பில் முதல்வர் பழனிச்சாமி, அமைச்சர்கள், நிர்வாகிகள், சில வேட்பாளர்களிடம் கள நிலவரம் பற்றி தொடர்ந்து பேசி வருகிறார். பெரும்பாலான அமைச்சர்கள் நாம் தான் ஆட்சி அமைக்கப் போகிறோம் என்று நம்பிக்கையாக பேசி இருக்கிறார்கள்.அவர்களின் கருத்தைக் கேட்டுக் கொண்ட பழனிச்சாமி எந்தவித பதிலும் சொல்லாமல் அமைதியாகத்தான் இருந்து வருகிறாராம். யார் யார் கட்சிக்கு உள்ளடி வேலை பார்த்தார்கள் யார் யார் உண்மையாக உழைத்தார்கள் என்ற பட்டியலையும் வாங்கி வைத்திருக்கிறாராம். ஆனால் பெரும்பாலான தொகுதிகளில் முக்கிய நிர்வாகிகளே இந்த தேர்தலில் அதிமுகவின் வெற்றிக்கு உழைக்காமல் ஒதுங்கி இருந்திருக்கிறார்கள். தேர்தல் முடிவகள் பற்றி பலரும் பலவிதமான சர்வேக்களை கூறிவரும் நிலையில் அதிமுக 131 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று ஒரு பட்டியலையும் எடப்பாடியிடம் கொடுத்திருக்கிறார்கள். தமிழ்நாடு உளவுத்துறையும் இதே பட்டியலை பழனிச்சாமியிடம் கொடுத்து இருக்கிறார்கள். ஆனால் எதற்கும் எந்தவித பதிலும் சொல்லாமல் அப்படியா என்று மட்டும் கூறிவிட்டு அமைதியாகி விடுகிறாராம் பழனிச்சாமி.

முதல்வர் பழனிச்சாமியைப் பொறுத்தவரை களநிலவரம் நன்கு அறிந்தவர். தேர்தல் முடிவுகள் என்ன வரும் என்பது அவருக்கு நன்கு தெரியும். அதனால் தான் யாருக்கும் எந்த பதிலும் கூறாமல் அமைதியாக ஆழ்ந்த யோசனையல் இருந்து வருவதாக தெரியவருகிறது.

பாஜக தரப்பில் விசாரித்த போது முக்கிய நிர்வாகி ஒருவர் கூறும்போது அதிமுகவில் பழனிச்சாமி, பன்னீர் செல்வம் உள்ளிட்ட சில அமைச்சர்கள் மட்டும்தான் பாஜகவோடு இணக்கமான போக்கை கடைபிடித்தார்கள். ஆனால் அதிமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் பாஜகவினர்களோடு நெருங்கி தேர்தல் வேலை பார்க்கவில்லை. அவர்கள் எங்களை எதிரியாகத் தான் பார்த்தார்கள். திமுக ஆட்சிக்கு வரக்கூடாது என்று பாஜகவுக்கு இருந்த வேகம் களத்தில் அதிமுகவினருக்கு இல்லை. திமுகதான் ஆட்சி அமைக்கும். ஆனால் பாஜக எத்தனை இடங்களை வெல்லப் போகிறோம் என்பதுதான் எங்களது எதிர்பார்ப்பாக இருக்கிறது என்றார்.

பாமக தரப்பினர் 18 இடங்களில் வெற்றி பெறுவதாக ராமதாஸ் முதல்வர் பழனிச்சாமியிடம் தொலைபேசியில் பேசியிருக்கிறார் முதல்வர் அப்படியா என்று கேட்டுக் கொண்டதோடு எந்தப் பதிலும் கூறவில்லையாம். பாமக வேட்பாளர்களிடம் ஆலோசனை நடத்தியதை வைத்துக் கொண்டு அதிக இடங்களில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையில் இருக்கிறாராம் ராமதாஸ். ஆனால் களநிலவரம் பற்றி நமது செய்தியாளர்கள் விசாரித்ததில் பாமக நான்கு இடங்களில் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாகவும் இந்த தேர்தலில் பாமக மிகப்பெரிய சரிவை சந்திக்கும் என்றே தெரியவருகிறது.

திமுக தரப்பினர் உற்சாகத்தில் இருக்கிறார்கள். திமுக தலைவர் ஸ்டாலின் 180 இடங்களுக்கு மேல் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்.

ஐபேக் நிறுவனம் தேர்தலுக்கு பிறகு எடுத்த கருத்துக் கணிப்பில் அதிமுக கூட்டணி 50 இடங்களை தாண்டாது என்று கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட்டு இருக்கிறார்கள். திமுகவினர் நாம் தான் ஆட்சி அமைக்கப்போகிறோம். ஆனால் திமுக வெற்றி பெறும் தொகுதிகள் 180 இடங்களா? அல்லது 200க்கும் மேற்பட்ட இடங்களா? என்ற ஆலோசனையில் இருக்கிறார்கள். இதில் அமைச்சரவையில் யார் யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற பேச்சும் பேசப்படுகிறது. திமுகதான் ஆட்சி அமைக்கப் போகிறது என்ற உறுதியான தகவலை தெரிந்து கொண்ட ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் தங்களுக்கான முக்கிய பொறுப்புகளை பெறுவதற்காக திமுக தலைமையிடம் நெருங்க ஆரம்பித்துள்ளனர். ஜெயங்கொண்டம் திமுக வேட்பாளர், சென்னையில் எழும்பூர் தொகுதி வேட்பாளர் பரந்தாமன், கரூர் திமுக மாவட்டப் பொறுப்பாளர் செந்தில்பாலாஜி, போடி திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் போன்றோர்களுக்கு அமைச்சர் பொறுப்பு வழங்க இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் மூலம் தெரியவருகிறது.

தேர்தல் முடிவுகள் வெளிவர இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் ஆட்சி அமைக்கும் பணிகளில் தீவிர ஆலோசனையில் திமுக தலைவர் ஸ்டாலினும் களநிலவரங்கள் அனைத்தையும் கேட்டுக் கொண்டு, தேர்தல் முடிவுகளைப் பற்றி எதுவும் பேசாமல் அமைதியாக ஆழ்ந்த யோசனையில் முதல்வர் பழனிச்சாமியும இருந்து வருகிறார்கள். எது எப்படியோ மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு. அது வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியானால் தான் தெரியவரும். காத்திருப்போம்.

  • சூரியன்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button