அரசியல்

மற்றொரு அனிதாவை இழக்க காங்கிரஸ் விரும்பவில்லை: ராகுல் காந்தி

காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தமிழகத்தில் கிருஷ்ணகிரி, சேலம், தேனி, மதுரை ஆகிய நான்கு இடங்களில் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார்.
கிருஷ்ணகிரி பிரசாரக் கூட்டத்தில் அவர் பேசுகையில், இந்தியா என்பது பல்வேறு கலாசாரங்களை பின்பற்றும் மக்களும் ஒன்றாக வாழக்கூடிய நாடு. தமிழர்களின் உரிமைக் குரல் நாடு முழுமைக்கும் ஒலிக்கப்பட வேண்டும்.
நரேந்திர மோடி அவர் நினைப்பதை அனைவரும் பின்பற்றவேண்டும் என்று நினைக்கிறார். அதன் அடிப்படையில் தான் அதிமுக அரசை மோடி முழுமையாக கட்டுப்பாட்டில் வைத்துள்ளார். இதனை மாற்ற வேண்டும் என்றால் அதனை தமிழக மக்கள் செய்து முடிப்பார்கள்.
அனில் அம்பானி, நிரவ் மோடி, அதானி உள்ளிட்ட 15 நபர்களை கையில் வைத்துக் கொண்டு மோடி கடந்த 5 ஆண்டுகளாக ஆட்சி செய்துகொண்டு இருக்கிறார். ஏழைகளுக்கும், பாட்டாளி மக்களுக்கும், உழைக்கும் மக்களுக்கும் செல்ல வேண்டிய பணம் அவர்களுக்கு செல்லவில்லை.
3.25 லட்சம் கோடியை 15 நபர்களுக்கு வழங்கியுள்ளார் பிரதமர் மோடி. தமிழக இளைஞர்களுக்கு மோடி பிரதமராக இருக்கும் வரை எங்கும் வேலை வாய்ப்பு கிடைக்க வாய்ப்பில்லை. பணமதிப்பிழப்பு என்ற பெயரில் பிரதமர் மோடி உங்கள் பணத்தை எடுத்துச் சென்றுள்ளார்.
திருப்பூர் தொழில் நகரம், ஜிஎஸ்டியால் அழிக்கப்பட்டுள்ளது. லட்சக்கணக்கான தமிழர்கள் ஜிஎஸ்டியால் வேலை இழந்துள்ளனர். பிரதமர் மோடி ஒவ்வொருவர் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் போடுவேன் என்று உத்தரவாதம் அளித்தார்.
நாட்டின் பொருளாதாரம் உயர வேண்டும் என்று நான் நினைக்கிறேன். அதன்படி நாட்டில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு எவ்வளவு தொகை வழங்கினால் அவர்களது வாழ்வாதாரம் உயரும் என்று நான் சிந்தித்து பார்த்தேன். அதன் அடிப்படையில் தான் ரூ.72 ஆயிரம் வழங்க திட்டமிடப்பட்டது.
நாட்டில் உள்ள வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள 20 சதவிகித மக்கள் கண்டுபிடிக்கப்பட்டு ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம் வீதம் 5 ஆண்டுகளுக்கு வழங்கப்படும். இதன் மூலம் நாட்டில் உள்ள ஏழை மக்கள் பயன்பெறுவர். இந்த திட்டத்தை பெற நீங்கள் எந்த இனத்தைச் சேர்ந்தவர். எந்த மொழி பேசுகிறவர் என்று ஆராயப்படாது. ஏழைகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக இந்த பணம் உங்கள் வங்கிகளுக்கு வந்து சேரும்.
இதன் மூலம் நாட்டில் நல்ல பொருளாதார நிலை ஏற்படும். நாட்டில் வேலை வாய்ப்பு பெறும். அதன் அடிப்படையில் காஞ்சிபுரம், திருப்பூர் உள்ளிட்ட தொழில் நகரங்கள் புத்துயிர்பெறும். அதன் மூலம் லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெறுவார்கள்.
அதிமுக அரசு கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை கண்டுகொள்ளவில்லை. உள்ளாட்சித் துறையில் காலியாக உள்ள 10 லட்சம் பணியிடங்களை நாங்கள் நிரப்புவோம்.
பாஜக ஒரே கலாசாரம், ஒரே பண்பாடு தான் இருக்கவேண்டும் என்று விரும்புகின்றது. ஒரே கட்சி தான் இந்த நாட்டை ஆளவேண்டும் என்று ஆசைப்படுகிறது. மற்றோரு திசையில் காங்கிரசும், திமுகவும் இந்தியாவில் பல்வேறு கலாசாரம், பல்வேறு மொழிகள் இருப்பதாக கூறுகிறோம்.
தமிழ்நாடு, நாக்பூரில் இருந்து இயக்கப்பட வேண்டும் என்று பாஜக விரும்புகிறது. மேலும் தமிழர்களின் தலையெழுத்தை பிரதமர்அலுவலகம், பிரதமர் அலுவலகத்தில் பணியாற்றும் நபர்கள் தான் நியமிக்க வேண்டும் என்று பாஜக நினைக்கிறது.
நாங்கள் தமிழ்நாடு தமிழர்களால் ஆளப்பட வேண்டும் என்று விரும்புகிறோம். அதே போன்று தமிழர்களின் குரல் இந்தியா முழுவதும் ஒலிக்க வேண்டும் என்று நினைக்கிறோம். அதனால் தான் நாங்கள் இந்த கூட்டணியில் இணைந்து பணியாற்றி வருகிறோம்.
இறுதி காலத்தில் கருணாநிதிக்கு உரிய மரியாதை வழங்கப்படவில்லை என்று ஸ்டாலின் வருந்துகிறார். அவர்கள் கருணாநிதியை மட்டும் அவமதிக்கவில்லை. இது ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் இழைக்கப்பட்ட அவமதிப்பாகவே கருதுகிறேன்.
எங்களது தேர்தல் அறிக்கை குறித்து ஸ்டாலின் இங்கு குறிப்பிட்டார். குறிப்பாக தமிழகத்திற்கு கூடுதல் அதிகாரம் வழங்குவது குறித்து பேசினார். பாஜக தேர்தல் அறிக்கை போன்று எங்கள் அறிக்கை இருண்ட அறையில் இருந்து தயாரிக்கப்பட்டது கிடையாது.
எங்களது தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்ட போது மாணவி அனிதா நீட் தேர்வால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த விவகாரத்தை குறிப்பிட்டார்கள். எங்கள் அறிக்கையில் நீட் தேர்வு தேவையா, தேவை இல்லையா என்பதை மாநிலங்கள் தான் உறுதி செய்ய வேண்டும் என்று நாங்கள் குறிப்பிட்டுள்ளோம்.
தமிழகத்தில் மற்றொரு அனிதாவுக்கு இதுபோன்ற நிலை ஏற்படக் கூடாது என்று நாங்கள் கருதுகிறோம். நாங்கள் கருத்து பரிமாற்றத்தை விரும்புகிறோம். மக்களின் குரலுக்கு மதிப்பு அளிக்கிறோம். ஆனால், பிரதமர் மோடியோ, பாஜகவோ கருத்து பரிமாற்றங்களுக்கு வாய்ப்பு வழங்குவதில்லை.
திமுகவும், காங்கிரசும் தமிழகத்திலும், இந்தியாவிலும் வறுமைக்கு எதிராக சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்த முடிவு செய்துள்ளது. நரேந்திர மோடி பணக்காரர்களுக்கு ஆயிரம் கோடி வழங்கினார். ஆனால் நாங்கள் ஏழை மக்களுக்கு அந்த தொகையை வழங்க வேண்டும் என்று கருதுகிறோம்.
இந்தியா கிராமங்கள், நகரங்களில் இருந்து இயங்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். பிரதமர் அலுவலகத்தில் இருந்தும், நாக்பூரில் இருந்தும் இந்தியா இயங்க வேண்டும் என்று நாங்கள் விரும்பவில்லை என்று பேசினார் ராகுல்காந்தி.

