தமிழகம்

திருப்பூரில் பொதுமக்களை தவிக்க விடும் தற்காலிக பேருந்து நிலையங்கள்

திருப்பூர் மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டியாக மாற்றும் வகையில் திருப்பூரின் மையப்பகுதியில் அமைந்திருந்த பேருந்து நிலையம் இடிக்கப்பட்டு நவீன பேருந்து நிலையமாக கட்டப்பட்டு வருகிறது.
திருப்பூர் தொழில் நகரம் என்பதால் இங்கு தமிழகம் முழுவதும் இருந்து பல்வேறு ஊர்களில் இருந்து ஏராளமான மக்கள் தினந்தோறம் வந்து செல்கின்றனர். பழைய பேருந்து நிலையம் இடிக்கப்பட்டு கட்டிடப் பணிகள் நடந்து வருவதால் இங்கு வரும் பேருந்துகளின் வழித்தடங்கள் மாற்றப்பட்டுள்ளது. இதனால் இங்கு வரும் பொதுமக்களும், வயதானவர்களும் எந்த இடத்திலிருந்து எந்தெந்த ஊர்களுக்கு பேருந்துகளின் வழித்தடங்கள் மாற்றப்பட்டுள்ளது என்ற பெயர் பலகை இல்லாததால் சிரமத்திற்குள்ளாகின்றனர்.


திருப்பூரில் தற்போது ஐந்து இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைத்துள்ளனர். மதுரை, திருநெல்வேலி, தேனி போன்ற தென்மாவட்டங்களுக்குச் செல்லும் பேருந்துகள் கோவில் வழி என்ற இடத்திலும், பொள்ளாச்சி, உடுமலை, கோவை போன்ற பகுதிகளுக்குச் செல்வதற்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு எதிரிலும், தஞ்சாவூர், கும்பகோணம், திருச்சி போன்ற பகுதிகளுக்கு செல்வதற்கு புதிய பேருந்து நிலையத்திலிருந்தும், சேலம், ஈரோடு, சத்தியமங்களம் போன்ற பகுதிகளுக்குச் செல்வதற்கு நொய்யல் ஆற்றுப் பாலத்தின் அருகிலும், இதோடு பழைய பேருந்து நிலையம் அருகிலும் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.


ஒரு பேருந்து நிலையத்தில் இருந்து மற்ற பேருந்து நிலையத்திற்குச் செல்வதற்கு தனியாக பேருந்துகள் வசதி செய்து கொடுக்கப்படவில்லை. நகரின் மையப்பகுதியான பழைய பேருந்து நிலையத்தில் இருந்து மற்ற பேருந்து நிலையத்திற்கு செல்வதற்கு பேருந்து வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும். தற்போது பெரும்பாலான இரயில்கள் இயக்கப்படாத காரணத்தால் பொதுமக்கள் பேருந்து பயணத்தையே பயன்படுத்துகின்றனர். தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைந்துள்ள இடங்களில் பொதுமக்களுக்கு எந்தவித அடிப்படை வசதிகளையும், மாநகராட்சி நிர்வாகம் செய்து கொடுக்கவில்லை. பொதுமக்கள் இயற்கை உபாதைகளை கழிக்க கழிப்பறை வசதி ஏதும் செய்து கொடுக்கவில்லை. குடிநீர் வசதியும் இல்லை. இயற்கை உபாதைகளை கழிக்க பெண்கள் சிரமத்திற்குள்ளாகின்றனர்.

வெயில்காலம் என்பதால் நிழற்குடைகள் இல்லாததாலும் வயதானவர்களும், நோயாளிகளும் சிரமத்திற்குள்ளாகின்றனர்.
தற்காலிக பேருந்து நிலையங்களில் இருந்து எந்தெந்த ஊர்களுக்குச் செல்லும் பேருந்துகள் அந்த இடத்திலிருந்து செல்கிறது என்ற பெயர் பலகையும் இல்லை. இதனால் பயணிகள் எந்த பேருந்து எங்கிருந்து புறப்படுகிறது என்பது தெரியாமல் சிரமப்படுகிறார்கள்.
பொதுமக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றாத மாநகராட்சி அதிகாரிகளிடம் குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, எந்தெந்த ஊருக்கு எந்தெந்த இடங்களில் இருந்து பேருந்துகள் செல்கிறது என்கிற பெயர் பலகை வசதி, போன்றவற்றை செய்து தரக்கோரினால் மாநகராட்சியில் பணம் இல்லை என்று அலட்சியமாக பதில் சொல்கிறார்கள். பொதுமக்களின் அடிப்படை வசதிகளை நிறைவேற்றாத அதிகாரிகள் மீது மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும்.


கோடைகாலம் தொடங்கிவிட்டதால் இனிமேலாவது மக்களின் நலன் கருதி முதியவர்களும் நோயாளிகளும் இளைப்பாரும் வகையில் நிழற்குடை அமைத்துத் தரவேண்டும். இயற்கை உபாதகளை கழிக்க கழிப்பிட வசதி, குடிநீர் வசதி, அறிவிப்பு கலகைகள் போன்ற பொதுமக்களின் அடிப்படை தேவைகளை திருப்பூர் மாநகராட்சி ஆணையரும், மாவட்ட ஆட்சியரும் செய்து தரவேண்டும் என்பதே பொதுமக்கள், சமூகஆர்வலர்களின் கோரிக்கையாக இருக்கிறது. பொதுமக்களின் கோரிக்கையை நிறைவேற்றுவார்களா? மாநகராட்சி அதிகாரிகளும், மாவட்ட ஆட்சியரும் காத்திருப்போம்..

சௌந்தர்ராஜன்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button