அதிமுக கொடியும் சசிகலாவும்
சசிகலா சிறையிலிருந்து விடுதலை ஆகியிருக்கிறார். விடுதலையானதும் ஜெயலலிதா பயன்படுத்திய காரில் அதிமுக கட்சிக் கொடியுடன் ஓய்வெடுக்க பண்ணை வீட்டிற்கு சென்றார். அதிமுக கொடியுடன் சசிகலா காரில் சென்றது பல்வேறு விமர்சனங்களையும், சர்ச்சைகளையும் ஏற்படுத்தியது. இதற்கு முன் முதல்வர் பழனிச்சாமி டெல்லியில் நூறு சதவீதம் சசிகலாவை அதிமுகவில் சேர்த்துக் கொள்ளப் போவதில்லை என்று பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தனது எதிர்ப்பு நிலையை காட்டினார். அதன்பிறகு அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி.சண்முகம் இருவரும் சசிகலா அதிமுகவில் இல்லை. அதனால் அவர் அதிமுக கொடியை பயன்படுத்தியது சட்டப்படி தவறு. சசிகலா மீது வழக்கு தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று பேட்டி கொடுத்தார்கள்.
அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளரும் சசிகலாவின் தீவிர எதிர்ப்பாளருமான கே.பி.முனுசாமி, தினகரன் மன்னிப்பு கடிதம் கொடுத்தால் கட்சியில் சேர்த்துக் கொள்வது குறித்து பேசி முடிவு செய்வோம் என்கிறார்.
சசிகலா விடுதலையான நாளில் இருந்து தமிழக அரசியலிலும் அதிமுகவிலும் நடக்கும் பல்வேறு சர்ச்சைகள் குறித்து சசிகலாவின் தீவிர ஆதரவாளரும், அதிமுக பிரமுகருமான விவேக்குமார் கூறுகையில்,
அதிமுகவில் சசிகலா தன்னை சேர்த்துக் கொள்ளுங்கள் என்று கோரிக்கை வைத்தாரா? அல்லது கடிதம் ஏதும் எழுதினாரா? சசிகலா கடிதம் எழுதும் அளவுக்கு எடப்பாடி அதிகாரத்தில் இருக்கிறாரா? இனிமேலும் இப்படி ஒரு கோரிக்கையோ கடிதமோ எழுதப் போவதில்லை. ஏனென்றால் அதிமுகவில் சேரவேண்டிய அவசியம் சசிகலாவிற்கு இல்லை. அவர் ஏற்கனவே அதிமுகவில்தான் இருக்கிறார். அவர் தான் அதிகாரப்பூர்வ அதிமுகவின் பொதுச்செயலாளர். பொதுச்செயலாளர் அனுமதி இல்லாமல் பொதுக்குழுவை கூட்ட யாருக்கும் அதிகாரம் இல்லை. அவ்வாறு பொதுக்குழுவை கூட்டினால் அது செல்லாது. அப்படித்தான் அதிமுக பைலாவில் உள்ளது. அதனடிப்படையில் தான் பன்னீர்செல்வமும், பழனிச்சாமியும் கூட்டிய பொதுக்குழு செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார் சசிகலா. அந்த வழக்கில் அதிமுகவின் வங்கி கணக்குகளை சசிகலா பார்வையிடலாம். கட்சியின் முக்கிய ஆவணங்களை யாரும் திருத்தாதவாறு கவரில் வைத்து சீல் வைத்து அதிமுக தலைமைக்கழக அலுவலர் பராமரிக்க வேண்டும். சசிகலா அதிமுக அலுவலகத்திற்கு வரும்போது பார்வையிடலாம் என்று உத்தரவிட்டிருக்கிறது சென்னை உயர்நீதிமன்றம். பொதுச்செயலாளர் பதவி சம்பந்தமாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது என்று தேர்தல் ஆணையமும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் அளித்துள்ளது. வழக்கின் இறுதித் தீர்ப்பு வரும் வரை சசிகலாதான் பொதுச்செயலாளர்.
