அரசியல்

ஆட்சியை தக்க வைக்க பலே திட்டத்துடன் எடப்பாடி : எச்சரிக்கும் ஸ்டாலின்..!

அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களான ரத்தின சபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகிய மூவரும் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றனர். இவர்களிடம் விளக்கம் கேட்கும் படி சபாநாயகரிடம் அரசு கொறடா ராஜேந்திரன் கடந்த ஆண்டே வலியுறுத்தி இருந்தார். இந்நிலையில் சபாநாயகர் தனபால், சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், அரசு கொறடா ஆகியோர் திடீர் ஆலோசனை மேற்கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து அரசு கொறடா ராஜேந்திரன் செய்தியாளர்களிடம் பேசுகையில், டிடிவி தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் ரத்தின சபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி சபாநாயகரிடம் வலியுறுத்தியுள்ளேன். இவர்கள் மூவரும் தினகரனுடன் இருக்கும் புகைப்படத்தையும் சபாநாயகரிடம் வழங்கி உள்ளேன் என்று தெரிவித்தார்.
கொறடாவின் பரிந்துரையைத் தொடர்ந்து மூவரிடமும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. நோட்டீஸ் அனுப்பப்படும் பட்சத்தில் 15 தினங்களுக்குள் குறிப்பிட்ட உறுப்பினர்கள் விளக்கம் அளிக்க வேண்டும். அந்த விளக்கத்தின் அடிப்படையில் சபாநாயகர் முடிவு எடுக்கலாம். விளக்கம் அளிக்கப்படாத பட்சத்தில், அவர்களை தகுதி நீக்கம் செய்ய சபாநாயகருக்கு அதிகாரம் உண்டு.
தமிழகத்தில் 22 சட்டமன்ற தொகுதிகள் காலியாக உள்ள நிலையில் ஏற்கனவே 18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டுள்ளது. மேலும் காலியாக உள்ள 4 தொகுதிகளுக்கு வருகின்ற மே 19ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
அதிமுக ஆட்சியை தக்கவைக்க வேண்டும் என்றால் இடைத்தேர்தலில் குறைந்தது 8 இடங்களில் வெற்றி பெறவேண்டும். வெற்றி பெறாத பட்சத்தில் அது அரசுக்கு பாதிப்பாக அமையும். அரசுக்கு பாதிப்பு ஏற்படும் சூழ்நிலை ஏற்படும் பட்சத்தில் டிடிவி தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்து சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைக்கலாம் என்றும், இதன் மூலம் தற்போதைய எண்ணிக்கையையே பெரும்பான்மையாகக் கொண்டு ஆட்சியை தொடர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதன் அடிப்படையில் தான் தற்போது நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நடவடிக்கைக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கடும் கண்டனங்களை தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில் மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள்மீது நடவடிக்கை எடுத்தால் திமுக சட்டசபை சபாநாயகர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மே 23ஆம் தேதி 22 சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தல் முடிவுகள் எதிர்நோக்கி இருக்கும் நிலையில், சட்ட அமைச்சர் சி.வி சண்முகம், அரசு கொறடா ராஜேந்திரன் ஆகியோர் பேரவைத் தலைவரை சந்தித்து சட்டமன்ற உறுப்பினர்கள் கள்ளக்குறிச்சி பிரபு, அறந்தாங்கி ரத்தினசபாபதி, விருத்தாசலம் கலைச்செல்வன் ஆகிய மூவர் மீதும் கட்சி தாவல் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு அளித்திருப்பதற்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு 18 சட்டமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்த பிறகு மைனாரிட்டி அரசாகவே செயல்பட்டது. அந்த வழக்கை முடிந்த வரை காலதாமதம் செய்து, 18 மாதங்களுக்கு மேல் தேர்தலே நடத்தாமல் அ.தி.மு.க. ஆட்சி தொடர மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசும், மாநிலத்தில் உள்ள மாண்புமிகு ஆளுநர் அவர்களும் சட்டவிரோதமாக அனுமதித்தனர். அதன் பலன் பா.ஜ.க.விற்கு அ.தி.மு.க.வுடன் தேர்தல் கூட்டணியாக மாறியது.
