தேர்தலில் ஜெயிச்சு ஆட்சியை பிடிக்கிறது தான் இலக்கு..! : தினகரன் போடும் புதிய கணக்கு..!
அதிமுகவை கைப்பற்றும் நோக்கத்தோடு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்கிற இயக்கத்தை டி.டி.வி தினகரன் தொடங்கி நடத்தி வந்தார். பின்னர் அதை கட்சியாக பதிவு செய்து நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல்களில் தனித்து போட்டியிட்ட நிலையில் அக்கட்சி படுதோல்வியை சந்தித்திருந்தது. இதனால் கட்சிக்குள் சலசலப்பு நிலவி முக்கிய நிர்வாகிகள் பலர் வெளியேறினர்.
இந்த நிலையில் கோவை மாவட்டம் கணியூரில் அமமுகவின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு தொண்டர்களிடையே தினகரன் உரையாற்றினார். அப்போது நாடாளுமன்ற தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்கு முழு பொறுப்பையும் தானே ஏற்பதாக தெரிவித்தார். இந்த தோல்விகளால் சோர்ந்து விட போவதில்லை என்றும் இன்னும் 5 தேர்தல்களை சந்திக்கும் வலிமை அமமுகவிற்கு இருப்பதாகவும் தெரிவித்தார்.
சுயநலம் காரணமாக கட்சியில் இருந்து சிலர் வெளியேறி வருவதாக குறிப்பிட்ட தினகரன், சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிப்பதே இலக்கு என்று தெரிவித்தார். கட்சியில் இருந்து முக்கிய நிர்வாகிகள் வெளியேறி வரும் நிலையில் மாநிலம் முழுவதும் புதிய நிர்வாகிகளை தினகரன் நியமித்து வருவது குறிப்பிடத்தக்கது.