சூழும் அணு உலை ஆபத்து..! : வைகோ கண்டனம்
தலைநகர் சென்னையை ஒட்டிய கல்பாக்கம் அணுமின் நிலையத்தால் ஏற்படப்போகும் ஆபத்துகளைத் தொடர்ந்து மக்கள் மன்றத்தில் எடுத்துக் கூறி வருகின்றோம். இந்நிலையில், உறுப்பினர் செயலர் மற்றும் ஆணையாளர் கல்பாக்கம் நிலா கமிட்டி அவர்களின் அவசர கடிதம் ஒன்றை செங்கற்பட்டு மாவட்ட பத்திரப்பதிவு அலுவலருக்கு அனுப்பி உள்ளார்.
அந்த அரசு ஆணையில், கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சு காரணமாக, அவசர நிலை பிரகடனத்தின் போது பொதுமக்களை வெளியேற்றுவது மிகவும் சிரமத்திற்கு உள்ளாகும் என்பதால், மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசும், எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசும் இணைந்து, கல்பாக்கம் அணு உலைக்கு அருகாமையில் உள்ள, உலகப் புராதனச் சின்னமாக ஐநா மன்றத்தால் அறிவிக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டு வரும், புகழ் வாய்ந்த, பல்லவர்களின் மாமல்லபுரம், டச்சுக்காரர்களின் பழமையான துறைமுகமாக திகழ்ந்த சதுரங்கப்பட்டினம் மற்றும் கொக்கிலமேடு, மெய்யூர், எடையூர், குன்னத்தூர், நெய்குப்பி, கடும்பாடி, புதுப்பட்டினம், ஆமை பாக்கம், நெல்லூர், விட்டிலாபுரம், ஆகிய 14 க்கும் மேற்பட்ட ஊராட்சி பகுதிகளில்,
மத்திய – மாநில அரசுகளின் அரசு ஆணையின்படி, இனிமேல் பத்திரப்பதிவு மேற்கொள்ளக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது மக்கள் ஆட்சிக்கு எதிரான சர்வாதிகாரம் ஆகும். உயிர்களைப் பலிகொடுத்து விட்டு, கல்லறைகளுக்கு வெளிச்சம் பாய்ச்சும் அணு உலைகள் தேவையில்லை. அதை இழுத்து மூட வேண்டும்.
இந்த அரசு ஆணையின் காரணமாக, கதிர்வீச்சைக் காரணம் காட்டி, அப்பகுதி மக்களை நிலம் அற்றவர்களாக மாற்றி, உள்நாட்டு அகதிகளாக வெளியேற்ற மத்திய – மாநில அரசுகள் திட்டமிட்டுள்ளது.
அணு உலைகள் பாதுகாப்பானது என்றால் மக்களை ஏன் வெளியேற்ற வேண்டும்? ஆக அணு உலைகள் பேராபத்து என்பது இதன் மூலம் தெரிகிறது.
எனவே மக்கள் சக்தியும், ஜனநாயக அமைப்புகளும் ஒன்றிணைந்து போராடி தடுத்து நிறுத்த வேண்டும்.
உறங்கியவன் தொடையில் திரித்த வரை லாபம் என்று கட்சிகளும், மக்களும் நடைபெற உள்ள 2021 தமிழகத்தின் 16 ஆவது சட்டமன்ற பொதுத்தேர்தலில் கவனம் திரும்பி இருக்கும் நிலையில் சந்தடி சாக்கில் இந்த அரசாணையை வெளியிட்டு மக்களை பீதிக்கு உள்ளாக்கி இருப்பது கண்டனத்துக்குரியது.
எனவே உடனடியாக இந்த அரசாணையை திரும்பப் பெற்று, மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு உத்தரவாதம் வழங்கிட வேண்டும். இல்லை என்றால் அணுக்கதிர் வீச்சைப் போன்ற பாஜக, அதிமுக கூட்டணியை மக்கள் புறக்கணிப்பார்கள்.
தமிழக மின்வாரிய அனல்மின் நிலையங்கள் மற்றும் மின் விநியோக வட்டங்களில் விடுபட்ட மற்றும் தற்போது பணியாற்றும் ஒப்பந்த பணியாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும்.
தமிழக மின்வாரியத்தில் பல்வேறு நிலைகளில் 50000ற்கும் அதிகமாக காலிப்பணியிடங்கள் உள்ளன. இதில் களப்பணியாளர்கள் பணியிடங்கள் மட்டும் 20000ற்கும் அதிகமாக உள்ளன. இதனால் கூடுதல் பணிச்சுமையுடன் தற்போதுள்ள பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
அடிப்படைப் பணிகளான மின்கம்பம் நடுதல், மின்தடைகளைச் சரிசெய்தல் உள்ளிட்ட பணிகள் தாமதமாவதால், பொது மக்களும் அதிக சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இது போன்ற பணிகளை மேற்கொள்ள களப்பணியாளர்கள் பணி என்பது முக்கியமானது.
தற்போது கேங்க்மேன் பதவிகளுக்கு 9613 பேரை புதிதாக நியமித்துள்ளதை வரவேற்கிறேன். அதே நேரத்தில், தமிழக மின்வாரிய அனல்மின் நிலையங்களான தூத்துக்குடி, மேட்டூர் மற்றும் வடசென்னை அனல்மின் நிலையங்களில் கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கும் மேலாக 3000ற்கும் அதிகமான தொழிலாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகிறார்கள். இ.பி.எப் மற்றும் இ.எஸ்.ஐ பிடித்தம் செய்யப்பட்டு, அந்தத் தொகை சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரருக்கு வாரியத்தால் வழங்கப்பட்டு வருகிறது.
கடந்த 1999 ஆம் ஆண்டிற்குப்பிறகு அனல்மின் நிலையங்களில் ஒப்பந்தப் பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்படவில்லை. வாரியத்தின் நிரந்தரத்தன்மை வாய்ந்த பணிகளில், நிரந்தரப் பணியாளர்களுக்கு இணையாக மின் உற்பத்திக்கான அனைத்து பணிகளையும் மேற்கொண்டு வரும் ஒப்பந்தப் பணியாளர்கள், தங்களது இளமைக்காலம் முழுவதையும் வாரியத்தின் வளர்ச்சிக்காக உழைத்து, பணி நிரந்தரத்தை எதிர்நோக்கியுள்ளனர்.
அது போலவே மின்வினியோக வட்டங்களில் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டு, பணி நிரந்தரம் செய்யப்படாத கிட்டத்தட்ட 2000 ஒப்பந்தப் பணியாளர்களும், அதற்குப் பின்பாக தற்போது பணியாற்றி வரும் 4000 ஒப்பந்தப் பணியாளர்கள் என மின்வாரியத்தின் பணி நிரந்தரத்திற்காக காத்துக்கொண்டுள்ளனர். இவர்கள் அனைவரும் தமிழகத்தை தாக்கிய பல புயல் பேரிடர் காலங்களில் அர்ப்பணிப்புடன் பணியாற்றியவர்கள்.
எனவே தமிழக அரசும், மின்வாரியமும் அனல்மின் நிலையங்கள் மற்றும் மின் வினியோக வட்ட ஒப்பந்தப் பணியாளர்கள் என 9000 பேரையும் பணிநிரந்தரம் செய்வதற்கான நடவடிக்கைளை காலம் தாழ்த்தாது உடனடியாக எடுத்திட வேண்டும்.
– நமது நிருபர்