வெளிமாநிலங்களில் சிக்கித்தவிக்கும் தமிழர்கள்.. மீட்க அரசு முடிவு…
இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள முதுகுளத்தூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த கிராமத்தினர் மேற்கு வங்கம் மாநிலத்தில் உள்ள ஹவுரா மாவட்டத்திற்கு பிழைப்பு தேடிச் சென்று அங்கு இட்லி வியாபாரம் செய்து வந்தனர்.
கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் 450க்கும் மேற்பட்டமக்கள் 40 நாட்களுக்கும் மேலாக ஹவுரா ரயில்நிலையம் அருகே வாழ்வாதாரம் இழந்து தவித்துவருகிறார்கள். இவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு வருவதற்கு வழி தெரியாமல் வாட்ஸ்அப் மூலம்கதறி அழுது வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தனர்.
இதனைப் பார்த்துகண் கலங்கிய பத்திரிகை ஆசிரியரும், சுதந்திர இந்தியா பத்திரிகையாளர்கள் சங்கத்தின்தலைவருமான CMT ராஜா அவர்களைத் தொடர்பு கொண்டு அவர்களுக்கு ஆறுதல் கூறி அவர்களின்விபரங்களைப் பெற்று சம்பந்தப்பட்ட இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் மற்றும்மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார் ஆகிய இருவரிடமும் பேசி விபரங்களை கூறிஅவர்களை மீட்க ஏற்பாடு செய்ய வேண்டி கேட்டுக் கொண்டார்.
மாவட்ட ஆட்சியரும்,மாவட்ட கண்காணிப்பாளரும் CMT ராஜா கொடுத்த தகவலின் அடிப்படையில் கல்கத்தாவில் உள்ளஹவுரா மாவட்ட இரயில் நிலையம் அருகே சிக்கித் தவித்த 450க்கும் மேற்பட்டவர்களை கைபேசியில்தொடர்பு கொண்டு பேசி விபரங்களைப் பெற்று சம்பந்தப்பட்ட மேற்கு வங்க அதிகாரிகளை தொடர்புகொண்டு பேசி அவர்களை இராமநாதபுரத்திற்கு அனுப்பி வைக்க ஏற்பாடுகளைச் செய்தனர்.
மேற்கு வங்கத்தில் சிக்கித் தவித்தவர்களின் கோரிக்கையை நிறைவேற்றிய பத்திரிகை ஆசிரியர் ராஜாவுக்கு சம்பந்தப்பட்டவர்கள் தொலைபேசி வாயிலாக நன்றியை தெரிவித்தனர்.
—வெளிமாநிலங்களில் கல்வி கற்க, கூலி வேலைக்கு, கோயிலுக்குச் சென்று ஊரடங்கு காரணமாகச் சிக்கித் தவிக்கும் மக்களை மீட்க மத்திய அரசு சில வழிமுறைகளைக் காட்டியது இந்த வழிமுறைகளைப் பின்பற்றி தமிழ்நாடு அரசு சம்பந்தப்பட்டவர்களை மீட்க அரசு முடிவு எடுத்துள்ளது.
மேலும் தமிழ்நாட்டில் சிக்கித் தவிக்கும் வெளி மாநிலத்தவரைச் சொந்த ஊருக்கு அனுப்பும் பணியையும் அரசு தொடங்கியுள்ளது.
தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஊரடங்கு காரணமாக பொது போக்குவரத்து முற்றிலுமாக முடங்கிக் கிடக்கிறது. குறிப்பாக இந்த ஊரடங்கு காரணமாகக் கல்வி கற்க, கோவிலுக்கு, கூலி வேலைக்கு வெளி மாநிலங்கள் சென்றவர்கள் பல இடங்களில் சிக்கத் தவிக்கும் மக்களை மீட்க இணைய முகவரி உருவாக்கப்பட்டுள்ளது. வெளிமாநிலங்களில் சிக்கித் தவிக்கும் தமிழ் நாட்டினர் nonresidenttamil.org என்ற இணையப் பக்கத்திற்குச் சென்று அதில் பச்சை நிற படிவத்தில் தங்கள் சுயவிவரங்களைப் பூர்த்தி செய்ய வேண்டும். அதேபோல் தமிழ்நாட்டில் சிக்கித் தவிக்கும் வெளிமாநிலத்தவரை அவர்கள் சொந்த ஊர் கொண்டு சேர்க்கவும் மேலே குறிப்பிடப்பட்ட இணைய முகவரியில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
– சூரிகா