அதிமுகவில் சசிகலாவின் செல்வாக்கு அதிகரிக்கிறதா..?
தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதையடுத்து அரசியல் கட்சியினர் பரபரப்பாக தேர்தல் பணிகளை தொடங்கி விட்டனர். சட்டமன்ற கூட்டத்தொடர் முடிவதற்கு முன்பாகவே தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியை அறிவித்து விட்டது. திமுகவை பொறுத்தவரையில் அதன் கூட்டணி கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு நடத்துவதற்கு குழுவை அமைத்ததோடு திமுக தலைவர் ஸ்டாலின் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்கிற பெயரில் பிரச்சாரத்தை தொடர்ந்து வருகிறார்.
அதிமுகவை பொறுத்தவரையில் தேர்தல் ஆணையம் முன்கூட்டியே தேர்தல் தேதியை அறிவித்துள்ளதால் சட்டசபையில் அறிவித்துள்ள கவர்ச்சிகரமான அறிவிப்புகள் எதற்கும் அரசாணை வெளியிடமுடியாது. அதனால் சட்டசபையில் 110 விதியின் கீழ் அறிவித்த அறிவிப்புகள் அனைத்தும் வெற்று அறிவிப்புகளாகத்தான் இருக்கும். கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் ரத்து, வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு உள்ளிட்ட அறிவிப்புகளை வாக்கு வங்கியாக மாற்ற நினைத்து சட்டசபையில் அறிவித்தார் முதல்வர் பழனிச்சாமி. ஆனால் எந்த அறிவிப்புகளும் நடைமுறைப்படுத்த தேர்தல் நடத்தை விதிகள் இடமளிக்காது.
ஏற்கனவே சசிகலா வருகையால் அதிமுக தொண்டர்கள் உள்ளிட்ட அதிருப்தியாளர்கள் சசிகலாவை சந்தித்தால் பழனிச்சாமிக்கான புகழ் இறங்கு முகமாகலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவின் இரட்டை இலைச் சின்னத்தில் நின்று காங்கேயம் தொகுதியில் வெற்றி பெற்ற கொங்கு இளைஞர் பேரவையின் தனியரசு சசிகலாவை சந்தித்தது அதிமுக கூட்டணியில் இனி தனியரசு இல்லை என்பதாகவே தெரிகிறது. அதேபோல் திருவாடனை சட்டமன்ற தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் வெற்றி பெற்ற நடிகர் கருணாஸூம் சசிகலாவை சந்திக்க நேரம் கேட்டிருப்பதாக தெரிய வருகிறது.
அதிமுக கடந்த தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் கூட்டணி கட்சிகளில் உள்ள அனைவரும் இரட்டை இலைச் சின்னத்தில் தான் போட்டியிட்டனர். அதிமுகவில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நிறைவடைந்ததும் தற்போது தேர்தலில் வாய்ப்பை எதிர்பார்த்து வாய்ப்பு கிடைக்காதவர்கள், கடந்த முறை நின்ற தொகுதி கூட்டணிக்கு ஒதுக்கப்பட்டால் அதிருப்தியில் சசிகலாவை சந்திக்க வாய்ப்பு இருப்பதாகவே தெரிகிறது. அதிமுகவில் தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட்டால் குழப்பங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமாக இருப்பதாகவே தெரிய வருகிறது. பாரதிய ஜனதா கட்சி தென்மாவட்டத்தில் நெல்லை, கன்னியாகுமரி, கொங்குமண்டலத்தில் அதிக தொகுதிகளை எதிர்பார்ப்பதாக தெரிகிறது. பழனிச்சாமியை பொறுத்தவரையில் இடைத்தேர்தலில் தென்மாவட்டத்தில் வெற்றி பெற்றிருப்பதால் அந்த பகுதியில் பலமாக இருப்பதாக அமித்ஷாவிடம் தெரிவித்தாராம். அமித்ஷாவும் அப்படியென்றால் தென்மாவட்டத்தில் நீங்கள் அதிக தொகுதிகளை எடுத்துக் கொண்டு எங்களுக்கு கொங்கு மண்டலத்தில் அதிக தொகுதிகள் ஒதுக்குங்கள் என்று கூறியதாக தகவல்.
சசிகலாவை பொறுத்தவரை தான் அதிமுகவின் பொதுச்செயலாளர் என்கிற நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறார். ஆகையால் தேர்தல் பிரச்சாரத்திற்கு அவர் செல்ல முடியாது. அமமுகவிற்கு வாக்கு சேகரிக்க தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்றால் அதிமுகவின் பொதுச்செயலாளர் நான்தான் என்று நீதிமன்றத்தில் அவர் தொடுத்த வழக்கிற்கு சிக்கலாகும். தனிஆளாக மக்களை சந்திக்க தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செல்ல வேண்டுமானாலும் தேர்தல் ஆணையத்தில் அனுமதி பெறவேண்டும். தேர்தல் ஆணையமும் கட்சி சாராத தனி நபர்களுக்கு அனுமதி வழங்காது. வேண்டுமானால் நீதிமன்றத்திற்கு சென்று நான் அதிமுகவின் பொதுச்செயலாளர் என்கிற முறையில் வேட்பாளர் பட்டியலை இறுதி செய்வதற்கு எனக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று இடைக்கால மனுதாக்கல் செய்யலாம். இதற்கும் வாய்ப்புகள் குறைவுதான். அதிமுகவில் இருந்து இனி சசிகலாவை நிர்வாகிகளும், பிரபலங்களும் சந்திக்கும் வாய்ப்பு அதிகமாக இருப்பதாக தெரிகிறது. கொங்கு மண்டலத்திலும் பழனிச்சாமிக்கு எதிர்ப்புகள் அதிகமாகவே இருக்கிறது. அவ்வாறு நிர்வாகிகள் சசிகலாவை சந்தித்தால் பழனிச்சாமியின் செல்வாக்கு குறையத் தொடங்கும்.
இந்நிலையில் சசிகலாவை பொறுத்தவரை தேர்தலுக்கு பின்புதான் அவரது அரசியல் பயணம் பரப்பரப்பாகும். இந்த தேர்தல் 1989ஆம் ஆண்டு அதிமுக பிளவுபட்டு ஜானகியும், ஜெயலலிதாவும் தனித்தனியாக தேர்தலை சந்தித்தது போல் இந்த தேர்தலிலும் பழனிச்சாமி அணியும் தினகரன் அணியும் தங்களது பலத்தை நிரூபிக்க கடுமையாக போராடுவார்கள். திமுக ஆட்சி அமைப்பது எளிதாக அமைந்துவிடும். எதிர்க்கட்சி வரிசையில் யார் அமரப்போவது என்பதற்குத்தான் அதிமுகவில் தற்போது போட்டி. வெற்றி பெற்றால் சீட்டு எண்ணிக்கை, தோல்வியடைந்தால் வாக்கு சதவீதத்தை கணக்கில் கொண்டு சசிகலா தலைமையில் அதிமுக ஒன்றிணைய வாய்ப்பு உள்ளதாகவே தெரிகிறது. அமமுகவிற்கு நேரடியாக பிரச்சாரம் செய்யாமல் இருந்த இடத்திலேயே அதிருப்தியாளர்களை அழைத்துப் பேசி அமமுக வெற்றிக்கு சசிகலா உதவுவார் என்றே தெரிகிறது.
–சூரிகா