அரசியல்

உடைந்த கூட்டணி… : கொண்டாட்டத்தில் தேமுதிக.. வேதனையில் அதிமுக..!

அதிமுகவின் தலைமை நிர்வாகிகளின் செயல்பாடுகளில் அதிருப்தி ஏற்பட்டதால் தேசிய முற்போக்கு திராவிடர் கழகம், அதிமுக கூட்டணியிலிருந்து வெளியேறியது. ஒரு கட்சி கூட்டணி உடன்பாட்டில் திருப்தி எற்பட்டாலோ அல்லது தேர்தலில் வெற்றி பெற்றாலோதான் தங்களது சந்தோசத்தை வெளிப் படுத்துவர்கள். ஆனால் கூட்டணியில் இருந்து வெளியேறியதாலேயே தேசிய முற்போக்கு திராவிடர் கழகத்தின் நிர்வாகிகளும் தொண்டர்களும் பட்டாசுகள் வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடி மகிழ்ந்தனர்.

இதுகுறித்து அதிமுக தொண்டர்களிடம் கேட்டபோது அதிமுக தலைமையில் கடந்த காலங்களில் கூட்டணிப் பேச்சு வார்த்தை, தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட அனைத்து பணிகளும் ஜெயலலிதா தலைமையில் தான் நடந்தது. தற்போது இருக்கும் தலைவர்களுக்கு அனுபவம் கிடையாது. போயஸ் கார்டனிலோ, அதிமுக தலைமை அலுவலகத்திலோ மட்டும் தான் கட்சிப் பணிகள் நடைபெறும். ஆனால் தற்போது நட்சத்திர விடுதிகளில் தான் கட்சிப் பணிகள் நடந்து வருகிறது.

முதல்வர், துணை முதல்வர் இவர்கள் இருவருக்கும் இடையே சுமூகமான உறவு இல்லாததால் கட்சிக்கு ஆரோக்கியமான முடிவுகளை எடுக்க முடியவில்லை. தலைமையில் உள்ள நிர்வாகிகள் அமைச்சர்கள் ஆகியோரின் சுயநலத்திற்காக அதிமுக என்கிற கட்சியை அழிவுப் பாதைக்கு அழைத்துச் செல்கிறார்கள். வேட்பாளர்கள் தேர்வில் பழனிச்சாமி தனது விசுவாசிகள் அதிகமாக இருக்க வேண்டும் என்று நினைத்து செயல்படுகிறார். பன்னீர் செல்வமோ இருவருக்கும் சமமாக பிரித்துக் கொள்வோம் என்கிறார். இவர்களின் ஈகோவால் கட்சித் தொண்டர்கள் விரக்தியடைந்துள்ளனர். முதல்வரின் அவசர அறிவிப்புகளால் தொண்டர்களும், குறிப்பிட்ட சமுதாய மக்களும் அதிருப்தியடைந்துள்ளனர்.

கடந்த ஐந்து ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் கட்சியினர் யாரும் சம்பாதிக்கவில்லை. அமைச்சர்களும், மேல்மட்ட நிர்வாகிகளும் தான் சம்பாதித்து இருக்கிறார்கள். இந்த தேர்தலில் அதிமுக தோல்வியடைந்தால் தொண்டர்கள் பெரும்பாலானோர் மாற்றுக்கட்சிக்குச் சென்று விடுவார்கள். முதல்வரும், துணை முதல்வரும் ஒருமனதோடு மனச்சாட்சிக்கு கட்டுப்பட்டு கட்சியின் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும்.

கூட்டணி கட்சிகளிடம் சுமூகமாக பேச்சுவார்த்தை நடத்தியிருந்தால் தேமுதிக உள்ளிட்ட சில கட்சிகள் அதிமுக கூட்டணியிலிருந்து வெளியேறியிருக்க மாட்டார்கள். பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்திய இடஒதுக்கீடு பிரச்சனையில் முதல்வர் அவசர முடிவு எடுத்ததால் தென் மாவட்டங்கள் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் பெரும்பான்மையாக வசிக்கும் முக்குலத்தோர் சமூகத்தின் வாக்குகள இந்த தேர்தலில் அதிமுகவிற்கு வருவது சந்தேகம் தான். அதிமுக கூட்டணியில் பாரதிய ஜனதா இருப்பதால் சிறுபான்மையினர் வாக்குகளும் வராது. விவசாயிகளுக்கு எதிராக இரண்டு வேளாண் சட்டங்களை பாரதிய ஜனதா கட்சி கொண்டு வந்ததால் நாடு முழுவதும் விவசாயிகள் போராடும் போது முதல்வர் அந்தச் சட்டங்களை நியாயப்படுத்தியும், எட்டுவழிச் சாலை திட்டத்தையும் நியாயப்படுத்தி பேசி வருகிறார்.

