அரசியல்

வெற்றி தோல்வி யாருக்கு..? இராமநாதபுரம் மாவட்டம்

இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டமன்ற தொகுதிகளில் அதிமுக, திமுக, அமமுக தலா மூன்று தொகுதிகளிலும், பாஜக, காங்கிரஸ், தேமுதிக தலா ஒரு தொகுதியிலும் போட்டியிடுகிறது.

இராமநாதபுரம்

இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதியைப் பொருத்தவரை இஸ்லாமியர்கள் அதிகமாக வசிக்கிறார்கள். முக்குலத்தோர், நாடார், முதலியார், மீனவர்கள், கிறித்துவர்கள் மற்றும் இதர சமுதாயத்தைச் சார்ந்த வாக்காளர்களும் வசிக்கிறார்கள். அதிமுக கூட்டணி கட்சியின் சார்பில் பாஜகவைச் சேர்ந்த குப்புராமு போட்டியிடுகிறார். திமுக சார்பில் மாவட்டப் பொருப்பாளர் முத்துராமலிங்கம், அமமுக சார்பில் அதிமுகவின் முன்னாள் மாவட்டச் செயலாளர் முனியசாமி போட்டியிடுகிறார். இந்தத் தொகுதியில் மும்முனைப் போட்டியே நிலவுகிறது.

மத்திய மாநில அரசுகளின் முஸ்லீம்களுக்கு எதிரான சிஐஏ சட்டம், விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டங்கள், எட்டுவழிச் சாலைத் திட்டம், இராமேஸ்வரம் மீனவர்களை சிங்கள ராணுவத்தினர் தாக்குதலை கண்டுகொள்ளாமல் இருந்தது போன்ற காரணங்களால் பாஜக வேட்பாளருக்கு எதிர்ப்பு அலை வீசுகிறது. பாஜக கூட்டணிக்கு இந்தத் தொகுதியை ஒதுக்கியதால் அதிமுகவினரின் ஒத்துழைப்பும் பாஜக வேட்பாளருக்கு இல்லை.

இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக இருக்கும் இந்தப் பகுதியில் அதிமுகவின் முன்னாள் எம்.பி.யும், அதிமுக சிறுபான்மைப் பிரிவு செயலாளருமான அன்வர் ராஜா முஸ்லீம் மக்களிடம் பாஜகவுக்கு வாக்கு கேட்டு செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கி இருக்கிறார். அதிமுக தொண்டர்களின் பெரும்பான்மையான வாக்குகள் அமமுக வேட்பாளர் முனியசாமிக்கே செல்ல இருப்பதாக தெரிய வருகிறது. அதிமுக வாக்குகளை முனியசாமி அதிகமாக பிரிப்பதால், இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் முத்துராமலிங்கத்திற்கே வெற்றி வாய்ப்பு இருப்பதாகவே தெரிகிறது. சிறுபான்மை சமூகத்தின் வாக்குகள் திமுகவுக்கு இருப்பதால் இராமநாதபுரத்தில் உதய சூரியனே பிரகாசிக்கிறது.

திருவாடனை

திருவாடனை சட்டமன்றத் தொகுதியைப் பொறுத்தவரை அதிமுக சார்பில் ஆனிமுத்து, திமுக கூட்டணி கட்சியின் சார்பில் சட்டமன்ற காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.ஆர்.ராமசாமியின் மகன் கரு.மாணிக்கம், அமமுக சார்பில் முன்னாள் அமைச்சர் வ.து.நடராஜனின் மகனும், அமமுக மாவட்டச் செயலாளருமான வ.து.ந.ஆனந்த் போட்டியிடுகின்றனர்.

அதிமுக வேட்பாளர் ஆனிமுத்துவிற்கு பாஜக, அதிமுகவுக்கு உள்ள எதிர்ப்பு அலை வீசுகிறது. சிறுபான்மையினர் வாக்குகளும் இவருக்கு கிடைப்பது சந்தேகமே தொகுதியில் மக்கள் செல்வாக்கும் இருப்பதாக தெரியவில்லை. அதிமுக தலைமை கடைசி நேரத்தில் வாக்குக்கு பணம் வழங்கினால் அதனை கொடுத்து வாக்குகளை வாங்கலாம் என்று இருப்பதாகவே தெரிய வருகிறது. காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கத்திற்கு திமுக, காங்கிரஸ் கட்சியினர் வாக்குகள் கணிசமாக இருப்பதாலும், இந்தப் பகுதியில் அவரது குடும்பத்தினருக்கென இருக்கும் தனிப்பட்ட செல்வாக்காலும், வெற்றி பெற்றுவிடலாம் என்ற நம்பிக்கையில் இருக்கிறார். ஸ்டாலினின் பிரச்சாரமும் இவருக்கு பிளஸ்.

அமமுக வேட்பாளர் ஆனந்த் ஏற்கனவே கடந்த 2019ல் நடந்த பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு கணிசமான வாக்குகளைப் பெற்று அதிமுக கூட்டணியில் நின்ற நயினார் நாகேந்திரனை தோல்வியடைய வைத்தார். திருவாடனை தொகுதி மக்களுக்கு நன்கு பரிச்சயமானவர். மத்திய மாநில மக்கள் விரோத போக்கை மக்களிடம் விளக்கியும், இந்தப் பகுதி மக்களின் நீண்டநாள் பிரச்சனைகளான மீனவர்கள் பிரச்சனை, குடிதண்ணீர் பிரச்சனை, விவசாயிகள் பிரச்சனை போன்ற பிரச்சனைகளை தான் வெற்றி பெற்றதும் தீர்ப்பதற்கு சட்டமன்றத்தில் குரல் கொடுப்பதாக சொல்லி வாக்குகளை சேகரிக்கிறார். சிறுபான்மையினரின் வாக்குகளும் இவருக்கு பலமாக உள்ளது.

