அரசியல்

ஆளும் கட்சியின் அவலத்தை மத்திய அரசும், நீதிமன்றமும்தான் மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்: விஜயகாந்த்

பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்தில் பல கோடி ஊழல் நடந்திருப்பதை கண்டித்து தேமுதிக தலைவர் விஜயகாந்ந் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது:
“சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனத்தில் பல கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதாக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பரபரப்பு தகவலை அறிவித்திருப்பது தமிழக மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் உயர்பதவியில் இருப்பவர்களே ஊழல் புகார்களுக்கு ஆளாகும் நிலையை கண்கூடாக பார்க்கமுடிகிறது. ஏற்கனவே இந்தியாவில் ஊழலில் முதலிடம் தமிழ்நாடு என்ற நிலை இருக்கும் போது, தமிழக ஆளுநரே தன்னிலை விளக்கமாக துணை வேந்தர் நியமனத்தில் பல கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாக கூறியது “வேலியே பயிரை மேய்வதற்கு சமமாக மக்கள் கருதுகிறார்கள். அதற்கு பதிலளித்துள்ள நியமிக்கப்பட்ட துணை வேந்தர்கள், தகுதி அடிப்படையில் தான் அப்போதைய ஆளுநர் வித்யாசாகர் ராவ் துணைவேந்தர்களை நியமித்தார் என சொல்லியிருக்கிறார்கள். எந்த தகுதி அடிப்படையில் நியமனம் செய்துள்ளார்கள் என்பது கேள்விக்குறியாக உள்ளது. துணைவேந்தர்கள் நியமனம் செய்வது கல்வி தகுதியின் அடிப்படையிலா?, சீனியாரிட்டி அடிப்படையிலா? அல்லது யார் அதிகப் பணம் கொடுக்கிறார்கள் என்ற அடிப்படையிலா என அனைவரையும் சிந்திக்கவைத்துள்ளது.
தமிழ்நாடு முழுவதும் இலஞ்சம் நிறைந்த மாநிலமாக மாறியுள்ளதை, ஊழல் ஒழிப்பு துறையைச் சேர்ந்தவர்களும், மத்திய அரசும், தமிழக ஆளுநரும் உடனடியாக கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்கவேண்டும். லஞ்சத்தையும், ஊழலையும் ஒழிப்போம் என சொல்லளவில் சொல்லாமல், இதை உடனடியாக தடுத்து நிறுத்தவேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும்.
அதேபோல் திருப்பரங்குன்றம், திருவாரூர் ஆகிய சட்டமன்ற இடைத்தேர்தல் நடக்கவேண்டியதை ஆளும் கட்சியினருக்கு ஆதரவாக, தலைமை செயலாளரே தற்போது தமிழ்நாட்டில் இடைத்தேர்தல் தேவையில்லை என தேர்தல் ஆணையத்தில் சொல்லியிருப்பது, தமிழக மக்களை ஏமாற்றும் செயலாக உள்ளது. ஆண்ட கட்சிக்கும், ஆளுகின்ற கட்சிக்கும் தற்போது இடைத்தேர்தல் நடந்தால் மக்கள் சரியான பாடம் புகட்டிவிடுவார்கள் என பயந்து அஞ்சுவது தெள்ளத் தெளிவாகத்தெரிகிறது. பல்கலைக்கழக துணை வேந்தர்கள் நியமனத்தில் ஊழல் நடந்திருப்பதையும், பின் இடைத்தேர்தல் வேண்டாம் என்று கூறியிருப்பதையும் தேமுதிக சார்பில் வன்மையாக கண்டிப்பதோடு, ஆளும் கட்சியின் அவலத்தை மத்திய அரசும், நீதிமன்றமும் உடனடியாக தலையிட்டு மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.’’
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button