ஆனால் தமிழக மக்கள் ஒரு மோசமான அரசின் நிர்வாக சீரழிவுகளை தினம் தோறும் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். பிறகு பல சட்டமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவிக்க – அ.தி.மு.க. ஆட்சி முற்றிலும் ஒரு மைனாரிட்டி ஆட்சியாகவே இந்த மக்களவைத் தேர்தலை சந்தித்தது.
இந்நிலையில் 17ஆவது மக்களவைத் தேர்தலுடன் முதலில் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் முடிவுற்று, பிறகு உச்சநீதிமன்றம் தலையிட்டதால் வருகின்ற மே 19-ஆம் தேதி மீதியுள்ள நான்கு தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த 22 தொகுதிகளிலும் அ.தி.மு.க. படுதோல்வி அடையும் என்பதை தெரிந்து கொண்டதால் – சட்ட அமைச்சரும், அரசு கொறடாவும் தங்களது பதவியை அதிகார துஷ்பிரயோகம் செய்து பேரவைத் தலைவரை சந்தித்து இந்த மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுக் கொடுத்திருக்கிறார்கள். 22 தொகுதிகளிலும் தோல்வி அடையும் அதிமுக அரசுக்கு இருக்கின்ற மைனாரிட்டி அந்தஸ்தும் பறிபோய், ஆட்சி கவிழ்ந்து விடும் என்ற பீதியில் இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த நிகழ்வு மக்களைவைத் தேர்தலில் போட்டியிடும் பிரதமர் நரேந்திரமோடிக்கு வாழ்த்துச் சொல்ல துணை முதலமைச்சரும் – அமைச்சர்களும் வாரணாசி சென்று சந்தித்த தினத்தில் நடைபெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டில் அ.தி.மு.க. தலைமையில் ஒரு ஊழல் ஆட்சியை- மக்கள் விரோத ஆட்சியை எப்படியாவது தக்க வைத்து விட வேண்டும் என்பதில் அதிமுகவை விட பிரதமர் நரேந்திரமோடியும், மாநிலத்தில் இருக்கும் மாண்புமிகு ஆளுநர் அவர்களும் தொடர்ந்து செயல்படுவது “கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லை” என்பதை வெளிப்படுத்துகிறது.
சட்டமன்றத்தின் பேரவைத் தலைவரைப் பொறுத்தவரை கட்சி சார்பற்றவர். அந்த பதவிக்கு வந்த பிறகு அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் தலைவராக இருப்பவர். “பாரபட்சமற்ற முறையில் பேரவைத் தலைவரின் நடவடிக்கைகள் இருக்க வேண்டும். அரசியல் சட்டத்திற்கு புறம்பாக செயல்படக்கூடாது” என்று பல்வேறு தீர்ப்புகள் வாயிலாக உச்சநீதிமன்றம் பேரவைத் தலைவர்களை எச்சரித்துள்ளது.
கட்சி தாவல் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கொடுக்கப்பட்டுள்ள மனு மீது பேரவைத் தலைவர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கக்கூடாது. ஓ.பன்னீர் செல்வமும் அவருடன் முதலமைச்சருடன் ஐக்கியமான சட்டமன்ற உறுப்பினர்களும் அரசுக்கு எதிராக வாக்களித்து விட்டு பதவியில் தொடருவதை அனுமதித்திருக்கும் பேரவைத் தலைவர் இதில் அவசரம் காட்டி மைனாரிட்டி அரசுக்கு “கொல்லைப்புற வழியாக” மெஜாரிட்டி தேடித்தர முயலக் கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன்.
ஒருவேளை நடுநிலைமை தவறி, அரசியல் சட்டத்தின் கடமைகளை மறந்து, பேரவைத் தலைவர் அந்த மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள்மீது நடவடிக்கை எடுத்தால், பேரவைத் தலைவர்மீது திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்படும் என்று தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன் என ஸ்டாலின் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button