அரசியல்

சட்டமன்ற தேர்தல் நிலவரம் : அமைச்சர்களுக்கே இந்த நிலையா..?

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற தொகுதி கோபிச்செட்டிப்பாளையம். இங்கு கடந்த 1957ஆம் ஆண்டு முதல் தேர்தல்கள் நடைபெற்று வருகின்றன. 9 முறை அதிமுகவும், 2 முறை திமுகவும் வெற்றி பெற்றுள்ளன. கடந்த 2016ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுக வேட்பாளர் கே.ஏ.செங்கோட்டையன் 96,177 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இதையடுத்து இவருக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டது. கோபி தொகுதியில் 1980 முதல் 2016 வரை 7 முறை செங்கோட்டையன் எம்.எல்.ஏவாக இருந்திருக்கிறார்.

இந்நிலையில் 2021 சட்டமன்ற தேர்தலில் கோபிச்செட்டிப்பாளையம் தொகுதியில் அதிமுக சார்பில் மீண்டும் போட்டியிட செங்கோட்டையனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இவரை எதிர்த்து திமுக சார்பில் ஜி.வி.மணிமாறன், நாம் தமிழர் கட்சி சார்பில் எம்.கே.சீதாலட்சுமி, அமமுக சார்பில் என்.கே.துளசிமணி, மக்கள் நீதி மய்யம் சார்பில் என்.கே.பிரகாஷ் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர். இங்கு கொங்கு வேளாளர் கவுண்டர்கள், வேட்டுவக்கவுண்டர்கள், நாடார்கள் ஆகியோர் பெரும்பான்மையாக இருக்கின்றனர். மேலும் ஆதிதிராவிடர் சமூகத்தினர், கிறிஸ்தவர்கள், முஸ்லீம்கள் கணிசமாக உள்ளனர்.

கொடிவேரி அணைக்கட்டு பகுதி முக்கிய சுற்றுலா தலமாக விளங்குகிறது. இங்கு சுற்றுலா பயணிகளுக்கான வசதிகள் மேம்படுத்தப்படவில்லை என்று குற்றம்சாட்டுகின்றனர். குண்டேரிப்பள்ளம் நீர்த்தேக்கத்தில் போதிய உள்கட்டமைப்பு வசதிகள் செய்யவில்லை என்று கூறப்படுகிறது.

கோபி சுற்றுவட்டாரப் பகுதியில் கோதுமை, கரும்பு, மஞ்சள், வாழை, தென்னை, மல்பெரி ஆகியவை முக்கியமாக உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. இங்குள்ள விவசாயிகள் தங்களுடைய விளைபொருட்களுக்கு போதிய விலை கிடைப்பதில்லை. தங்கள் விளைபொருட்களை குளிர்ந்த நிலையில் சேமித்து வைக்க போதிய வசதிகள் இல்லை. தடபள்ளி கால்வாயில் கலக்கும் கழிவுநீரால் விளை நிலங்கள் பாதிக்கப்பட்டு பெரிதும் அவதிப்படுவதாக விவசாயிகள் கூறுகின்றனர். குப்பைகளை அகற்ற போதிய வசதிகள் செய்து தரவில்லை. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தவில்லை.

பட்டுக்கூடு விற்பனை செய்ய உரிய மையம் உண்டாக்கவில்லை. இதனால் பல விவசாயிகள் பட்டுக்கூடு உற்பத்தி தொழிலையே கைவிட்டு விட்டனர். கரும்பு விவசாயிகளுக்கான நிலுவைத் தொகையை உரிய நேரத்தில் அளிக்கவில்லை போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர். அமைச்சர் செங்கோட்டையன் தரப்பைப் பொறுத்தவரை, பள்ளிக்கல்வித் துறையின் பல்வேறு சீர்திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. அத்திக்கடவு – அவிநாசி திட்டம் செயல்பாடு உள்ளிட்ட விஷயங்கள் செய்து தரப்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.

