மோசடி புகாரில் திமுக மாவட்ட பொருப்பாளர்
இராமநாதபுரம் மாவட்டம் கமுதி தாலுகாவில் காவடிபட்டியில் இயங்கி வருகிறது. காவடிபட்டி கூட்டுறவு கடன் சங்கம். இந்தகூட்டுறவு கடன் சங்கத்தின் தலைவராக செயல்பட்டு வருபவர் கோட்டை கண்ணன். இவரை தலைவராக ஆக்கியதே திமுகவின் மாவட்ட பொருப்பாளர் முத்துராமலிங்கம் தானாம். இவர் கூட்டுறவு கடன் சங்கத்தின் தலைவர் கோட்டை கண்ணனையும் செயலாளர் மீனாட்சி சுந்தரத்தையும் கூட்டுச்சேர்த்துக்கொண்டு சதி செய்து பல கோடி ரூபாய் மோசடி செய்துள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.
இந்நிலையில் திமுக மாவட்டப் பொறுப்பாளர் முத்துராமலிங்கம் கூட்டுறவு கடன் சங்கத்தில் அதிகமான இடங்கள் இருப்பதாக போலியான அடங்கல் மற்றும் பட்டா போன்றவற்றை தயார் செய்து சில வருடங்களாக பல்வேறு விதமான கடன்களைப் பெற்று பல கோடி ரூபாய் மோசடி செய்துள்ளாராம். தனது குடும்ப உறுப்பினர்கள் பெயரிலும் வெளியூரில் வசிக்கும் தனது நண்பர்கள் பெயரிலும் உறவினர்கள் பெயரிலும் இப்படி பல பெயர்களில் மோசடியாக கடன் பெற்றுள்ளதாகவும் அதிர்ச்சியான தகவல்களை சொல்கிறார்கள் பொதுமக்கள்.
இந்த மெகா மோசடியை எவ்வாறு செய்தார்கள் என்று நாம் விசாரித்தபோது திமுக மாவட்ட பொறுப்பாளர் முத்துராமலிங்கமும், கூட்டுறவு சங்கத்தின் தலைவர் கோட்டை கண்ணனும் கூட்டு சேர்ந்து அவரவர் குடும்பத்தினர் பெயர்களில் போலியாக அடங்கல் பட்டா போன்றவற்றை தயார் செய்துள்ளார்களாம். மேலும் விஏஓ கையெழுத்தையும் போலியாக போட்டு அரசு முத்திரையையும் இவர்களே தயார் செய்து மிகப்பெரிய மோசடியில் ஈடுபட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கிறார்கள்.
இந்த புகார் பற்றி கூட்டுறவுத் துறைக்கு புகார் கொடுக்கப்பட்டு புகார் குறித்து கூட்டுறவுத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அதிகாரியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளிவந்துள்ளனவாம். அதாவது விஏஓ யாருக்கும் பட்டா, அடங்கல் சான்று வழங்கவில்லையாம். அதில் உள்ள கையொப்பமும் விஏஓ கையொப்பம் இல்லையாம். இதில் உள்ள அரசு முத்திரையும் தன்னுடையது இல்லை என்றும் கூறிவந்தாராம்.
இது சம்பந்தமான வழக்கு மதுரை உயர்நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில் இராமநாதபுரம் மாவட்ட திமுகவினர் முத்துராமலிங்கத்தின் செயலைக்கண்டு அதிர்ச்சியில் உள்ளார்களாம். விவசாய கடன்களில் பல கோடி ரூபாய் மோசடி செய்த முத்துராமலிங்கம் மீது திமுக தலைமை நடவடிக்கை எடுக்குமா? கட்சி தலைமை நடவடிக்கை எடுத்தாலும் எடுக்காவிட்டாலும் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிப்பது கடினம் தான் என்கிறார்கள் கமுதி பகுதியில் உள்ள பொதுமக்கள்.
இதுசம்பந்தமாக முத்துராமலிங்கத்திடம் விளக்கம் கேட்பதற்காக பலமுறை அவரை தொடர்பு கொள்ள முயன்றும் அவர் பதில் அளிக்கவில்லை.