மீண்டும் சரக்குப் பெட்டக மாற்றுத் துறைமுகம்… : போராட்டத்தில் இறங்கும் மக்கள்
கன்னியாகுமரி மாவட்டத்தில் கைவிடப்பட்ட சரக்குப் பெட்டக மாற்று துறைமுகத்தை மீண்டும் செயல்படுத்தப் போவதாக வந்த அறிவிப்பால் கன்னியாகுமரி மீனவ மக்களுடன் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக சர்வதேச சரக்கு பெட்டக மாற்று முனைய எதிர்ப்பு மக்கள் இயக்க ஆலோசகர் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி தேவசகாயம் நாகர்கோவிலில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.
கன்னியாகுமரி அருகே சரக்கு பெட்டக மாற்று துறைமுகம் அமைக்கப்படவுள்ளதாக தூத்துக்குடி துறைமுக கழகம் கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இதனையடுத்து இந்த சரக்கு பெட்டக மாற்று துறைமுக எதிர்ப்பு போராட்ட குழு அமைக்கப்பட்டு அதற்கான கூட்டம் நாகர்கோவிலில் நடந்தது.
இந்த கூட்டத்திற்கு முன்னதாக இந்த அமைப்பின் ஆலோசகர் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி தேவசகாயம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது “கன்னியாகுமரி மாவட்டத்தில் சரக்குப் பெட்டக மாற்று துறைமுகம் அமைக்க கடந்த ஒன்றரை வருடங்களாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வந்தது. ஆனால் இதுவரை எந்த அறிக்கையும் தாக்கல் செய்யப்படவில்லை.
ஒரு சரக்கு பெட்டக மாற்று துறைமுகம் அமைய வேண்டும் என்றால் அதற்கு தொழில்நுட்பம், பொருளாதாரம், நிதிநிலை, சமூக நிலை போன்ற சாத்தியக்கூறுகள் தேவை. ஆனால் இதில் எந்த விதமான சாத்தியக்கூறுகளும் இல்லாத நிலையில் தற்போது கன்னியாகுமரி மாவட்டத்தில் கோவளத்திற்கும் மணக்குடிக்கும் இடையில் செயல்படுத்த முனைப்பு காட்டி வருகின்றனர்.
இந்தத் திட்டத்தால் கனிம வளம், மீன்வளம், கடல்வளம் மலைவளம் போன்ற அனைத்துவகையான வளங்களும் பாதிக்கப்பட்டு மாவட்டமே இருண்ட சூழ்நிலையில் தள்ளப்படும் என்பதால் இந்த திட்டத்தை செயல்படுத்தக் கூடாது என்பதில் முனைப்புடன் உள்ளதாகவும் இதற்காக போராட்டக் குழு அமைக்கப்பட்டு பொதுமக்களுடன் போராட முடிவு செய்துள்ளதாகவும் தேவ சகாயம் தெரிவித்தார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடலோரப் பகுதிகளில் 68 கிலோமீட்டர் சுற்றளவில் மீனவ கிராமங்களில் மீனவர்கள் வசித்து வருகிறார்கள். இந்தப் பகுதியில் மீன் பிடி துறைமுகம் உள்ளது. சின்னமுட்டம், முட்டம், தேங்காய் பட்டினம் துறைமுகங்கள் இந்தப் பகுதியில் தான் உள்ளன. விசைப் படகுகள், நாட்டுப் படகுகளில் ஏராளமான மீனவர்கள் ஆழ்கடலில் சென்று மீன்பிடித்து வருவதையே வழக்கமாக செய்து வருகிறார்கள். மாதக்கணக்கில் மீனவர்கள் தங்கள் குடும்பத்தையும், உறவுகளையும் பிரிந்து உயிரை பணயம் வைத்து ஆழ்கடலில் மீன்பிடித்து பிழைப்பு நடத்தி வருகின்றனர்.
இவ்வாறு ஆழ்கடலில் மீன்பிடிக்கும்போது புயல், மழை போன்ற இயற்கை சீற்றங்களாலும் பருவநிலை மாற்றங்களாலும் மீனவர்களை தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால் உயிரிழப்புகளும் ஏராளமாக ஏற்படுகிறது. மீனவர்களின் உடமைகளும் சேதமடைவதால் மீனவர்கள் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகிறார்கள். குமரி மாவட்டத்தில் மட்டும் விசைப்படகுகள், நாட்டுப்படகுகள் என மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் ஆழ்கடலில் மீன்பிடித்து வருகிறார்கள். மீனவர்களுக்கு ஆபத்து நேரங்களில் உதவி செய்யவும், பாதுகாக்கவும் கடலோர காவல் படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். தொலைதூரங்களில் ஆபத்தில் சிக்கியுள்ள மீனவர்களை துல்லியமாக கண்டறியும் வகையில் விமான வசதி செய்து கொடுத்தால் வசதியாக இருக்கும் என்கிறார்கள் கன்னியாகுமரி கடலோர காவல்படையினர்.
– சந்திரசேகர்