ஆனால் தொகுதி வளர்ச்சிக்காக குறிப்பிடத்தக்க வசதிகள் எதுவும் செய்து தரப்படவில்லை என்று திமுக தரப்பு குற்றம்சாட்டுகின்றனர். கோபிச்செட்டிப்பாளையம் மக்களின் கோரிக்கைகளில் ஒன்றான புதிய மாவட்டம் குறித்து அமைச்சர் செங்கோட்டையன் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்கின்றனர். இவ்வாறு அதிமுக தரப்பிற்கு சாதக, பாதக விஷயங்கள் ஏராளம் இருக்கின்றன. இதனால் இம்முறை திமுக வலுவான போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தேனி மாவட்டத்தில் உள்ள போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதியில் துணை முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் போட்டியிடுகிறார்.

இவரை எதிர்த்து திமுக சார்பில் தங்கதமிழ்ச்செல்வன், அமமுக சார்பில் எம்.முத்துசாமி, மக்கள் நீதி மய்யம் சார்பில் பி.கணேஷ் குமார், நாம் தமிழர் கட்சி சார்பில் எம்.பிரேம் சந்தர் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் போடி தொகுதிக்கு உட்பட்ட நாகலாபுரத்திற்கு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சென்றிருந்தார்.

அங்கு அதிமுகவின் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது ஒரு பெட்டிக்கடையின் பின்னால் ஒளிந்திருந்த நபர், திடீரென வெளியே வந்து, கடந்த 10 ஆண்டுகளாக எதுவும் செய்யவில்லை என்று கூச்சலிட்டதாக தெரிகிறது. உடனே தனது கையில் இருந்த சாணத்தை ஓபிஎஸ் மீது வீசியுள்ளார். ஆனால் அது ஓபிஎஸ்ஸிற்கு பாதுகாப்பாக இருந்த போலீசார் மீது விழுந்தது.

சாணம் வீசிய நபரை துரத்திப் பிடித்தனர். சம்பந்தப்பட்ட நபரை பிடித்து போடி புறநகர் காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இதற்கிடையில் தனது பிரச்சாரத்தை பாதியிலேயே முடித்துக் கொண்டு ஓ.பன்னீர்செல்வம் புறப்பட்டுச் சென்றதாக கூறப்படுகிறது. துணை முதல்வர் மீது சாணம் வீசிய நபரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி கிராமத்தில் அயன்வலசு கிராமத்தில் அரசு சார்பில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமானப் பணி நடந்து வருகிறது.
இதற்காக வேளாண் நிலங்களை கையகப்படுத்தி கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்தன. இதற்கு 52 கிராமங்களில் எதிர்ப்பு கிளம்பியது. பணியை நிறுத்துமாறும் குடியிருப்பை வேறு இடத்தில் கட்டுமாறும் போராட்டம் வெடித்தன.

தேர்தலைப் புறக்கணிக்கிறோம் என்று கூறினர், இதனால் வருவாய் துறை தேர்தல் பிரிவினர் பேச்சு நடத்தினர், ஆனால் மக்கள் எதிர்ப்பு அடங்கவில்லை.
இதற்கு மூலக்காரணம் பவானி தொகுதி எம்.எல்.ஏ.வும் சுற்றுச்சூழல் துறை அமைச்சருமான கருப்பண்ணன் தான் காரணமென போராட்டம் நடத்தினர். ஆனால் இதையெல்லாம் ஆளும் தரப்பினர் கண்டுகொள்ளவில்லை.

இந்நிலையில் பவானி தொகுதியில் கருப்பண்ணன் மீண்டும் போட்டியிடுவதால், 52 கிராமங்களைச் சேர்ந்தவர்கள் கருப்பண்ணன் பிரச்சாரத்துக்கு வர கூடாது என்றும் அவர் பணம், பொருள் கொடுத்தால் வாங்கக் கூடாது என்று மக்களுக்கு நிபந்தனை விதித்துள்ளனர்.

மேலும் அடுக்குமாடிக் குடியிருப்பைக் கொண்டு வந்து விவசாயத்தை அழிக்கும் கருப்பண்னனுக்கு எங்கள் ஓட்டு இல்லை விவசாயக் நில மீட்புக் கூட்டமைப்பு 52 கிராமங்கள் என்ற பெயரில் ஸ்டிக்கர் அச்சிட்டு எல்லா இடங்களிலும் ஒட்டி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது ஆளும் கட்சித் தரப்பில் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.

சௌந்திரராஜன்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button