குறிப்பிட்ட சில மாவட்டங்களில் மட்டும் வாக்கு வங்கியை வைத்திருக்கும் பாட்டாளி மக்கள் கட்சிக்கும், பாரதிய ஜனதா கட்சிக்கும் அதிக இடங்களை ஒதுக்கி தேமுதிகவுக்கு குறைந்த இடங்களை வழங்கியதால் தேமுதிக அதிமுக கூட்டணியிலிருந்து வெளியேறிவிட்டது. வடமாவட்டங்களில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு இணையாக தேமுதிகவுக்கும் வாக்கு வங்கி உள்ளது. அந்த வாக்கு வங்கி அதிமுக வெற்றி பெற உதவலாம். ஏற்கனவே அமமுக அதிமுகவை மீட்பதாக கூறி தேர்தலில் போட்டியிடுகிறது. அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் டெல்டா மாவட்டங்களிலும், தென் மாவட்டங்களிலும் அதிமுகவிற்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

சசிகலா சிறையிலிருந்து வந்ததும் அவரிடம் முரண்டு பிடிக்காமல் பேச்சு வார்த்தை நடத்தி அமமுகவை அதிமுகவோடு இணைத்து கட்சியை பலப்படுத்தி இருக்கலாம். என்னதான் அரசின் சாதனைகளை மக்களிடம் எடுத்துச் சென்று வாக்குகள் கேட்டாலும் முதல்வர் பழனிச்சாமியின் கடைசிகால அவசர அறிவிப்புகளும் அவரது செயல்பாடுகளும் மக்களிடம் எடுபடாது. அதிமுக என்பது அனைவருக்குமான பொதுவான இயக்கம். ஆனால் தற்போது குறிப்பிட்ட சமுதாயத்தினர் மட்டும் ஆதிக்கம் செலுத்தும் இயக்கமாக மாறியிருப்பதை அதிமுக தொண்டர்களே ஏற்காத போது மற்ற சமூக மக்கள் எப்படி ஏற்றுக் கொள்வார்கள். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்களானதும் மன்னர்களைப் போல் செயல்பட தொடங்கிவிட்டனர்.

தங்களுக்கு வாக்களித்த மக்களையும், தொண்டர்களையும் மறந்துவிட்டு தங்களது குடும்பத்தினரும், உறவினர்களும் சம்பாதித்துக் கொண்டனர். கட்சிக்காரர்கள் யாருக்கும் எதுவும் செய்யாத அமைச்சர்களுக்கு அதிமுக தொண்டர்கள் எப்படி வேலை செய்வார்கள். ஜெயலலிதா இருந்தவரை வெளிஉலகிற்கு வருவதற்கே பயந்து கிடந்தவர்கள் அவர் மருத்துவமனையில் இருக்கும்போதே உளற ஆரம்பித்துவிட்டனர். அமைச்சர்களின் உளறல் பேச்சுக்களை பொழுது போக்காக மட்டுமே மக்கள் ரசித்தனர். இவர்களெல்லாம் அமைச்சர்கள் தேர்தல் வரட்டும் பார்த்துக் கொள்வோம் என்று அப்போதே மக்கள் பேசத் தொடங்கிவிட்டனர்.

ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதால் திமுக ஆட்சிக்கு வந்ததும் விசாரிக்கப்பட்டு தண்டனை பெற்றுத் தருவதாக திமுக தலைவர் கூறிவருகிறார். ஏன் இவர்களே முறையாக விசாரணை செய்து அதற்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கலாமே என்று அதிமுக தொண்டர்களே பேசிக்கொள்கிறார்கள். இந்தத் தேர்தலில் அதிமுக தோற்று திமுக ஆட்சி அமைந்தால் முதல்வர் உள்ளிட்ட அமைச்சர்களுக்கு சிக்கல்தான். சசிகலாவை கட்சியில் இணைத்து ஜெயலலிதா மரணத்தில் ஏற்பட்ட சந்தேகத்தை போக்கியிருக்கலாம். அவருக்கென தற்போது இருக்கும் செல்வாக்கை அதிமுகவின் வாக்குகளாக மாற்றி தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் மூன்றாவது முறையாக ஆட்சியமைத்து சாதனையும் செய்திருக்கலாம்.

முதல்வர் பழனிச்சாமியும், துணை முதல்வர் பன்னீர்செல்வமும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து கட்சியின் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்பட்டால் மட்டுமே கட்சியை காப்பாற்ற முடியும். நான் பெரிய ஆளா? நீ பெரிய ஆளா? என்று செயல்பட்டல் தேர்தலுக்குப் பிறகு அதிமுகவில் உள்ள தொண்டர்கள் திமுகவிற்கு செல்வதை தடுக்க முடியாது. ஆட்சி அதிகாரம் இருந்ததால் மட்டுமே இடைத்தேர்தலில் வென்றோம். அந்த வெற்றி ஆட்சிக்கு கிடைத்த வெற்றியாக நினைத்து செயல்பட்டால் கடந்த பாராளுமன்ற தேர்தலில் அதிமுகவிற்கு கிடைத்த முடிவுகள் தான் இந்த தேர்தலிலும் கிடைக்கும் என்று அதிமுக தொண்டர்கள் வேதனையுடன் தங்களது கருத்துக்களை தெரிவித்தார்கள்.

சூரிகா

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button