தமிழகம்

தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் அலட்சியம்..! : சுகாதாரத்துறை நடவடிக்கை எடுக்குமா?

தேனி மாவட்டம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகள் சிகிச்சை விவகாரங்களில் அடிக்கடி குளறுபடியையும் மருத்துவ பயனர்களுக்கு மன உளைச்சலையும் ஏற்படுத்தும் மருத்துவர்களின் செயல்பாடுகள் கண்டனத்திற்கு உள்ளதாகவே இருக்கிறது.

இரண்டு மாதங்களுக்கு முன்பு திண்டுக்கல்லில் சாலையில் மயங்கி கிடந்த முதியவர் ஒருவரை சிகிச்சைக்காக தேனி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு காவல் துறையினர் மூலம் அனுப்பியதில் சிகிச்சையின் போது அவர் இறந்து விட்டார். அதேநேரத்தில் பெரியகுளத்தில் இருந்து தற்கொலைக்கு முயன்று போராடும் நிலையில் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்த நபர் ஒருவரும் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார்.

இருவர் உடலையும் பிணவறையில் கிடத்தி இருந்த நிலையில் உறவினர்களிடம் பிரேதங்களை ஒப்படைக்கையில் சடலத்தை மாற்றி கொடுத்த சம்பவம் பெரிய பூகம்பம் ஆனது. அதாவது திண்டுக்கலில் இருந்து அனுப்பிய முதியவரின் சடலத்தை தற்கொலை செய்த நபரின் உறவினர்களிடமும் தற்கொலைக்கு முயன்று இறந்த நபரின் சடலத்தை திண்டுக்கலில் இருந்து காவல்துறை மூலமாக வந்த முதியவர் உறவினர்களிடமும் மாற்றிக் கொடுத்து அனுப்பி விட்டனர். இதில் திண்டுக்கல்லில் இருந்து வந்த அந்த முதியவரின் சடலத்தை பெரியகுளத்தில் தற்கொலை செய்துகொண்ட நபரின் உறவினர்களிடத்தில் சடலத்தை மூடி கொடுத்தால் இறந்தவரின் உடலை முகத்தை கூட திறந்து பார்க்காமல் கொண்டு சென்று மயானத்தில் தீ மூட்டி இறுதிச் சடங்கு செய்துவிட்டனர்.

பின்பு தற்கொலை செய்து கொண்டவர்களின் சடலத்தை பெற்றுக் கொண்ட திண்டுக்கல் முதியவரின் உறவினர்கள் சடலத்தை மருத்துவமனையில் திறந்து பார்க்கையில் சடலம் மாறி இருப்பது தெரியவந்து அதிர்ச்சி அடைந்து பெரிய பிரச்சனைகள் ஏற்பட்டது. சிகிச்சை செய்த மருத்துவர்களும் ஈடுபாட்டில் இருந்த காவல்துறையினரும் சிக்கலில் மாட்டி தவித்தனர். பின்னர் பிரச்சனையை பெரிதாக்க விடாமல் சம்பந்தப்பட்டவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைக்க போதும் போதும் என்றாகி செய்தியாளர்களிடம் தவறை உணர்ந்து வருந்தி கேட்டதனால் சமாதானம் ஆகிவிட்டது.

இந்தச் சம்பவம் நடந்து கொஞ்ச நாட்களுக்குள் இதேபோன்று பிரசவத்திற்கு வந்த பெண்ணை பிரசவம் பார்த்த மகப்பேறு மருத்துவர் குழந்தை பிறந்ததும் இறந்துவிட்டதாக கூறி உறவினர்களிடம் குழந்தையின் சடலத்தை ஒப்படைத்துள்ளனர். குழந்தையின் சடலத்தை அடக்கம் செய்யும்போது திறந்து பார்க்கையில் குழந்தை உயிருடன் இருப்பது தெரிய வந்துள்ளது.

