சிறையில் நலமுடன் இருக்கிறேன்…விரைவில் விடுதலை -: சசிகலா கடிதம்
சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் தண்டனை அனுபவித்து வரும் சசிகலா தனது வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியனுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், தான் நலமுடன் உள்ளதாகவும் தனது விடுதலை குறித்து கர்நாடக சிறைத்துறை விரைவில் முடிவெடுக்கும் என்று நம்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து சசிகலாவின் வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் தெரிவித்ததாவது, ”அவரின் உடல்நிலை குறித்த செய்திகள் ஊடகத்தின் வழியாக வெளியாகின. அதுகுறித்து பலரும் என்னிடம் கேள்வி எழுப்பியதால், சிறைத்துறை கண்காணிப்பாளர் வாயிலாக நான் அவருக்கு கடிதம் எழுதியிருந்தேன். அதற்கு அவர் பதில் கடிதம் எழுதியுள்ளார்.
அதில், தமிழக மக்கள் கொரோனாவிலிருந்து மீண்டு முற்றிலும் சகஜ நிலைக்கு வரவேண்டும் என்று குறிப்பிட்டுள்ள அவர், நன்னடத்தை ரெமிஷன் விஷயத்தில் கர்நாடக சிறைத்துறை முடிவெடுப்பார்கள் என நான் நம்புகிறேன். உத்தரவு எனக்கு முறைப்படியாகக் கிடைத்த பிறகு உங்களுக்கு தெரிவிக்கிறேன்.
அதன்படி பைன் தொகையை முறைப்படி நீதிமன்றத்தில் செலுத்த ஏற்பாடு செய்யவும், கர்நாடக நீதிமன்றத்தில் பைன் கட்டிய பிறகும் உச்ச நீதிமன்றத்தில் 14.2.2017 தேதிய தீர்ப்பு வழக்கு விஷயத்தில் சட்டப்படியாக சுயூரிட்டு மனுவைத் தாக்கல் செய்ய இயலுமா என்பதனை மீண்டும் டெல்லி மூத்த வழக்கறிஞர்களிடம் உறுதி செய்யவும். அதுபற்றி டிடிவி தினகரனிடம் ஆலோசித்து செயல்படவும்.
இவ்வாறு அவர் அபராதம் செலுத்துவது பற்றியும் மறு சீராய்வு மனு பற்றியும் சொல்லியிருக்கிறார்.