திருப்பூர் மில் தொழிலாளி மகன் சர்வதேச கபடி போட்டியில் தங்கம் வென்று சாதனை..!
திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த மில் தொழிலாளியின் மகன் சர்வதேச அளவில் நடைபெற்ற கபடி போட்டியில் திறமையை வெளிப்படுத்தி தங்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த குப்புசாமிநாயுடுபுரத்தை சேர்ந்த மில் தொழிலாளி சுப்பிரமணியத்தின் ஒரே மகன் சரத். கோவை என்.ஜி.பி. கல்லூரியில் படித்துவரும் சரத் சிறு வயது முதலே கபடி விளையாட்டில் அதிக ஆர்வம் கொண்டு பயிற்சி பெற்றுவந்துள்ளார்.
இந்நிலையில் மாநில மற்றும் இந்திய அளவில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றிப்பெற்ற சரத் கடந்த 17 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை நேப்பாள் நாட்டின் இந்தோ நேப்பாள் சர்வதேச கபடி போட்டியில் இந்தியா சார்பில் கலந்துகொண்டு தங்கம் வென்றுள்ளார்.
மேலும் தாய்லாந்து நாட்டில் நடைபெற உள்ள தெற்காசிய கபடி போட்டியில் கலந்துகொள்ள தேர்வாகியுள்ளதாக சரத் தெரிவித்துள்ளார். இதனிடையே தனது வெற்றி குறித்து மகிழ்ச்சி தெரிவித்த சரத், இது வரை பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு பதக்கங்களை வென்றுள்ளதாகவும், போட்டிகளில் கலந்துகொள்ள அதிக செலவாகிறது எனவும், தனது தந்தை மில் தொழிலாளியாக வேலைபார்த்துவருவதாகவும், தான் பங்கேற்க்கும் போட்டிகளுக்கு தனது தந்தை செலவு செய்து வருவதாக தெரிவித்தார்.
எதிர்காலத்தில் சிறப்பான முறையில் விளையாடி நாட்டிற்கு பெருமை சேர்ப்பேன் என உறுதியுடன் கூறினார். மேலும் அக்னிபத் திட்டத்தின் கீழ் ராணுவத்தில் பணியாற்ற தேர்வு எழுதியுள்ளதாகவும் சரத் தெரிவித்தார்.
– நமது நிருபர்