விருதுநகரில் கொள்ளை போகும் மணல்..! : கண்டுகொள்ளாத கனிமவள அதிகாரிகள்
தமிழகத்திலேயே விவசாயம் பொய்த்துப்போன மாவட்டங்களில் விருதுநகர் மாவட்டமும் ஒன்று. இந்த மாவட்டத்தில் பல வருடங்களாக மழை பெய்யாத காரணத்தால் விவசாயம் செய்ய தண்ணீர் இல்லாததால் மக்கள் தங்களது வாழ்வாதாரத் தேவைகளை பூர்த்தி செய்ய சென்னை போன்ற பெருநகரங்களுக்கு இடம் பெயர்ந்து சென்று விட்டார்கள். எஞ்சியுள்ளவர்களும் தொழிற்சாலைகளில் வேலைக்குச்சென்று தங்களது குடும்பததை காப்பாற்றுகிறார்கள். என்னதான் பணம் சம்பாதித்தலும் வாழவும், அத்யாவசிய கடமைகளை நிறைவேற்றவும், தண்ணீர் வேண்டுமே. அந்த தண்ணீருக்காக இன்று பல கிலோ மீட்டர் தொலைவிற்கு நடையாய் நடந்து குடங்களில் தண்ணீர் கொண்டு வந்து தான் தங்களது அத்தியாவசிய கடமைகளை நிறைவேற்ற வேண்டிய அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள் விருதுநகர் மாவட்ட மக்கள்.
இதற்கு முக்கிய காரணம் என்ன என்று காரியாபட்டி, திருச்சுழி, நரிக்குடி போன்ற பகுதிகளில் விசாரித்தபோது சில வருடங்களாக அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் கூட்டு சேர்ந்து தொடர் மணல் திருட்டில் ஈடுபடுகிறார்கள்.
தற்போது கூட காரியாபட்டி அருகே கிளவநேரியில் தினசரி 250 லாரிகளில் மணல் கொள்ளை நடந்து கொண்டுதான் இருக்கிறது. நாங்களும் ஏடி மைண்ட்ஸ் டிஆர்ஓ மாவட்ட ஆட்சியர், போன்ற அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. சவுடு மணல் அள்ளுவதாக அனுமதி வாங்கி ஆற்று மணலை அள்ளி பல ஆயிரக்கணக்கில் விற்பனை செய்து கனிம வளத்தை கொள்ளை அடிக்கிறார்கள். கனிம வளத்தை காக்க வேண்டிய மாவட்ட கனிம வள அதிகாரிகளிடம் இது சம்பந்தமாக புகார் கூறினால் அவர்கள் ஒன்றரை ஆண்டுகளாக போராடி இப்போது தான் மணல் அள்ளுகிறார்கள். இந்த பைல் பழைய கலெக்டர் கையெழுத்துப்போட்டது பாவம் விட்டுவிடுங்கள் என்கிறார் சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம் போன்ற தென்மாவட்டங்களில் மணல் அள்ளக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மாண்புமிகு நீதிபதி கிருபாகரன் உத்தரவு பிறப்பித்துள்ளாரே என்று கேட்டபோது அது சிவகங்கை மாவட்டத்திற்கு மட்டும் தான் விருதுநகருக்கு அவர் சொல்லவில்லை என்கிறார்.
இதே போல் திருச்சுழி அருகே சப்பாணியேந்தல் என்ற இடத்திலும் தொடர் மணல் கொள்ளையில் ஈடுபடுகிறார்கள். சவுடு மணல் அள்ளுவதாக சப்பாணியேந்தல் கிராமத்தில் அனுமதி பெற்று இங்கிருந்து 20 கி.மீட்டர் தொலைவில் நரிக்குடி அருகில் ஆதித்தனேந்தல் பள்ளபட்டி கிராமத்தில் மணல் அள்ளுகிறார்கள். இதேபோல் நாலூர், சொரியனேந்தல், மறையூர் போன்ற இடங்களிலும் இரவு பகலாக மணலை திருடிச்செல்கிறார்கள். இதனால் நிலத்தடி நீர் வற்றி குடிக்கத் தண்ணீர் இல்லாமல் ஆடு, மாடுகள் பல ஊர்களில் இறந்து விட்டது. பொதுமக்களும் தவித்த வாய்க்கு தண்ணீர் இல்லாமல் தவிக்கிறோம். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மணல் திருட்டை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு காரியாபட்டி, திருச்சுழி, நரிக்குடி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் தற்போது காரியாபட்டி அருகே கிளவனேரி, திருச்சுழி அருகே சப்பானியேந்தல், நரிக்குடி அருகே ஆதித்தியனேந்தல் பள்ளபட்டி போன்ற பகுதிகளில் இரவு பகலாக மணல் திருடப்பட்டு வருகிறது என்றும் இதை உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளது.
இந்த செய்தியை பார்த்தாவது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கிறார்களா? என்று நாமும் காத்திருப்போம்.
–நமது நிருபர்