திமுக ஆட்சிக்கு வந்தவுடன் கூட்டுறவு வங்கிகளில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் பெற்ற கடன் தள்ளுபடி : மு.க.ஸ்டாலின் உறுதி!
திமுக ஆட்சிக்கு வந்தவுடன் கூட்டுறவு வங்கிகளில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் பெற்ற கடன் தள்ளுபடி செய்யப்படும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவைத் தேர்தலுக்காக ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற தலைப்பில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மாநிலம் முழுவதும் பிரசாரம் செய்து வருகிறார். இதன் ஒரு பகுதியாக பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குறிச்சி பகுதியில் பரப்புரை மேற்கொண்ட ஸ்டாலின், பொள்ளாச்சியில் பல்வேறு துறையில் சாதனை படைத்த இளைஞர்கள் பலருக்கு கேடயம் மற்றும் பரிசு வழங்கி கவுரவித்தார். அத்துடன் 1330 திருக்குறள்களை மனப்பாடமாக ஒப்பித்த 6 வயது சிறுவன் பட்டீஸ்வரனுக்கும் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
தொடர்ந்து மேடையில் பேசிய அவர், இந்த தொகுதி பெண்கள் தங்களது ஊரின் பெயரை உச்சரிக்க வெட்கப்படும் அளவுக்கு இன்று பொள்ளாச்சி மாறிவிட்டதாக சாடினார். அதிமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை எனவும், திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்களுக்கு முடிவு கட்டப்படும் என்றும் உறுதியளித்தார். சென்னை – சேலம் எட்டு வழிச்சாலைக்கு எதிராக போராடியவர்களை பெண்கள், வயதானவர்கள் என்று கூட பாராமல் காவல்துறையை ஏவி கைது செய்ய முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டதாகவும் ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.
மக்கள் தம் மீது வைத்துள்ள நம்பிக்கையே தனது மிகப்பெரிய சொத்து என்று பெருமிதம் தெரிவித்த ஸ்டாலின், கூட்டுறவு வங்கிகளில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் வாங்கிய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்றும் உறுதியளித்தார்.
இன்னும் 3 மாதங்களில் மக்களின் அனைத்து கவலைகளையும் தீர்க்கும் ஆட்சியாக திமுக ஆட்சி இருக்கும் என்றும் உறுதியளித்தார்.
இதனை தொடர்ந்து திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் பேசிய மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் உள்ள மத்திய அரசு பணிகளான தெற்கு ரயில்வே, அஞ்சல்துறை, வருமானவரி உள்ளிட்ட பணிகளில் 90 சதவீதம் பேர் வடமாநிலத்தவர்கள் எனவும், தமிழக மாணவர்கள் நலனில் அதிமுக அரசு அக்கறை செலுத்தவில்லை எனவும் சாடினார். மேலும் காவிரி – வைகை- குண்டாறு திட்டத்தை 2008ம் ஆண்டே அப்போதைய முதல்வர் கருணாநிதி தொடங்கி வைத்து விட்டதாக கூறிய அவர், இத்திட்டத்தை மீண்டும் முதல்வர் பழனிசாமி தொடங்கி வைக்க உள்ளதாக கூறுவது மக்களை ஏமாற்றும் செயல் என குறிப்பிட்டார். முதலமைச்சர் பழனிசாமியின் ஒரே சாதனை தமிழகத்தின் கடன் தொகையை 5 லட்சம் கோடியாக உயர்த்தியதுதான் எனவும் சாடினார்.
கரூரில் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.பி.ஜோதிமணியை போலீசார் குண்டுக்கட்டாக கைது செய்தனர். அதற்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கரூர் லைட் ஹவுஸ் கார்னரில் சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்பு காங்கிரஸ் கட்சி சார்பில் நிறுவப்பட்ட காந்தி சிலையை மாவட்ட நிர்வகம் அகற்றிவிட்டு, அதே இடத்தில் புதிதாக காந்தி சிலை வைத்துள்ளது. காங்கிரஸ் கட்சி சார்பில் வைக்கப்பட்ட வரலாற்று பின்னணி உள்ள சிலையை மாவட்ட நிர்வாகம் அகற்றி விட்டு, முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைப்பதற்காகவே அவசரகதியில் தரமற்ற சிலை அமைத்துள்ளதாக கூறி காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அனுமதியின்றி போராட்டம் நடத்திய ஜோதிமணியை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கிச்சென்று கைது செய்தனர்.
முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த ஜோதிமணி முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைக்கவுள்ள இந்த சிலையை நிறுவுவதில் பல்வேறு ஊழல்கள் நடைபெற்றுள்ளதாக குற்றம்சாட்டினார். இந்தநிலையில், எம்.பி ஜோதிமணி வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டதற்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் தமிழகத் தலைவர் கே.எஸ்.அழகிரி ஆகியோர் உள்ளிட்டவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். அதேபோல, தி.மு.க எம்.பி கனிமொழி, தி.மு.க இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்த மு.க.ஸ்டாலின் கண்டன அறிக்கையில், ‘ஆட்சியின் கடைசி நேரக் கொள்ளைக்காக கரூர் ரவுண்டானா பகுதியில் 70 ஆண்டுகால வரலாறு கொண்ட மகாத்மா காந்தி சிலையை அகற்றி, முதலமைச்சர் திறக்கும் புது சிலை என்ற பெயரில் உருவாக்கப்பட்ட தரமற்ற கட்டுமானத்தைத் தட்டிக் கேட்ட மக்களவை உறுப்பினர் ஜோதிமணியை பழனிசாமி அரசின் ஏவல்துறையான காவல்துறை கைது செய்ததும் – அதற்காகக் கையாளப்பட்ட முறையும் கடும் கண்டனத்திற்குரியவை. தமிழக மக்களின் அகிம்சை புரட்சி விரைவில் இதற்கான தீர்ப்பளிக்கும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
ஜோதிமணி கைது செய்யப்பட்டது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ்.அழகிரி, ‘கரூர் எம்.பி.ஜோதிமணி காவல் துறையால் தாக்கபட்டுள்ளார். கைகாலை பிடித்து ஜோதிமணியை போலீஸார் தூக்கி எறிந்துள்ளனர். நகராட்சி ஆணையரிடம் காந்தி சிலை அகற்றம் குறித்து கேட்டதற்கு முறையான பதில் தரவில்லை. நாடாளுமன்ற உறுப்பினர் கைது என்பது ஜனநாயகத்திற்கு எதிரான செயல்’ என்று தெரிவித்துள்ளார்.
– முத்துபாபு