நீட் தேர்வு ரத்து செய்யப்பட மாட்டாது: மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்

தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் பாஜகவும், திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியும் இடம்பெற்றுள்ளனர். இரண்டு கட்சிகளும் தங்களுடைய தேர்தல் அறிக்கையில் நீட் தேர்வு ரத்து செய்வது குறித்து தெரிவித்து இருந்தன. நீட் தேர்வு விரும்பாத மாநிலங்களில் அது ரத்து செய்யப்படும் என காங்கிரஸ் கட்சி தன்னுடைய தேர்தல் அறிக்கையில் தெரிவித்து இருந்தது. ஆனால், பாஜக தன்னுடைய தேர்தல் அறிக்கையில் நீட் தேர்வு குறித்து எதுவும் குறிப்பிடவில்லை. திமுகவின் அழுத்தத்தினால் காங்கிரஸ் கட்சி நீட் தேர்வு குறித்து அறிவிப்பை தன்னுடைய தேர்தல் அறிக்கையில் சேர்த்துக் கொண்டதாக கூறப்பட்டது. அதேபோல், அதிமுகவினால் பாஜகவிடம் அழுத்தம் கொடுத்து செய்ய முடியவில்லை என்றும் எதிர்க்கட்சிகள் விமர்சித்தன.
இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், ‘நீட் தேர்வு ரத்து செய்யப்படாது. எங்களுடைய கூட்டணி கட்சியான அதிமுகவை சமாதானம் செய்வோம். தேர்வை தமிழில் எழுத வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது; அதை ஏற்றுக்கொண்டோம். பிரதமர் மோடி தலைமையில் அடுத்து அமையும் அரசில், தமிழக பிரதிநிதிகளின் குரல் எதிரொலிக்கும்’ என்று கூறினார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button