அரசியல்

ஊட்டி உருளைக்கிழங்கு ஆய்வு நிலையத்தை மூடக்கூடாது: பிரதமருக்கு முதல்வர் கடிதம்

ஊட்டியில் உள்ள உருளைக்கிழங்கு ஆய்வு நிலையத்தை மூட வேண்டாம் என்று மத்திய வேளாண் அமைச்சகத்துக்கு உத்தரவிடும்படி கேட்டுக்கொள்கிறேன் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கடிதம் அனுப்பியுள்ளார்.
தமிழக முதல்வர் கடிதத்தில், “தமிழகத்திலும் கர்நாடக மாநிலத்திலும் குன்றுகளில் உருளைக் கிழங்கு பயிரிடப்படுகிறது. தமிழ்நாட்டில் திண்டுக்கல், நீலகிரி, கிருஷ்ணகிரி மற்றும் ஈரோடு மாவட்டங்களில் சுமார் 5500 ஹெக்டேர் நிலப்பரப்பில் உருளைக்கிழங்கு பயிரிடப்படுகிறது.
ஊட்டி, முத்தோரை எனும் இடத்தில் உள்ள மத்திய உருளைக்கிழங்கு ஆய்வு நிலையத்தை மூடுவதென்று இந்திய விவசாய ஆராய்ச்சி கவுன்சில் முடிவு செய்திருப்பதாக பத்திரிகைகளில் செய்தி வெளியாகி உள்ளது. ஊட்டி முத்தோரை உருளைக்கிழங்கு ஆய்வு நிலையம் நீலகிரி மாவட்டத்தில் பிரபலமான நிறுவனம் ஆகும். 1957இல் அமைக்கப்பட்டது. கடந்த 70 ஆண்டுகளாக தமிழக அரசோடும் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தோடும் ஒருங்கிணைந்து உருளைக்கிழங்கு விவசாயிகளின் நலனுக்காகப் பாடுபட்டுவருகிறது. முத்தோரை ஆய்வுநிலையம் மட்டுமே தென் இந்தியாவில் உருளைக்கிழங்கு நெமடோட் புழுக்களின் தாக்குதல் உருளைக்கிழங்கு செடிகளில் தோன்றும் கருகல் நோய் குறித்து ஆய்வு செய்கிறது. அதன் ஆய்வு காரணமாக உருளைக்கிழங்கை பாதிக்கும் நோய்கள் கட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளன. நெமடோட் புழுக்களின் தாக்குதலை எதிர்த்து பாதிக்கப்படாமல் தாக்குப்பிடிக்கக்கூடிய குப்ரி ஸ்வர்ணா என்ற வகை உருளைக்கிழங்கை 1985இல் முத்தோரை ஆய்வு நிலையம் வெளியிட்டது. அந்த வகை உருளைக்கிழங்குதான் நீலகிரி மாவட்டத்தில் பெரும்பான்மையாக விளைவிக்கப்படுகிறது. இங்கிருந்து நோய்த் தொற்று இல்லாத விதை உருளைக்கிழங்கை விவசாயிகள் பெறலாம். இந்த ஆய்வு நிலையம் மூடப்பட்டால் தமிழ்நாடு மற்றும் பிற தென் மாநில விவசாயிகள் பஞ்சாப் ஜலந்தரில் உள்ள உருளைக்கிழங்குகளைப் பெற முடியும்.. ஜலந்தர் வெகு தொலைவில் உள்ளது. தென் மாநில விவசாயிகளின் உற்பத்திச் செலவை கணிசமாக உயர்த்திவிடும். எல்லாவற்றுக்கும் மேலாக வடமாநில உருளைக்கிழங்கு விதைகள் தென் மாநிலங்களுக்கு பொருத்தமானதாக இராது.
இந்த நிலையில் ஊட்டி முத்தோரை உருளைக்கிழங்கு ஆய்வு நிலையத்தை மூடுவது தமிழ்நாட்டிலும் தென்மாநிலங்களிலும் உருளைக்கிழங்கு விவசாயிகளை கடுமையாகப் பாதிக்கும். எனவே, இந்திய விவசாய ஆராய்ச்சி கவுன்சிலிடம் ஊட்டி முத்தோரை உருளைக்கிழங்கு ஆய்வு நிலையத்தை மூடவேண்டாம் என்று மத்திய வேளாண் அமைச்சகம் மூலமாக அறிவுறுத்தும்படி கேட்டுக்கொள்கிறேன். தமிழ்நாடு மற்றும் தென்மாநில விவசாயிகளின் நலன்களைப் பாதுகாக்க வேண்டுகிறேன்” என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய கடிதத்தில் கூறியுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button