அரசியல்

முதல்வர் நாற்காலி மீது ஸ்டாலினுக்கு வெறி

வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் ஆகஸ்ட் 5-ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்த நிலையில் தி.மு.க, அ.தி.மு.க, நாம் தமிழர் ஆகிய கட்சிகள் வேட்பாளர்களைக் களமிறக்கியுள்ளனர்.
தி.மு.க சார்பில் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த், அ.தி.மு.க சார்பில் கூட்டணி கட்சி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் ஆகியோர் களம் காண்கின்றனர். கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். ஆம்பூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார். அந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ, உதயகுமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.
அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, ‘வேலூர் தேர்தல் ரத்து செய்யபட்டதற்கு தி.மு.கதான் காரணம். மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி என்றார் மு.க.ஸ்டாலின். ஆனால் மக்கள் தி.மு.கவை தொங்கலில் விட்டுவிட்டார்கள்.

பொய் பேசுபவர்களுக்கு டாக்டர் பட்டம் கொடுக்க வேண்டும் என்றால் மு.க.ஸ்டாலினுக்கு கொடுக்கலாம். கல்விக் கடன் ரத்து, விவசாயக் கடன் ரத்து, குடும்பத்திற்கு 6 ஆயிரம் ரூபாய் என பொய் வாக்குறுதிகளை முன்வைத்து வெற்றி பெற்றது தி.மு.க.
அ.தி.மு.க எதை செய்தோமோ அதை சொன்னோம் எதை சொன்னோமோ அதை செய்தோம். தி.மு.கவில் பல முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களின் வாரிசுகளுக்கு சீட்டு கொடுக்கபட்டது. தி.மு.க ஒரு குடும்ப கட்சி. அ.தி.மு.கவிற்கு மக்கள் தான் குடும்பம். தி.மு.க கட்சி அல்ல. அது கம்பெனி. சில துரோகிகள் அ.தி.மு.வை உடைக்கப் பார்த்தார்கள். அது நடக்காது என்று கூறினார்.
மேலும் வேலூர் திமுக வேட்பாளர் (கதிர் ஆனந்த்) ஒரு வாரிசு தானே என்று முதலமைச்சர் பழனிசாமி கடுமையாக சாடினார்.

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் பகுதியில் நடைபெற்ற பரப்புரைக் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, “முதல்வர் நாற்காலி மீது மு.க.ஸ்டாலினுக்கு அவ்வளவு வெறி. வீதியில் சட்டையை கிழித்துக்கொண்டு சென்றால் என்ன நினைப்பீர்கள். சிறுபான்மை மக்களின் குரல் மேலவையில் ஒலிக்க வேண்டும் என்பதற்காக பதவி கொடுத்துள்ளோம். அதிமுகவை உடைக்க முயற்சிப்பவர்களுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள். உதயநிதிக்கு சட்டப்பேரவையில் புகழ்பாடுகிறார்கள். குடும்பத்திற்காக பாடுபடும் கட்சி திமுக.
தொண்டர்களால் உருவான குடும்பக் கட்சி அதிமுக. குடும்பத்தில் இருப்பவர்களால் ஆன கட்சி திமுக. வேலூர் தொகுதியில் திமுக சார்பில் யார் போட்டியிடுகிறார்கள்? அவர் ஒரு வாரிசு தானே? திமுகவுடன் கூட்டணி வைத்ததால்தான் கர்நாடகாவிலும் காங்கிரஸ் ஆட்சியை இழந்தது. ஸ்டாலினின் ராசி அப்படி. நாட்டை ஆள திமுகவுக்கு தகுதி இல்லை. சட்டப்பேரவை மாண்பை சீர்குலைத்தவர்கள் திமுகவினர்.
கர்நாடகாவில் நடந்தது போல் தமிழகத்திலும் நடக்கும் என்கிறார் ஸ்டாலின். அதிமுக ஆட்சியை கவிழ்க்க திமுக முயற்சி செய்து பார்த்தது. ஏன் நடக்கவில்லை ? அதிமுகவின் தொண்டனை கூட தொட்டுப் பார்க்க முடியாது. ஒரு காலத்திலும் அதிமுக அரசை வீழ்த்தவோ, கவிழ்க்கவோ, கட்சியை உடைக்கவோ முடியாது” என்று கடுமையாக விமர்சித்து பேசினார்.

வேலூர் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் தீவிர பிரசாரம் மேற்கொண்டுள்ள நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நடைபயணம் மேற்கொண்டும், திண்ணை பிரசாரம் செய்தும் வாக்கு சேகரித்தார்.
வாணியம்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தெக்குப்பட்டு கிராமத்தில் திண்ணைப் பிரசாரம் மேற்கொண்டார். மக்களோடு மக்களாக அமர்ந்து அவர்களது குறைகளை கேட்டறிந்தார். சாலை வசதி, பேருந்து வசதி, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை என கிராம மக்கள் முறையிட்டனர். அடிப்படை வசதிகளை நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

