அதிமுகவில் போட்டியிட விருப்பமனு வழங்கிய பத்திரிகையாளர்…
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் (2021) நடைபெற உள்ள நிலையில், தமிழகத்தில் அதிக வாக்கு வங்கியை வைத்துள்ள திமுக, அதிமுக கட்சிகள் தங்கள் கட்சிக்காரர்களிடம் தேர்தல் போட்டியிட விரும்புவர்களிடம் விருப்ப மனுக்களை பெற்று வருகிறது. ஏற்கனவே சட்டமன்ற உறுப்பினராக உள்ளவர்களும், புதியவர்களும் ஏராளமானோர் தங்களது விருப்ப மனுக்களை தங்களது கட்சியின் தலைமை அலுவலகங்களில் பூர்த்தி செய்து கொடுத்து வருகின்றனர்.
அரசியல் கட்சியினர்தான் தேர்தலில் போட்டியிட வேண்டி தங்கள் விருப்ப மனுக்களை வழக்கமாக தங்கள் தலைமையிடம் கொடுப்பார்கள். ஆனால் பத்திரிகையாளர் ஒருவர் அதிமுக தலைமையகத்தில் விருப்ப மனு கொடுத்தது பரபரப்பாக பேசப்பட்டது.
இதுகுறித்து விசாரிக்கையில்..
எம்ஜிஆர் அதிமுகவை ஆரம்பித்த காலத்தில் அவரது கொள்கைகளை கிராமிய கூத்துகள் மூலம் கிராமங்கள் தோறும் கொண்டு சேர்த்தவர். கிராமிய கூத்து கலைஞர் தாழைமுத்து. அவரது மகன் பாக்கியராஜூம் அரசின் நலத்திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் முக்கியப் பங்காற்றும் பத்திரிகை துறையில் பணியாற்றி வருகிறார். வார பத்திரிகைகளான தமிழக அரசியல், ஜூனியர் விகடன் பத்திரிகைகளில் கடந்த 22 ஆண்டுகளாக செய்தியாளராகவும், துணை ஆசிரியராகவும் சிறப்பாக பணியாற்றி வருவதோடு அவர் தற்போது வசித்து வரும் திருப்பரங்குன்றம் பகுதிகளில் தற்போதைய ஆளும் கட்சியின் மக்கள் நலத்திட்டங்களை ஏழை, எளியோரிடம் கொண்டு சேர்க்கும் பணியை சிறப்பாக செய்து வருகிறார்.
அரசியல்வாதிகளை விட மக்களிடம் நேரடி தொடர்பில் இருப்பவர்கள் பத்திரிகையாளர்கள். மக்களின் அடிப்படைத் தேவைகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை பாகுபாடு பார்க்காமல் அரசிடமும், அதிகாரிகளிடமும் கொண்டு சேர்ப்பது பத்திரிகைகளே. இந்த வகையில் பாக்கியராஜூம் பொதுமக்களின் தேவைகளையும், குறைகளையும் நிவர்த்தி செய்யும்விதமாக ஏராளமான மனுக்களை அரசின் கவனத்திற்கு கொண்டு சேர்த்திருக்கிறார் என்கிறார்கள்.
இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை (தனி) சட்டமன்ற தொகுதியில் வருகிற சட்டமன்றத் தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிட வேண்டி சிவகங்கை அதிமுக மாவட்டச் செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான செந்தில் நாதனை நேரில் சந்தித்து ஆசிபெற்று தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுவை பூர்த்தி செய்து அதிமுக தலைமைக் கழகத்தில் வழங்கினார்.
பத்திரிகையாளராக இருக்கும்போது பாகுபாடு பார்க்காமல் அனைத்து மக்களுக்குமான நபராக பெயரெடுத்த பாக்கியராஜ் சாமானியர்களின் குரல் சட்டமன்றத்தில் ஒலிக்க தற்போது அதிமுக சார்பில் போட்டியிட விருப்பமனு கொடுத்திருக்கிறார். இவருக்கு அதிமுக சார்பில் வாய்ப்பு வழங்கப்பட்டாலும், வெற்றி பெற்றதும் கட்சிப் பாகுபாடு பார்க்காமல் இப்பகுதி மக்களின் நீண்டநாள் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு பாடுபட வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் விருப்பமாக உள்ளது.
பரமக்குடி தனி சட்டமன்றத் தொகுதிக்கு அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் சுந்தர்ராஜன், கடந்த இடைத்தேர்தலில் வென்று தற்போது எம்எல்ஏவாக இருக்கும் சதன்பிரபாகர், நயினார் கோயில் ஒன்றியம் வாணியவல்லம் ஊராட்சி மன்ற தலைவர் நாகநாதன், எம்ஜிஆர் மன்ற பரமக்குடி ஒன்றியச் செயலாளர் பாலசுப்பிரமணியன், பார்த்திபனூர் நகரச் செயலாளர் வினோத் ஆகியோரும் திமுக சார்பில் சம்பத்குமார், முன்னாள் மாவட்டப் பதிவாளர் பாலு ஆகியோரும் தேர்தலில் போட்டியிட விருப்ப மனுத் தாக்கல் செய்துள்ளனர். அமமுக சார்பில் ஏற்கனவே 2016 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் வெற்றி பெற்று தகுதி நீக்கம் செய்யப்பட்ட டாக்டர் முத்தையாவிற்கு இந்த முறையும் வாய்ப்பு வழங்கப்பட இருப்பதாகவே தெரிகிறது.
பரமக்குடி சட்டமன்றத் தொகுதியைப் பொறுத்தவரை இரண்டு கட்சிகளிலும் வேட்பாளர் தேர்வு இறுதி செய்யப்பட்ட பிறகே வெற்றி தோல்வியை கணிக்க முடியும். தற்போதைய களநிலவரப்படி அமமுகவில் முத்தையாவை தவிர்த்து புதிய வேட்பாளர் ஒருவரை அமமுக தலைமை நிறுத்தினால் போட்டி கடுமையாக இருக்கும் என்கிறார்கள். சசிகலாவின் வருகையால் அதிமுக, அமமுகவிற்கு இடையே இந்த முறை கடுமையான போட்டி நிலவும். இவர்கள் இருவரும் அதிமுகவின் வாக்குகளை பிரித்தால் திமுக வெற்றி வாய்ப்பை பெறவும் வாய்ப்பு இருப்பதாகவே தெரிகிறது.
– வெ.சங்கர்