சென்னை டிபிஐ வளாகத்தில் பகுதிநேர ஆசிரியர்கள் போராட்டம்
தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் பணிபுரிந்து வரும் பகுதிநேர சிறப்பு ஆசிரியர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி சென்னை டிபிஐ வளாகத்தில் காத்திருப்புப் போராட்டத்தை துவக்கியுள்ளனர்.
கடந்த 2012-ம் ஆண்டு தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் பகுதி நேர அடிப்படையில் உடற்கல்வி ஆசிரியர்கள், ஓவிய ஆசிரியர்கள், இசை ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டனர். 16000-க்கும் மேற்பட்டோர் நியமனம் செய்யப்பட்டு தற்போது 12,500 பேர் பணியாற்றி வருகின்றனர்.
இவர்களுக்கு 10,000 ரூபாய் தற்போது ஊதியம் வழங்கப்படுகிறது. அவர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி சென்னை டிபிஐ வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மாநிலம் முழுவதிலும் இருந்து 500-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என ஆசிரியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தங்களது கோரிக்கை நிறைவேறும் வரை தொடர்ந்து சென்னை டிபிஐ வளாகத்திலேயே காத்திருக்க போவதாகவும் பகுதிநேர ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.