மோடியுடன் சமரசம் செய்யாததால் சின்னம் கிடைக்கவில்லை : டிடிவி தினகரன்
தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவருக்கும் ஒரே சின்னமாக பரிசுப் பெட்டியை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.
தமிழகத்தில் 40 மக்களவைத் தொகுதிகள், 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு குக்கர் சின்னம் ஒதுக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் தினகரன் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு விசரணைக்கு வந்தபோது தனிநபர் மற்றும் பதிவு செய்யப்பட்ட கட்சிகளுக்கு மட்டுமே பொது சின்னம் ஒதுக்கப்படுகிறது. இந்த இரண்டு வகையிலும் அமமுக வராது என கூறி குக்கர் சின்னம் ஒதுக்க முடியாது என தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக கூறியது.
இதையடுத்து வழக்கு மீண்டும் விசரணைக்கு வந்தது. அப்போது, சுயேட்சை வேட்பாளருக்கான சின்னத்தை பெற்றுக்கொள்ளுங்கள் என்றும் முதலில் அமமுகவை கட்சியாக பதிவு செய்யுங்கள் என்றும் தலைமை நீதிபதி கூறினார். அதற்கு தினகரன் தரப்பு வழக்கறிஞர், உடனடியாக பதிவு செய்கிறோம், குக்கர் சின்னத்தை ஒதுக்குங்கள் என கோரிக்கை விடுத்தார்.
அதற்கு தேர்தல் ஆணையம் இன்றே பதிவு செய்தாலும் சின்னம் ஒதுக்க 30 நாள் ஆகும் என விளக்கம் அளித்தது. குழப்பத்தை தவிர்க்க ஏன் தேர்தல் ஆணையம் பொது சின்னத்தை ஒதுக்கக்கூடாது என தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார். அதனையடுத்து குக்கர் சின்னம் வழங்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்து வேட்பாளர்கள் அனைவருக்கும் பொதுச்சின்னம் வழங்க தேர்தல் ஆணையத்திற்கு பரிந்துரை செய்தது.
இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், “பொதுச் சின்னம் ஒதுக்கும்படி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பதால், தேர்தல் ஆணையம் தங்கள் கட்சிக்கு நிச்சயம் ஏதேனும் ஒரு சின்னத்தை ஒதுக்கும். குக்கர் சின்னம் கிடைக்காததால் தங்களுக்கு எந்தப் பின்னடைவும் ஏற்படப் போவதில்லை. தேர்தல் ஆணையம் ஒதுக்கும் சின்னத்தை தமிழக வாக்காளர்கள் வெற்றி சின்னமாக மாற்றுவார்கள். சென்னை ராயபுரத்தில் இருந்து தனது தேர்தல் பரப்புரையை தொடங்க உள்ளேன்.
தேர்தல் ஆணையம் வழங்கும் சின்னத்தில் அமமுக போட்டியிட்டு மாபெரும் வெற்றிபெறுவோம். அமமுக வேட்பாளர்கள் 59 பேர்தான் தமிழ்நாட்டு மக்களின் ஆயுதம். தமிழகத்தில் ஜனநாயக விரோதிகளை 59 வேட்பாளர்களும் வீழ்த்துவர். 59 சின்னத்தில் அமமுக வேட்பாளர்கள் போட்டியிட்டாலும் வெற்றி பெறுவார்கள். தேர்தல் ஆணையம் எந்தச் சின்னம் ஒதுக்கினாலும், அது அமமுகவின் வெற்றி சின்னமாக இருக்கும்” என்று கூறினார்.
இதையடுத்து அமமுகவுக்கு பொது சின்னத்தை ஒதுக்கி தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் அமமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவருக்கும் ஒரே சின்னமாக பரிசுப் பெட்டியை ஒதுக்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பரிசு சின்னம் தேர்தல் ஆணையத்தின் பட்டியலில் 67-வது சின்னமாக உள்ளது. தொப்பி, குக்கர், சாவி ஆகிய மூன்றில் ஒன்றை ஒதுக்க தினகரன் அணி கேட்ட நிலையில் பரிசுப்பெட்டி ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பரிசுப் பெட்டி சின்னத்தை மக்களிடம் கொண்டு சென்று வெற்றி பெறுவோம் என்று தினகரன் அணியின் வெற்றிவேல் கூறியுள்ளார்.
