தமிழகம்

கீழ்வெண்மணியில் என்ன நடந்தது? : 51 ஆம் ஆண்டு நினைவு தினம்

சாதியை எப்போதும் `சாதீ’ என்று பார்க்கவைப்பதில் மிக முக்கியமானது, துயரம் மிகுந்த கீழ்வெண்மணி சம்பவம். ஒன்றுபட்ட தஞ்சாவூர் மாவட்டத்தில் நாகப்பட்டினம் அருகேயுள்ள கீழ்வெண்மணி என்ற கிராமத்தில் நடந்தேறிய சாதிய வெறியாட்டம் அது. 20 பெண்களையும் 19 சிறுவர்களையும் 5 ஆண்களையும் குடிசைக்குள் வைத்து தீ வைத்துக் கொளுத்தியது சிலரின் சாதிவெறி. அந்தக் கோர தாண்டவம் நிகழ்ந்த 51-ம் ஆண்டு நினைவு தினம் டிசம்பர் 25.

நம் நாட்டின் சுதந்திரத்திற்காகப் பலர் போராடிய வரலாறு நாமறிந்ததுதான். அதன் பிறகும் நாம் பலவகைப்பட்ட சமூகப் பிரச்னைகளுக்காகப் போராடியிருக்கிறோம். மற்ற எந்த நாடுகளிலும் இல்லாத ஒரு விஷயமாக இந்தியச் சமூகத்தை ஆட்டுவித்துக்கொண்டிருக்கிறது சாதியம். அதைக் குறிப்பிட்ட சில இயக்கங்கள் தவிர்த்து யாரும் எதிர்த்ததில்லை.

பிறப்பின் அடிப்படையில் ஒருவரின் சாதி தீர்மானிக்கப்படுகிறது என்பது இந்தியச் சமூகத்தின் மிகப்பெரும் கொடுமையாக இருந்து வருகிறது. சாதியின் அடிப்படையில் வேலைப்பிரிவினை என்பது இன்னும் நீடிக்கிறது என்பதற்கு துப்புறவுத்தொழிலே சாட்சி. தகவல் தொழில்நுட்பம் உச்சத்தை எட்டியுள்ள இந்தக் காலத்திலும் மலக்குழிக்குள் இறங்கி மனிதர்கள் சுத்தம் செய்கிறார்கள் என்றால், அது பட்டியலின மக்கள் மட்டுமே. வேறு எந்தச் சாதியினரும் அந்த வேலையைச் செய்யவில்லை.

நில உடமையாளர்கள் ஜமீன்தார்கள், பண்ணையார்கள் என்ற பெயர்களுடன் ஆதிக்கம் செலுத்திய காலத்தில், பண்ணை அடிமைகளாக இருந்த ஒடுக்கப்பட்ட சமூக மக்கள் அனுபவித்த துயரங்கள் கொஞ்சநஞ்சமல்ல. சாணிப்பால் சவுக்கடி என்ற தண்டனை அந்தக் காலத்தில் சர்வசாதாரணமாக இருந்தது. விவசாயக் கூலித் தொழிலாளிகளாக இருந்த அந்த மக்களுக்கு ஆதரவாகக் களமிறங்கியது கம்யூனிஸ்ட் கட்சி. ‘அடித்தால் திருப்பி அடி’ என்ற முழக்கத்துடன் பி.சீனிவாசராவ் உள்ளிட்ட கம்யூனிஸ்ட் தலைவர்கள் அந்தக் கூலித் தொழிலாளர்களுக்கு ஆதரவாகப் போராடினர்.

கம்யூனிஸ்ட் தலைவர்கள் கிராமம் கிராமமாக பிரசாரம் செய்தனர். விவசாயிகள் சங்கத்தை ஆரம்பித்தனர். சாணிப்பால் சவுக்கடிக்கு சாவுமணி அடிக்க வேண்டும், கூலி உயர்வு வேண்டும் என்ற முழக்கங்கள் தஞ்சை முழுவதும் எழுந்தன. விவசாயத் தொழிலாளர் சங்கம் தரும் தைரியத்தில்தான் இவர்கள் நம்மை எதிர்க்கத் துணிகிறார்கள் என்று ஆத்திரமடைந்த பண்ணையார்கள், சங்கத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் இறங்கினர்.