திமுக கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளருக்கும் அமமுக வேட்பாளர் வதுந ஆனந்துக்குமே போட்டி கடுமையாக உள்ளது. அதிமுக இந்த தொகுதியில் ஜொலிப்பதாக தெரியவில்லை.

முதுகுளத்தூர்

முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் அதிமுகவின் மாவட்டச் செயலாளரின் மனைவி கீர்த்திகா முனியசாமி, திமுக சார்பில் அமைச்சர் ராஜகண்ணப்பன், அமமுக சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ முருகனும் போட்டிடுகிறார்கள். இந்தப் பகுதியில் முக்குலத்தோர், தேவேந்திர குலத்தினர், யாதவர்கள் பெரும்பான்மையாக வசிக்கின்றனர். இஸ்லாமியர், நாடார், கிறிஸ்தவர்களும் இருக்கிறார்கள்.

ஏற்கனவே இந்தப் பகுதியில் மூன்று வேட்பாளர்களும் பிரபலமானவர்கள் தான். அதிமுக வேட்பாளர் கீர்த்திகா முனியசாமி கடந்த தேர்தலில் இதே தொகுதியில் தோல்வியை தழுவியதால் அனுதாபம் தேடி வாக்கு சேகரித்து வருகிறார். பாஜக கொண்டு வந்த சிறுபான்மை மக்களுக்கு எதிரான வேளாண் சட்டங்களை அதிமுக ஆதரித்தது. அதிமுக வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கியது. தேவேந்திர குலத்தினருக்கு தேவேந்திர வேளாளர் சட்டமசோதா கொண்டு வந்தது போன்ற காரணங்களால் அதிமுகவிற்கு எதிர்ப்பு அலை வீசுகிறது.

அமமுக வேட்பாளர் முருகன் கடந்த 2011&2016 காலகட்டத்தில் இந்தத் தொகுதியின் எம்எல்ஏவாக இருந்தவர். இவரும் இந்தத் தொகுதி மக்களிடம் நன்கு பரிச்சயமானவர். இவர் எம்எல்ஏவாக இருந்தபோது பல்வேறு நலத்திட்டங்களை இந்தப் பகுதிக்கு கொண்டு வந்துள்ளார். அதிமுக அரசு வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கி முக்குலத்தோருக்கு துரோகம் செய்துள்ளதாக கூறி முக்குலத்தோரின் வாக்குகளையும், பிஜேபிக்கு எதிரான அதிமுகவினரின் வாக்குகளையும் பிரிக்கிறார்.

திமுக வேட்பாளர் இந்தத் தொகுதி மக்களுக்கு நன்கு பரிச்சயமானவர். யாதவ சமுதாயத்தின் வாக்குகள் முழுவதும் இவருக்கே சாதகமாக இருக்கிறது. தேவேந்திர குல அமைப்புகளும் இவருக்கு ஆதரவாக இருக்கிறார்கள். சிறுபான்மை மக்களும் திமுகவிற்குத்தான் வாக்களிப்பார்கள் என்றே தெரியவருகிறது. அதிமுக அரசின் எதிர்ப்பு அலை வீசுவதாலும் அமமுக வேட்பாளர் அதிமுகவினர் வாக்குகளை பிரிப்பதாலும், திமுக வேட்பாளர் கண்ணப்பனுக்கே முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக தெரிய வருகிறது. அதிமுக, திமுக இரண்டு வேட்பாளர்களுமே பணத்தை செலவு செய்வதிலும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல.

மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோத போக்காலும், அதிமுக, அமமுக பிளவு பட்டதாலும் திமுக வேட்பாளர் கண்ணப்பனுக்கே வெற்றி வாய்ப்பு சாதகமாக இருக்கிறது.

பரமக்குடி

பரமக்குடி (தனி) சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் கடந்த 2019ல் பாராளுமன்றத் தேர்தலோடு நடைபெற்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற சதன்பிரபாகர், திமுக சார்பில் சேம்பர் முருகேசன், தேமுதிக சார்பில் செல்வி என்பவரும் போட்டியிடுகின்றனர்.

அதிமுக வேட்பாளர் சதன்பிரபாகரும், திமுக வேட்பாளர் முருகேசனும் அவரவர் சார்ந்த கட்சி நிர்வாகிகளை அழைத்துக் கொண்டு சுறுசுறுப்பாக தொகுதியைச் சுற்றி வருகிறார்கள். அதிமுக அரசின் மீது எதிர்ப்பு அலை வீசுவதாலும், பாஜக அரசின் சிஐஏ, வேளாண் சட்டங்களுக்கு அதிமுக ஆதரவு அளித்ததாலும் சிறுபான்மையினர்கள் வாக்குகள் திமுக வேட்பாளருக்கு சாதகமாக உள்ளது. சதன் பிரபாகருக்கு நயினார் கோவில் ஒன்றியத்திலும், பரமக்குடி நகர் பகுதியிலும் ஆதரவு அதிகமாக இருந்தாலும் பரமக்குடி, போகலூர் ஒன்றியங்களில் திமுக வேட்பாளர் முருகேசனுக்கு சாதகமாக இருக்கிறது. இருவரும் சம பலத்தில் வாக்கு சேகரித்து வருகிறார்கள். பரமக்குடி சட்டமன்ற தொகுதியைப் பொறுத்தவரை போட்டி கடுமையாக இருப்பதால் வெற்றி வாய்ப்பு யாருக்கு என்பதில் இழுபறி நிலையே நீடிக்கிறது.

வெ.சங்கர்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button