மேலும் திம்மாம்பேட்டை – ஆவாரங்குப்பம் செல்லும் சாலையில் தரைப்பாலம் கட்டி முடிக்காததால் 25 கிலோ மீட்டர் சுற்றி செல்லவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக கிராம மக்கள் தெரிவித்தனர். தரைப்பாலத்தை கட்டிமுடிக்க திமுக உரிய நடவடிக்கை எடுக்கும் என்று மு.க.ஸ்டாலின் உறுதியளித்தார்.
கே.வி.குப்பம் பகுதியில் மு.க.ஸ்டாலின் பேசும்போது, ‘கதிர் ஆனந்த் வெற்றி பெற்றால் நிச்சயம் கே.வி.குப்பம் இடையே சிப்காட் தொழிற்சாலை கொண்டு வரப்படும். இதன் மூலமாக வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு நிச்சயமாக கிடைக்கும்.
அரசு மகளிர் கலைக் கல்லூரி கொண்டுவரப்படும். நடைபெற்ற இடைத்தேர்தலில் இன்னும் 5 இடங்களில் கூடுதலாக வெற்றி பெற்றிருந்தால் எடப்பாடியின் கதை கந்தல் தான். மு.க.ஸ்டாலின் கனவு காண்கிறார், கனவு காண்கிறார் என எடப்பாடி கூறிக்கொண்டு இருக்கிறார். நிச்சயம் இந்த ஆட்சி கவிழப்போகிறதா இல்லையா என பொறுத்திருந்து பாருங்கள்.

ஏன் தற்போது கர்நாடகாவில் ஆட்சி கவிழ வில்லையா? நிச்சயம் இந்த அரசு கவிழும். தேனியில் அ.தி.மு.க வெற்றி பெற்ற கதை உலகிற்கே தெரியும். வெற்றிபெற்ற தி.மு.க கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எல்லாம் மக்களின் பிரச்சினைக்காக நாள்தோறும் குரலெழுப்பி வருகின்றனர்.


அவர்களின் குரலுக்கு வலு சேர்க்க கதிர் ஆனந்த் வெற்றி உதவும். சட்டமன்ற இடைத் தேர்தல் நடைபெற்ற 22 இடங்களில் 13 இடங்களில் தி.மு.க வெற்றி பெற்றது. திருவாரூர் தவிர்த்து 12 இடங்கள் அ.தி.மு.கவின் இடங்கள். அதிலும் வெற்றி பெற்றுள்ளோம். நிச்சயம் விரைவில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரும்.
தி.மு.க ஆட்சிக்கு வரும். எதிர்த்து நிற்கும் வேட்பாளரின் பெயரை எல்லாம் சொல்லி அவருக்கு விளம்பரம் தேடித்தர விரும்பவில்லை. அவர் வெற்றிபெற்றால் பத்தோடு பதினொன்றாக அடிமைகளோடு அடிமையாக இருப்பார். ஏற்கெனவே தி.மு.க 23 மக்களவைத் தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.
இந்தியாவின் மூன்றாவது பெரிய கட்சியாக தி.மு.க உள்ளது. கடந்த தேர்தலில் தி.மு.கதான் அதிக சதவீத வாக்குகள் வாங்கியுள்ளது. இந்தத் தேர்தல் ஏப்ரல் மாதமே நடைபெற்றிருக்க வேண்டிய தேர்தல். ஆனால் சதியின் காரணமாக தேர்தல் திட்டமிட்டு நிறுத்தப்பட்டது. தி.மு.க மீது களங்கம் ஏற்படுத்தி வெற்றி பெற்றுவிடலாம் என எண்ணி தேர்தல் நிறுத்தப்பட்டது. தி.மு.க மீது களங்கம் ஏற்படுத்த முயன்றவர்களுக்கு சரியான பாடத்தை மக்கள் அளித்துள்ளனர்’ என்று பேசினார்.


பழனிச்சாமி கூறியது குறித்து, வேலூர் அதிமுகவினர் நம்மிடம் கூறுகையில், எது எப்படியோ வேலூரில் வெற்றி யாருக்கு என்ற போட்டியில் பழனிச்சாமியும், ஸ்டாலினும் ஒருவருக்கொருவர் கடுமையாக விமர்சித்துள்ளனர். இந்த தேர்தல் முதல்வர் நாற்காலிக்கான தேர்தல் அல்ல. இவர்கள் இருவருக்கிடையில் பன்னீர் செல்வம் டெல்லி சென்று தனது மகனுக்கு கேபினட் அமைச்சர் பதவி கேட்டதோடு மட்டுமல்லாமல் என்னை யாரும் மதிப்பது இல்லை. அதனால் என்னை எப்படியாவது முதல்வர் நாற்காலியில் அமர்த்துங்கள் என்று அமித்ஷாவிடம் கூறி வந்திருக்கிறார். பழனிச்சாமி முதல்வர் ஆன நாட்கள் அதிகமாக அதிகமாக பன்னீருக்கும் அந்த முதல்வர் நாற்காலி மீதான வெறி அதிகரிப்பதை பழனிச்சாமிக்கு புரிந்தால் சரி என்கிறார்கள் வேலூர் அதிமுகவினர்.

– குண்டூசி

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button