சங்கத்தில் இருக்கும் தொழிலாளர்களைத் தாக்குவதும் சங்க உறுப்பினராக இருக்கும் விவசாயிகளுக்கு வேலை மறுப்பதும் எனப் பல அட்டூழியங்கள் செய்தனர். கடைசியில், நில உடைமையாளர்கள் அனைவரும் சேர்ந்து நெல் உற்பத்தியாளர் சங்கம் என ஓர் அமைப்பை ஆரம்பித்தனர். உள்ளூர் தொழிலாளர்களுக்கு வேலை தராமல் வெளியூர் கூலி விவசாயிகளை அழைத்து வந்தனர். அதற்கு விவசாயிகள் சங்கம் எதிர்ப்புத் தெரிவித்தது. அப்போது இரு சங்கங்களுக்குமிடையே மோதல் ஏற்பட்டது. விவசாயிகள் சங்கத் தலைவர்களைத் தீர்த்துக்கட்ட திட்டம் தீட்டப்பட்டது. அது குறித்து ஆட்சியாளர்களிடம் புகார் அளித்தார்கள் கம்யூனிஸ்ட் தலைவர்கள். ஆனால், பண்ணையார்கள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை.

இத்தனை காலம் நமக்கு அடிமைகளாக வேலை செய்தவர்கள் இன்று நம்மை எதிர்க்கிறார்கள் என்பதும், அதுவும் தம்மைவிட ‘கீழ் சாதியினர்’ சரிக்குச் சமமாகப் பேசுகிறார்களே என்ற ஆத்திரம் பண்ணையார்களுக்கு அதிகரித்தது. விவசாயக்கூலித் தொழிலாளர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தும் நோக்கத்துடன், ஒரு கிறிஸ்துமஸ் இரவில் பயங்கர ஆயுதங்களுடன் புறப்பட்டது பண்ணையார்களின் கொலைவெறிப்படை. அவர்களின் தாக்குதலுக்குப் பயந்து கீழ்வெண்மணியில் ராமையா என்பவரின் குடிசைக்குள் ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் என 44 பேர் ஒளிந்துகொண்டனர். அந்தச் சாதிவெறிக் கூட்டம் 48 பேரையும் உள்ளே வைத்து, அந்தக் குடிசையைத் தீவைத்துக் கொளுத்தியது.

குடிசை தீப்பற்றி எரிந்தது. ‘நாம் செத்தாலும் பரவாயில்லை, நம் குழந்தைகள் பிழைத்துக்கொள்ளட்டும்‘ என்று குழந்தைகளைத் தூக்கி வெளியே வீசினர் அந்த மக்கள். வெளியே வந்த குழந்தைகளைத் தூக்கி, எரியும் வீட்டுக்குள் மீண்டும் வீசினர், அந்தக் கொலைகாரர்கள். அந்தக் கொடூரச் சம்பவத்தை அறிந்து தமிழகமே துடிதுடித்தது. அந்தச் சம்பவம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்றது. அதில் முக்கியக் குற்றவாளி கோபாலகிருஷ்ண நாயுடு. ஆனால், ‘அவர் சமூகத்தில் உயர்ந்தவர், அவர் கார் எல்லாம் வைத்திருக்கிறார், அப்படிப்பட்டவர் எப்படி கொலை செய்வார்?’ என்று நற்சான்றிதழ் அளித்து அவரை விடுவித்ததுதான் இன்னும் கொடுமை.

இத்தனை ஆண்டுகளில் வெண்மணித் தீயில் போட்டு சாதியையும் கொளுத்தியிருக்க வேண்டும். ஆனால், இன்றைக்கு சாதியம் வேறு வடிவங்களில் இன்னும் வீரியம் பெற்றிருக்கிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button