இந்நிலையில் திருப்பூர் மக்களவைத் தொகுதி யில் போட்டியிடும் அக்கட்சியின் வேட்பாளர் எஸ்.ஆர். செல்வத்தை ஆதரித்து, பெருமாநல்லூர், கணக்கம்பாளையம், பாண்டியன் நகர், எம்.எஸ்.நகர் ஆகிய இடங்களில் அவர் பேசியதாவது:
திருப்பூர் பின்னலாடை உற்பத்தி, ஏற்றுமதியை மனதில்கொண்டு, அரசு கலை அறிவியல் கல்லூரி அமைப்பது உட்பட பல்வேறு திட்டங்களை தொடங்க உள்ளோம். விவசாயிகள், நெசவாளர்கள், மாணவர்கள், வியாபாரிகள், அரசு ஊழியர்கள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் துரோக ஆட்சியையும், மத்தியில் மக்கள் விரோத ஆட்சியையும் முடிவுக்கு கொண்டுவர வேண்டும்.
துரைமுருகன் விவசாயம் செய்தோ, நீதிமன்றத்தில் வாதாடியோ சம்பாதிக்கவில்லை. மாநில ஆட்சியை விட்டு போய் 7 ஆண்டுகளும், மத்திய ஆட்சியை விட்டு போய் 5 ஆண்டுகளும் ஆகிறது. திமுகவிடம் பணம் இருக்கிறது. திமுக கூட்டணியும், அதிமுக கூட்டணியும் பணத்தை நம்பித்தான் தேர்தலை சந்திக்கிறது.
அனைத்து சந்தர்ப்பவாதிகளும் ஒன்றிணைந்து, பணத்தை கொடுத்து மக்களிடம் வாக்குகளை பெற முயற்சிக்கிறார்கள்.
ராகுல்காந்தி பிரதமராவதையும், எம்.பி.-ஆவதையும் கம்யூனிஸ்ட் கட்சி விரும்பவில்லை.
கேரளாவில் ராகுல்காந்தி போட்டியிடும் வயநாடு தொகுதியில், அவருக்கு எதிராக கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடுகிறது. திமுக தலைவர் ஸ்டாலின், ராகுலை எப்படி பிரதமர் என்கிறார்? தமிழகத்தில் திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் சேர்ந்துதான் ராகுலை பிரதமராக்குவோம் என பிரச்சாரம் செய்கிறார்கள்.
இது திமுகவின் சந்தர்ப்பவாத கூட்டணி. இவர்கள் எப்படி தமிழக நலனுக்காக திட்டங்களை பெற்றுத்தருவார்கள்? மாநிலத்துக்கு, மாநிலம் கம்யூனிஸ்ட்கள் நிறம் மாறுகின்றனர்.
மோடியுடன் சமரசம் செய்யாததால் எங்களுக்கு சின்னம் கிடைக்கவில்லை. சின்னம் கிடைப்பதற்குள் எங்களை படாதபாடுபடுத்திவிட்டனர். மோடியுடன் சமரசம் செய்திருந் தால், தமிழகத்தில் முதல்வராக பழனிசாமி இருந்திருக்க முடியாது. யார் முதல்வராக இருந்திருப்பார் என்பது உங்களுக்கே தெரியும்.
தமிழக நலனுக்கு எதிரானவர்களுடன், எங்களுக்கு என்றைக்கும் ஒட்டும் கிடையாது; உறவும் கிடையாது. நமக்கு கஷ்டம் வந்தால் நகை, நட்டுகளை அடகு வைப்போம்; நில புலன்களை அடகு வைப்போம். பழனிசாமி அரசு, தமிழகத்தையும், அதிமுகவையும் மத்திய அரசிடம் அடகு வைத்துவிட்டது. இவ்வாறு அவர் பேசினார்.
இதைத்தொடர்ந்து, திருப்பூர் மாநகரின் பல்வேறு இடங்களில் திருப்பூர் மற்றும் நீலகிரி மக்களவைத் தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.