சசிகலா குறித்து அமைச்சர்களின் கருத்துக்கு பதிலளித்து இராமநாதபுரம் மாவட்ட (அமமுக) செயலாளர் வ.து.ந.ஆனந்த் நமது செய்தியாளரிடம் பேசுகையில்,
ஜெயக்குமார் சட்டத்திற்கு புறம்பாக கட்சிக்கொடியை சசிகலா பயன்படுத்தியதாக கூறுகிறார். எந்த சட்டத்திற்கு புறம்பானது என்று சட்டஅமைச்சராக இருந்த ஜெயக்குமார் கூறுவாரா? தமிழகத்தில் அதிமுக கொடியை பயன்படுத்தினால் வழக்கு போடப்படும் என்று சிவி சண்முகம் கூறுகிறார். எந்த பிரிவுகளின் கீழ் வழக்கு போடப்படும் என்று தற்போது சட்ட அமைச்சராக இருக்கும் சிவி சண்முகத்தை கூறச்சொல்லுங்கள் பார்ப்போம். எது வேண்டுமென்றாலும் பேசலாம் என்று வாய்க்கு வந்ததை எல்லாம் பேசாமல் அமைச்சர்கள் தன்னிலை மறந்து நிதானமில்லாமல் உளறக்கூடாது. கட்சிக் கொடியை கட்டுமளவுக்கு சசிகலா என்ன பொறுப்பில் இருந்தார் என்று ஜெயக்குமார் பேசுகிறார். சாதாரண தொண்டர் கூட கட்சிக் கொடியை பயன்படுத்தலாம் என்பது கூட அமைச்சராக இருக்கும் ஜெயக்குமாருக்கு தெரியவில்லையே என்பதை நினைத்தால் இவரெல்லாம் எப்படி அமைச்சராக இருக்கிறார் என்றுதான் மக்கள் நினைக்கிறார்கள்.
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் மன்னிப்பு கடிதம் கொடுத்தால் அதிமுகவில் சேர்த்துக் கொள்ளலாம் என்பது வன்மையாக கண்டிக்கத் தக்கது. டிடிவி தினகரனோ அமமுக தொண்டர்களோ எங்களை அதிமுகவில் சேர்த்துக் கொள்ளுங்கள் என்று எப்போதாவது யாரிடமாவது கூறினார்களா? எங்களின் நோக்கமே சட்டரீதியாக அதிமுகவை மீட்பது தானே தவிர இவர்களிடம் போய் அதிமுகவில் சேர்ந்து கொள்வோமா? கேபிமுனுசாமி தினகரனை சேர்த்துக் கொள்ளலாம் என்று கூறும்போது இந்த முந்திரிக் கொட்டை ஜெயக்குமார் ஏதாவது பதில் சொன்னாரா? ஓடி ஒழியத்தானே செய்தார் என்று அதிமுக அடிமட்த் தொண்டர்கள் அனைவரும் கேட்கிறார்கள். தொண்டர்களின் கேள்விக்கு ஜெயக்குமார்தான் பதில் சொல்ல வேண்டும் என்று வ.து.ந. ஆனந்த் கூறினார்.
வரும் சட்டமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா அதிமுக கூட்டணியில் தேர்தலை சந்திக்க இருக்கிறது. பழனிச்சாமி, பன்னீர் செல்வம் தலைமையில் தேர்தலை சந்தித்தால் வெற்றி வாய்ப்பு சந்தேகம். சசிகலாவை அதிமுகவின் தலைமையில் அமரவைத்து தேர்தலை சந்தித்தால் வெற்றி வாய்ப்பு சாத்தியம் என்று தமிழக பாஜக டெல்லி தலைமைக்கு அறிக்கை அனுப்பியதாக தெரிகிறது. சசிகலாவுக்கு தென் மாவட்டங்களில் அவர் சார்ந்த முக்குலத்தோர் வாக்கு வங்கி அறுபது தொகுதிகளின் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் சக்தியாக இருக்கிறது. அதனால் சசிகலா தலைமையில் ஒருங்கிணைந்த அதிமுகவாக தேர்தலை சந்தித்தால் தான் தமிழகத்தில் திமுகவை வீழ்த்த முடியும் என்று பாஜக நினைக்கிறது. இதுதான் ஒவ்வொரு அதிமுக தொண்டர்களின் எண்ணமாகவும் இருக்கிறது. பதவியில் இருப்பவர்கள் தான் தன் சுயலாபத்திற்காக பிளவுபட்டு ஆட்சியை திமுகவிற்கு பலிகொடுக்க நினைக்கிறார்கள் என்று அதிமுக தொண்டர்கள் புலம்புகிறார்கள்.
– சூரியன்