அதிமுகவை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது – ராஜவர்மன் எம்.எல்.ஏ.,
தமிழக சட்டமன்ற தேர்தல் களம் சூடுபிடித்திருக்கும் நிலையில், சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ள அமமுக, எத்தனை தொகுதிகளை கைப்பற்றும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
உட்கட்சி பூசலால் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட டிடிவி தினகரன், 2018ம் ஆண்டு மார்ச் மாதம் அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தை தொடங்கினார். அதிமுகவை மீட்டெடுப்பதை தமது லட்சியம் எனவும் சூளுரைத்தார். பெங்களூரு சிறையில் சசிகலா இருந்த போது, அவ்வப்போது அவரை சந்தித்து ஆலோசனை நடத்தினார். சிறையில் இருந்து சசிகலா அண்மையில் வெளியே வந்த சூழலில், அதிமுகவும் – அமமுகவும் இணையலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் யாரும் எதிர்பாராத வகையில், அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார் சசிகலா. எனினும் அமமுக தேர்தலில் போட்டியிடுவது உறுதி என அறிவித்த தினகரன், பல்வேறு கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
அமமுக கூட்டணியில் ஓவைசியின் கிமிவிமிவி கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. விடுதலை தமிழ்ப்புலிகள், மக்களரசு, கோகுல மக்கள் கட்சி, மருது சேனை ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.மக்கள் நீதி மய்யத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்த எஸ்டிபிஐ கட்சி, உடன்பாடு எட்டப்படாததால், அமமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. அக்கட்சிக்கு ஆலந்தூர் ஆம்பூர், பாளையங்கோட்டை, திருச்சி மேற்கு, திருவாரூர் மற்றும் மதுரை மத்தி ஆகிய 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே கடந்த மக்களவை தேர்தலில், அமமுகவுடன், எஸ்டிபிஐ கூட்டணி அமைத்து போட்டியிட்டது.
இந்நிலையில், அதிமுகவில் தற்போதைய எம்எல்ஏக்கள் 41 பேருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளதால், அவர்களது ஆதரவாளர்களும் கடும் அதிருப்தியில் உள்ளனர். இதனால், அதிமுகவின் அதிருப்தியாளர்களின் வாக்குகளும் அமமுகவுக்கே செல்ல வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. திமுக, அதிமுகவுக்கு அடுத்தபடியாக அமமுக 3வது பெரிய அணியாக வலம் வரும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
அதிமுக சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜவர்மன் டிடிவி திகரனை சந்தித்ததுடன், அமமுகவில் இணைந்துள்ளார். சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட அவருக்கு வாய்ப்பு வழங்கப்படாத நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
அமைச்சர் ரஜேந்திர பாலாஜியுடன் அவருக்கு மோதல் போக்கு இருந்ததால் அதிமுகவில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ராஜவர்மன், “சாத்தூர் தொகுதி நிர்வாகிகள் அனைவரும் அமமுகவில் இணைந்துள்ளோம். உழைப்பவர்களுக்கு அதிமுகவில் வாய்ப்பில்லை என்பதே வருத்தமாக உள்ளது. தொகுதியில் இருக்கும் 1 லட்சம் நபர்களை கூட விசாரிக்கலாம்.
ராஜேந்திர பாலாஜியால்தான் எனக்கு போட்டியிட வாய்ப்பளிக்கவில்லை. ராஜேந்திர பாலாஜிக்காக கட்சியா அல்லது கட்சிக்கு ராஜேந்திரபாலாஜியா?. மீண்டும் தற்போது இருக்கும் தொகுதியில் ராஜேந்திர பாலாஜி சட்டமன்ற உறுப்பினராக போட்டியிடுவாரா? முதல்வர், துணை முதல்வரை ஏமாற்றி வருகிறார்.
வெற்றி வாய்ப்பிருக்கும் யாருக்கும் அதிமுகவில் வாய்ப்பு வழங்கவில்லை. தேர்தலுக்கு பின் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் முடிவு செய்யும் இடத்தில் இருப்பார். இரண்டாண்டு காலமாக நான் ஆற்றிய பணிகள் என் தொகுதி மக்களுக்கு தெரியும். மக்களின் ஆதரவோடு, நிர்வாகிகள் வேண்டுதலோடுதான் அமமுகவில் இணைந்துள்ளோம்.
இது ஆரம்பம் மட்டுமே. சின்னம்மாவுக்கு செய்த துரோகத்திற்காக, மக்கள் அதிமுகவிற்கு பாடம் புகட்டுவார்கள். அனைத்து சமுதாய மக்களும் இருக்கும் இடம் சாத்தூர் தொகுதி. ராஜேந்திர பாலாஜி செய்ததை யாரும் மறக்கமாட்டார்கள். அவர் காசு, பணம், பதவி இருக்கும் திமிறில் பேசி வருகிறார்.
வெயிட் அன் சீ. முதல்வர், துணை முதல்வருக்கு சாத்தூர் தொகுதியில் நடக்கும் பிரச்சனைகள் தெரியும். இனி அதிமுகவை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது. அனைத்து சமுதாய மக்களுக்கும் நன்மை செய்தவர் சின்னம்மா. அவரால் பலர் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்களாக ஆகியுள்ளனர்.
சசிகலா அமைதியாக இல்லை. இந்த தேர்தல் முடிவிற்காக காத்திருக்கிறார்கள் நிரந்தரமாக அதிமுகவை சின்னம்மா மட்டுமே காப்பாற்றுவார். உண்மை உறங்கி கொண்டிருக்கிறது. பொய்கள் நடமாடி கொண்டிருக்கிறது” இவ்வாறு கூறினார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஓய்.எம்.சி.ஏ மைதானத்தில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். இதனையடுத்து பேசிய தினகரன், “எங்கள் கூட்டணி கட்சியில் உள்ள ஒவைசி பெயர் தமிழகத்தில் ரஜினிகாந்த் பெயர் போல் நன்றாக தெரிந்திருக்கிறது. எம்.ஜி.ஆர் அவர்கள் உருவாக்கிய அ.தி.மு.க.வை மீட்டெடுக்க உருவாக்கப்பட்ட கட்சி தான் அ.ம.மு.க. நிச்சயம் மீட்டெடுப்போம்.
இந்த கூட்டணி அனைத்திற்கும் பொதுவானவர்கள் கூட்டணி. ஜனயநாயக முறையில் அ.தி.மு.க-வை மீட்டெடுக்க உருவாக்கிய இயக்கம் தேர்தலுக்கு பிறகு நிச்சயம் மீட்டெடுக்கும் அதை சாத்தூர் எம்.எல்.ஏ தொடங்கியிருக்கிறார்.
சாத்தூர் எம்.எல்.ஏ மட்டும் வருவார் என நினைத்தோம் அந்த மாவட்டமே வந்துவிட்டது. இதுதான் ஆரம்பம். தேர்தல் முடிந்தவுடன் பண மூட்டைகளை விட்டு விலகி உண்மையான அம்மாவின் தொண்டர்கள் ஒன்றிணைவார்கள். அதிமுக மீட்டெடுக்கப்படும். தேர்தல் அறிக்கையில் சும்மா பேச்சுக்கு 1000,1500 கொடுப்போம் என அனைவரையும் ஏமாற்ற நான் விரும்பவில்லை. யார் யார் மாமியார் வீட்டுக்கு போவார்கள் என தெரியும் எனவும் டிடிவி தினகரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
– கா.ரபீக் அஹமது