மோடியின் ட்விட்டர் கணக்கை நிர்வகித்த தமிழ்ப் பெண் கமல் கட்சியில் இணைந்தார் : மநீம பாஜகவுடன் கூட்டணி அமைக்குமா?
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் வரவுள்ளதை தொடர்ந்து அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டத் தொடங்கியுள்ளனர். தமிழகத்தில் தி.மு.க தலைமையிலான கூட்டணிக்கும், அ.தி.மு.க தலைமையிலான கூட்டணிக்கும் இடையில் போட்டியிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும், கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் மீதும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில், கமல்ஹாசனும் தனது கட்சிப் பணியைத் தொடங்கியுள்ளார். தனது கட்சியின் தேர்தல் பொறுப்பாளர்கள் தொகுதி வாரியாக சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்நிலையில், கமல் ஹாசன் பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி மாநகரில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில், திருச்சி கிழக்கு தொகுதியிலிருந்து செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு அரசாள காத்திருக்கும் நம்ம(வர்) முதல்வர் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டுள்ளனர்.
இது குறித்து திருச்சி கிழக்கு தொகுதி பொறுப்பாளர் கிஷோர் குமார் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் கூறும்போது, இந்த வாசகம் போகிற போக்கில் அரசியல் பரபரப்புக்காக இல்லை. திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் போட்டியிடும் வாய்ப்புள்ளது. அதற்கான எங்களது விருப்பத்தை தெரிவித்துள்ளோம்.
சாதகமான அம்சங்களை எடுத்துச் சொல்லியுள்ளோம். கமல்ஹாசன் வரும் தேர்தலில் இரண்டு தொகுதிகளில் போட்டியிடத் திட்டமிட்டுள்ளார். அதில் ஒன்று திருச்சியாக இருக்கும். அவர் போட்டியிட்டால் மக்கள் நீதி மய்யத்திற்கே சாதகமாக இந்த தொகுதி உள்ளது என்று நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளனர்.
அதிமுக சார்பில் தற்போதைய சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், திமுக சார்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் போட்டியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் கமலும் போட்டியிடுவார் என்று நிர்வாகிகள் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
ஆதரவற்றவர்கள், சாலையோரம் தஞ்சமடைந்தவர்களுக்கு மூன்று வேளை உணவு அளித்துவரும், FoodBank India என்ற அமைப்பை நிர்வகித்து வருபவர் சினேகா மோகன்தாஸ். இவரது சேவையைப் பாராட்டி கடந்த மார்ச் 8-ம் தேதி மகளிர் தினத்தன்று இந்திய பிரதமர் மோடியின் ட்விட்டர் கணக்கை ஒருநாள் நிர்வகிக்கும் பொறுப்பு வழங்கப்பட்டது. அவருடன் 7 சாதனைப் பெண்களுக்கும் மோடியின் ட்விட்டரை நிர்வகிக்கும் பொறுப்பு அந்த நாளில் வழங்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது சினேகா மோகன்தாஸ் கமல்ஹாசனின் மக்கள் நீதிமய்யம் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார். அவர் சென்னை மண்டலத்தின் மகளிர் மற்றும் குழந்தைகள் நல அணியின் துணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து ட்வீட் செய்திருக்கும் சினேகா மோகன்தாஸ் “என்னை ஒரு நல்ல தலைவராக தேர்ந்தெடுத்து நம்புவதற்கும், மக்கள் நீதி மய்யத்தின் துணை மாநில செயலாளர் மகளிர் மற்றும் குழந்தைகள் நல அணி சென்னை மண்டலத்திற்கு நியமித்த மரியாதைக்குரிய தலைவர் கமல்ஹாசனுக்கு நன்றி” என்று தெரிவித்துள்ளார்.
2021 சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருவதையொட்டி அனைத்துக் கட்சிகளும் தேர்தல் பணிகளை முடுக்கி விட்டுள்ளன. அந்த வகையில் மக்கள் நீதி மையமும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார்கள். அந்த வரிசையில் கோவை, ஈரோடு, மதுரை, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களின் 100 தொகுதி பொறுப்பாளர்கள் உடன் கமல்ஹாசன் ஆலோசனை நடத்தினார்.
அதேபோல வேலூர், சிவகங்கை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 112 தொகுதி பொறுப்பாளர்களுடன் கமல்ஹாசன் ஆலோசனை நடத்துகிறார்.
கமல்ஹாசன் நிர்வாகிகள் இடையே பேசுகையில் கூட்டணி தொடர்பான விஷயங்களை நான் பார்த்துக்கொள்கிறேன், நீங்கள் கட்சிப் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துங்கள் என்று கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
பாஜகவுடன் கூட்டணி அமைக்கப்படுமா என்ற கேள்விக்கு நல்லவர்களுடன்தான் கூட்டணி அமைக்கப்படும் என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
தேர்தலுக்கு தயாராகும் விதமாக மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. அதை தொடர்ந்து கமல்ஹாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் நாங்கள் அமைக்கும் கூட்டணி நல்லவர்களின் கூட்டணி ஆகத்தான் இருக்கும் என்று கூறினார்.
மேலும் மனுஸ்மிருதி தற்போது புழக்கத்தில் இல்லாத ஒரு புத்தகம் அதைப் பற்றி பேசுவது தேவையில்லாதது என்று கூறினார். எழுவர் விடுதலை என்பது சட்டம் எடுக்க வேண்டிய முடிவு அதில் தன்னால் தலையிட முடியாது என்று கமல்ஹாசன் கூறினார்.
ரஜினியின் உடல்நிலை பற்றி தனக்கு ஏற்கனவே தெரியும் என்று கூறிய கமல்ஹாசன் அரசியலா உடல்நலன் என்று பார்க்கும்போது அவரது உடல் நலனே முக்கியம். ஆனால் அது குறித்த முடிவை எடுக்க வேண்டியது ரஜினிகாந்த் தான் என்று கூறினார்.
தேர்தலை சந்திக்கும் விதமாக நவம்பர் 26, 27 தேதிகளில் கமல்ஹாசன் திருச்சி மதுரையில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார். மேலும் டிசம்பர் 12 , 13 ஆகிய தேதிகளில் கோவை சேலத்தில் சுற்றுப்பயணம் செய்கிறார்.
– வேல்மணி