சிபிஐ க்கு பயந்து மோடியை புகழும் எம்பி
நரேந்திர மோடியை மீண்டும் பிரதமராக்கும் முயற்சியில் ஒன்றுப்பட்டுள்ளதாகவும், அதில் நிச்சயம் அதிமுக-வினர் வெற்றிப் பெறுவோம் என அதிமுக மக்களவை உறுப்பினர் அன்வர் ராஜா கூறியுள்ளார். கடந்த டிசம்பர் 27ம் தேதி முத்தலாக் மசோதா மீது மக்களவையில் விவாதம் ஏற்பட்ட போது, அதற்கு எதிராக முழங்கியவர் அன்றைய ராமநாதபுரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் அன்வர் ராஜா. அன்று அவர் பேசியது தென்னிந்தியாவின் குரலாக ஓங்கி ஒலித்தது.
பாஜக-வின் ஒவ்வொரு நடைமுறைகளுக்கும் அவர் விமர்சனத்தையே முன் வைத்தார். இவருடைய கருத்துக்கள் அதிமுக தலைமையிடக் கருத்தாக அமைந்தது. இதனால் மக்களவைத் தேர்தலில் அதிமுக-&பாஜக கூட்டணி ஏற்படாது என்பது தான் பலரது கருத்தாக இருந்தது.
ஆனால் இவை அனைத்தும் ஒரு சில வாரங்களில் முடிவுக்கு வந்தன. இரண்டு கட்சிகளுக்கும் இடையில் கூட்டணி உடன்பாடு எட்டப்பட்ட பின் எல்லாமே மாறியது. அதுவரை மக்களவையில் எதிர்க்கட்சியினரோடு பாஜக-வை விமர்சித்து வந்த தம்பிதுரை மற்றும் அன்வர் ராஜா இருவரும் பாஜக-வுக்கு ஆதரவாக கருத்துக்களை தெரிவித்தனர்.
மேலும், ஆதரவு காட்டுவதை விட, விமர்சனங்களை எதுவும் முன்வைக்காமல் இருந்தனர். இன்னும் அப்படி தான் நிலைமை உள்ளது. ஆனால் அன்வர் ராஜா இதில் சற்று முரண்பட்டு நின்றார். ஆட்சியை காப்பாற்றி கொள்வதற்காகவே பாஜக உடன் அதிமுக கூட்டணி அமைத்துக் கொண்டதாக தெரிவித்தார்.
இதில் தமிழக அரசியல் களத்தில் புயலை கிளப்பியது. இதன் பலனாக ராமநாதபுரம் மக்களவைத் தேர்தலில் அன்வர் ராஜாவுக்கு அதிமுக தலைமை சீட் தர மறுத்தது. இதற்கு பெரியதாக அவர் கருத்து தெரிவிக்கவில்லை. ஆனால் அவர் அதிமுக மீது அதிருப்தியில் இருந்ததாக சொல்லப்பட்டது. எனினும் அன்வர் ராஜாவை கட்டுக்குள் வைத்திருக்க அதிமுக முடிவு செய்தது. அதன்படி மதுரை வக்பு வாரிய கல்லூரியில் உதவிப் பேராசிரியர்கள் நியமன முறைகேடு வழக்கு விசாரணை துரிதப்பட்டது என்றும், அதனால் தான் சென்னையில் உள்ள வக்பு வாரிய அலுவலகத்தில் சி.பி.ஐ அதிகாரிகள் கடந்த 22ம் தேதி சோதனை நடத்தினர் என்றும் நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து தகவல்கள் வெளிவந்துள்ளன.
இந்தச் சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாகவும். இது அன்வர் ராஜாவுக்கு சிக்கல் ஏற்படுத்தலாம் எனவும் சொல்லப்பட்டன. தொடர்ந்து சிபிஐ அதிகாரிகள், அவரிடமும் அவரது வீட்டில் நீண்டநேரம் விசாரணை நடத்தினர்.
சிபிஐ அதிகாரிகளின் சோதனை வைத்து அன்வார் ராஜாவுக்கு அதிமுக மேலிடம் சீட் வழங்கவில்லை என்று சொல்லப்பட்டது. ஆனால் உண்மையில், வேறொரு வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளதால், அன்வர் ராஜாவால் அதிமுக-வுக்கு தோல்வி ஏற்பட வாய்ப்புள்ளது. அதை முன்வைத்து, அவரை கட்டுக்குள் வைத்திருக்கவே சிபிஐ வைத்து மத்திய அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக அவரது ஆதரவாளர்கள் தகவல் கூறுகின்றனர்.
இதன் விளைவாக தற்போது செய்தியாளர்களை சந்தித்த போது, மோடியை பிரதமராக்கும் கொள்கையில் ஒன்றுபட்டுள்ளோம். அதற்காக அதிமுக-வினர் கடுமையாக உழைப்போம் என அவர் தெரிவித்துள்ளார். எனினும், தமிழ்நாடு வக்பு வாரியத்தில் ஊழல் முறைகேடு தொடர்பாக சிபிஐ நடத்திய விசாரணையை தேர்தல் பிரசாரத்தில் பயன்படுத்த எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன என்பது இங்கே கவனிக்கப்பட வேண்டியது.