சாலை ஓரங்களில் கொட்டப்படும் இறைச்சிக் கழிவுகள்… : நடவடிக்கை எடுக்கப்படுமா..?
கோவை மாவட்டம் சூலூர் வட்டத்திற்கு உட்பட்ட காரணம்பேட்டை பேரூராட்சியில் சோமனூர் & காரணம்பேட்டை சாலையின் ஓரங்களில் அந்தப் பகுதியில் இருக்கும் இறைச்சிக் கடைகளிலிருந்து மாடு, கோழி போன்றவற்றின் கழிவுகளை வாகனங்களில் கொண்டு வந்து கொட்டிச் செல்கின்றனர். இந்த கழிவுகளை உண்பதற்காக பன்றிகளும், நாய்களும் ஏராளமாக சாலையை கடந்து செல்வதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதோடு வாகன விபத்துக்களும் ஏற்படுகிறது. இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் ஏராளமானோர் இந்தப் பகுதியை கடந்து செல்லும்போது நாய்கள், பன்றிகள் குறுக்கே பாய்வதால் விபத்துக்கள் ஏற்பட்டு காயமடைந்திருக்கிறார்கள்.
இதேபோல் சோமனூரில் நடைபெறும் வாரச்சந்தையில் ஏற்படும் கெட்டுப்போன காய்கறிகளையும் இதேபகுதியில் வாகனங்களில் கொண்டுவந்து கொட்டிச் செல்கின்றனர். இதனை உண்பதற்கு மாடுகள் சாலைகளை கடந்து செல்வதோடு சாலை முழுவதும் முட்டைகோஸ், அழுகிய தக்காளி, வெங்காயம் போன்றவற்றை சிதறடிக்கிறது. இந்தப் பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. பொதுமக்கள் இந்தப் பகுதியை கடந்து செல்லும்போது முகத்தை மூடிக் கொண்டு தான் கடக்க நேரிடுகிறது. இதனால் இந்தப் பகுதி மக்களுக்கு தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது.
சாலை ஓரங்களில் கொட்டப்படும் இறைச்சி கழிவுகளாலும், காய்கறி கழிவுகளாலும் ஏற்படும் சுகாதார சீர்கேடுகள் பற்றி பலமுறை கருமத்தம்பட்டி பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் மற்றும் செயல் அலுவலரிடம் புகார்கள் கொடுத்தும் அவர்கள் இருவரும் கண்டுகொள்வதாக தெரியவில்லை. இதுகுறித்து பொதுமக்கள் நேரில் சென்று முறையிட்டால் இந்தப்பகுதி கருமத்தம்பட்டி லிமிட்டில் இலை. இது சாமளாபுரம் பேரூராட்சிக்குச் சொந்தமான பகுதி நீங்கள் வேண்டுமானால் சாமளாபுரம் பேரூராட்சியில் போய் கேளுங்கள் என்று கூறுகிறார்கள்.
சாமளாபுரம் பேரூராட்சி செயலாளரிடம் சென்று இந்த சுகாதார சீர்கேட்டை சரி செய்யுங்கள் என்றால் இந்த இடம் கருமத்தம்பட்டி பேரூராட்சிக்குச் சொந்தமான இடம் எங்கள் கட்டுப்பாட்டில் இல்லை என்று திருப்பி அனுப்புகிறார்கள். இந்த சாலை அமைந்திருக்கும் நொய்யல் ஆற்றுப் பாலம் அமைந்திருக்கும் பகுதி வருவாய் ஆவணங்களில் இருக்கறதா? இல்லையா? இது கோவை மாவட்டத்தில் வருகிறதா இல்லை திருப்பூர் மாவட்டத்தில் வருகிறதா என்ற விபரத்தை பொதுமக்களுக்கு இரு மாவட்ட ஆட்சியர்கள்தான் விளக்க வேண்டும். நொய்யல் ஆற்றுப் பாலம் அருகே தெற்கே சாமளாபுரம் பேரூராட்சி தங்களை அன்புடன் வரவேற்கிறது என்று பெயர் பலகை வைத்திருக்கிறார்கள். நொய்யல் பாலத்தின் வடக்கு கருமத்தம்பட்டி பேரூராட்சி தங்களை அன்புடன் வரவேற்கிறது என்று பெயர் பலகை வைத்திருக்கிறார்கள். இரண்டிற்கும் இடையில் நொய்யல் பாலம் இருக்கும் பகுதி எந்த பேரூராட்சியின் எல்லையில் இருக்கிறது. இந்தப் பகுதியின் மக்களுக்கு சுகாதார சீர்கேட்டால் தொற்று நோய்கள் ஏற்பட்டால் இரண்டு பேரூராட்சிகளின் செயல் அலுவலர்களும் தான் பொறுப்பேற்க வேண்டும்.
சாலை ஓரங்களில் கொட்டப்பட்டிருக்கும் இறைச்சி மற்றும் காய்கறி கழிவுகளை அகற்றப் போவது யார்? இதனால் ஏற்படும் வாகன விபத்துக்களுக்கு யார் பொறுப்பேற்பார்கள்? ஏற்கனவே கொரோனா அச்சம் இன்னும் முடிவுறாத நிலையில் இந்த சுகாதார சீர்கேட்டால் புதிய தொற்று நோய் ஏதும் வந்தால் என்ன செய்வது என்கிற அச்சத்தில் தான் பொதுமக்கள் இருக்கிறார்கள்.
கருமத்தம்பட்டி பேரூராட்சி செயல் அலுவலரும், சாமளாபுரம் பேரூராட்சி செயல்அலுவலரும் இந்தப் பகுதி மககளின் அச்சத்தை போக்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் கோரிக்கையாக இருக்கிறது.
பொதுமக்களின் கோரிக்கைகளை அரசு அதிகாரிகள் நிறைவேற்றுவார்களா? காத்திருப்போம்..
– சௌந்தர்ராஜன்