அ.தி.மு.க முககவசத்தை கழட்டினால் ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க முகம் இருக்கும் : ராகுல்காந்தி
சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில், சேலம் சீலநாய்க்கன்பட்டி அருகே, மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, தேர்தல் பிராசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்தில், அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, திருமாவளவன், வைகோ, கீ.வீரமணி உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கலந்துகொண்டனர். அந்தக் கூட்டத்தில் பேசிய மு.க.ஸ்டாலின், ‘தமிழகத்தின் மீது ரசாயணத் தாக்குதலையும் கலாச்சார தாக்குதலையும் மத்திய அரசு நிகழ்த்துக்கொண்டிருக்கிறது. ரசாயணத் தாக்குதலையும், கலாச்சாரத் தாக்குதலையும் எதிர்கொள்ளும் ஆற்றல் தி.மு.கவிடம் உள்ளது.
தமிழகத்தில் பா.ஜ.கவால் வேறூன்ற முடியவில்லை. அதனால், அ.தி.மு.கவை மிரட்டி அவர்கள் மீது சவாரிசெய்கின்றனர். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு நடந்த எல்லா விஷயமும் பா.ஜ.கவின் சதிவிலை என்பது பா.ஜ.க தலைவர்கள் அடிக்கடி இங்குவருவதன் மூலம் தெளிவாகத் தெரிகிறது. டி.ஜி.பி வீடு, தலைமைச் செயலகம் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடைபெற்றது. மத்திய அரசிடம் இணக்கமாக உறவு வைத்திருப்பதால் தேவையான நிதியைப் பெற முடிகிறது முதல்வர் எடப்பாடி பழனிசாமி பொய் சொல்கிறார்.
வர்தா புயல் தாக்கத்தின் போது 22,523 கோடி ரூபாய் தமிழக அரசு கேட்டது. ஆனால், 266 கோடி ரூபாய் தான் வந்தது. ஓகி புயலின் போது மத்திய அரசிடம் 9,302 கோடி ரூபாய் கேட்டது. வந்தது 133 கோடி ரூபாய்தான். கஜா புயல் தாக்கத்தின்போது, 17,899 கோடி ரூபாய். ஆனால் வழங்கப்பட்டது 1,145 கோடி ரூபாய் தான். நிவர் புயல், புரெவி புயலுக்கெல்லாம் நிவாரணம் கிடைத்தது. ஜி.எஸ்.டி வரிப்பணம் கிடைத்ததா? கொரோனா பாதிப்புக்கான நிதி வந்ததா? பிறகு எதற்கு மத்திய அரசுடன் கூட்டணி.
ராகுல் காந்தியிடம் உரிமையான வேண்டுகோள்.. ராகுல் காந்தியிடம் போனில் பேசும்போது சார் என்று அழைப்பேன். உடனே, அவர் மறுத்து சார் என்று அழைக்க வேண்டாம். ப்ரதர் என்று அழையுங்கள் என்று உரிமையுடன் கூறுவார். இந்தியா பாசிச கும்பலிடம் மாட்டிக்கொண்டு மூச்சுத் திணறிக் கொண்டிருக்கிறது. அதனை காக்க வேண்டிய பெரும் கடமை உங்களிடம் இருக்கிறது. தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலிலும், சட்டமன்றத் தேர்தலிலும் மதச்சார்பற்ற கூட்டணி ஒன்று சேர்ந்துள்ளது. அதனால், பா.ஜ.கவால் வெற்றி பெறமுடியவில்லை.
நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலிலும் பா.ஜ.க முழுவதும் தோல்வியைத் தழுவவுள்ளது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க மத்தியில் வெற்றி பெற்றிருந்தாலும் அவர்கள் பெற்ற வாக்குகள் 37 சதவீதம் தான். ஆனால், 63 சதவீதம் பேர் பா.ஜ.க வேண்டாம் என்று வாக்களித்துள்ளனர். ஆனால், அவர்கள் கட்சிகளுக்கு பிரித்து அளித்துள்ளனர். அதனால், ராகுல் காந்தி தலைமைப் பொறுப்பேற்று கூட்டணியை அமைக்கவேண்டும்’ என்று தெரிவித்தார்.
இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி பேசும்போது, ‘இந்த தேர்தல் இரண்டு அரசியல் கட்சிகளுக்கான தேர்தல் அல்ல. நாம், தமிழ் கலாச்சாரம் மீது ஒரு முழுமையான தாக்குதலை சந்தித்து வருகிறோம். இந்தியா என்பது பல்வேறு மாநிலங்கள், மதங்கள், மொழிகளின், மாநிலங்களின் ஒருங்கிணைப்பு. எந்த ஒரு மொழியோ, கலாச்சாரமோ ஒன்றை விட மற்றொன்று உயர்ந்தது அல்ல. அனைத்து மொழிகளும், பண்பாடுகளும், பழக்க வழக்கங்கள் தான் இந்தியாவை உருவாக்கியுள்ளது. ஒரே மொழி என்பதை ஏற்க முடியாது. கி.வீரமணி பேசும் போது கொரோனா காலத்தில் முகக்கவசம் முக்கியம்.
எல்லோரும் முககவசம் அணிந்திருப்பதால் சிரிக்கிறார்களா என்ன செய்கிறார்கள் என்று தெரியவில்லை. பழைய அ.தி.மு.க இப்போது இல்லை. அ.தி.மு.க முககவசத்தை கழட்டினால் ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க முகம் இருக்கும். ஒரு தமிழரும் மோடியின் முன் தலை குனிய விரும்புவதில்லை. அப்படி இருக்கும் போது, தமிழக முதலமைச்சர் அமித்ஷா, மோடியின் முன்பு தலை குனிந்து நிற்பது ஏன்? ஏனென்றால் மத்திய அரசு புலனாய்வு துறையை கையில் வைத்துள்ளது. தவறு செய்தவர்கள் அவர் முன் தலை குனியவேண்டிய நிலையில் உள்ளனர். ஆனால் அதற்கான விலையை நீங்கள் கொடுக்கவேண்டி வரும். எந்த ஒரு மனிதன் தமிழ்நாட்டின் பண்பாட்டை காக்கவேண்டிய பொறுப்பில் உள்ளாரோ, அவர் அதை பொருட்படுத்தவில்லை. நீங்கள் அனுமதித்ததால் தான் இந்த நாடே இயங்கி கொண்டிருக்கிறது.
பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டியும் தமிழ்நாட்டின் சிறு குறு தொழில்கள் மீதான மிகப்பெரும் தாக்குதல். இதை முதலமைச்சர் நரேந்திர மோடியிடம் கேட்க மாட்டார். விவசாயிகளை பாதிக்கும் மூன்று விவசாய சட்டங்களை ஏன் நிறைவேற்றினீர்கள் என கேட்க தைரியம் இல்லாதவராக இருக்கிறார் முதலமைச்சர். அமித்ஷாவும், மோடியும் எதை வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம் என இந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அனுமதி கொடுத்துள்ளார். நான் தமிழ் தெரிந்தவன் அல்ல. ஆனால் உங்களின் எண்ண ஓட்டங்களை புரிந்துகொள்ள கூடியவராக இருக்கிறேன். உங்களின் மொழி, பன்பாடு மீது தொடுக்கும் போரை ஏற்க மாட்டீர்கள் என கருதுகிறேன்.
பா.ஜ.கவிற்கு அதிக அளவிலான பணம், சக்தி, ஆட்கள் உள்ளார்கள். முதலில் அவர்கள் தமிழகத்தில் நுழைவதை தடுத்தால் தான் டெல்லியில் இருந்து அப்புறபடுத்த முடியும். நாங்கள் தமிழகத்தின் மீது சிறு அக்கறை, மரியாதை செலுத்தினால், எங்களுக்கு அதிக அளவில் தமிழகம் தரும் என அனுபத்தில் தெரிந்துகொள்கிறேன். இதை நரேந்திர மோடி புரிந்துகொள்ளவில்லை. ஒரே வழி மரியாதை, பாசம், அன்பு மட்டும் தான். இதை, இந்த தேர்தலின் முடிவில் அவர்களுக்கு புரிய வைப்போம். மு.க.ஸ்டாலின் முதல்வராவார் என்பது முடிவு செய்யப்பட்ட ஒன்று. தேர்தல் வைத்துதான் அதனை தெரிந்துகொள்ளவேண்டும் என்பது அவசியமில்லை. மு.க.ஸ்டாலின்தான் தமிழகத்தின் அடுத்த முதல்வர்’ என்று தெரிவித்தார்.
– ரபீக் அகமது