அதன் விவரம் அறிகையில் தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை காவல் நிலையத்துக்கு உட்பட்ட தாமரைகுளம் தாசில்தார் நகரை சேர்ந்தவர் பிளவேந்திர ராஜா மனைவி பாத்திமா மேரி என்ற வானரசி 30 கர்ப்பிணி இவருக்கு ஜுலை 3ம் தேதி இரவு 12.30 மணி அளவில் பிரசவ வலி ஏற்பட்டு பெரியகுளத்திலிருந்து தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிக்சைக்காக அனுமதித்துள்ளனர். அவருக்கு மறுநாள் அதிகாலை 3 மணியளவில் பெண் குழந்தை பிரசவிக்க பட்டு இறந்ததாக மருத்துவமனையில் தெரிவிக்கப்பட்டு பெண் குழந்தையின் உடலை காலை 8 மணியளவில் சொந்த பந்தங்களிடம் ஒப்படைத்துள்ளனர்.உடலை பெற்ற உறவினர்கள் மிகவும் வருந்திய நிலையில் இரண்டு மணி நேரம் கழித்து பெரியகுளம் மூன்றாந்தலில் உள்ள கல்லறையில் அடக்கம் செய்ய பெண் குழந்தையின் உடலை கொண்டு சென்று உள்ளனர். கடைசியாக குழந்தையின் உடலை திறந்து பார்த்த பொழுது குழந்தைக்கு உயிர் இருப்பது தெரிய வந்துள்ளது. இதை பார்த்த உறவினர்கள் அதிர்ச்சி அடைத்தனர். உடனே குழந்தையை மீண்டும் தேனி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு சிகிக்சைக்கு கொண்டு சென்று அனுமதித்துள்ளனர்.

6 மணி நேரம் உணவின்றி தவித்த அந்த குழந்தை இறந்துவிட்டது. தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மருத்துவர்களே இதற்கு காரணம் என உறவினர்கள் குற்றசாட்டு தெரிவித்தனர். அதுமட்டுமின்றி தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை பற்றியும் மருத்துவர்களின் அலட்சியங்கள் பற்றியும் அவ்வப்போது ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டும் வருகின்றன. இருப்பினும், மருத்துவத்துறை அதிகாரிகள், சுகாதாரத் துறையினர் இவற்றை கண்டு கொள்வதில்லை. உயிர் மீது அலட்சியமாக செயல்பட்ட மருத்துவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட பெற்றோர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

பெரியகுளத்தில் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை உள்ளது. ஆனால் அங்கு சென்றால் மருத்துவர்கள் பணியில் இருப்பதில்லை. அப்படியே இருந்தாலும் எதையாவது காரணம் காட்டியும், பிரசவ வலியில் வரும் பெண்கள் மற்றும் அவர்களது உறவினர்களை பயமுறுத்தி தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பரிந்துரை செய்து அனுப்பி விடுகின்றனர்.

மேலும் இம்மருத்துவமனையில் இரவு நேரங்களில் மருத்துவம் மற்றும் பிரசவம் பார்ப்பது கிடையாது. பெரியகுளத்தில் ஜெயராஜ் அன்னபாக்கியம் மகப்பேறு மருத்துவமனையிலும் பிரசவம் பார்ப்பது கிடையாது. இதனால் கர்பிணித் தாய்மார்களின் உயிர் எந்த நேரத்திலும் பறிபோகும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.


தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் தக்க நடவடிக்கை மேற்கொண்டு உரிய சிகிச்சை அளிக்காமல் அலட்சியம் காட்டி பணியாற்றி வரும் அரசு மருத்துவர்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டு பொதுமக்களுக்கு அரசின் பாதுகாப்பு மருத்துவ சேவை கிடைத்திட சம்பந்தப்பட்ட மருத்துவத்துறை அமைச்சரும் உயர் அதிகாரிகளும் வழிவகை மேற்கொள்ள வேண்டுமாய் சமூக ஆர்வலர்களும், மருத்துவ பயனாளர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராஜசிம்மன்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button