பள்ளிகள் திறப்பு… கட்டுப்பாடுகளும் வழிகாட்டு நெறிமுறைகளும்…
தமிழகத்தில் வரும் 19ம் தேதி 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கூடிய வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர்.
கொரோனா பரவல் சற்று குறைந்து வரும் நிலையில் 19- ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. அது மட்டுமின்றி, சில கட்டுப்பாடுகளையும், வழிகாட்டு நெறிமுறைகளையும் அரசு அறிவித்துள்ளது.
அதன்படி, நண்பர்களுடன் உணவை பகிர்ந்து சாப்பிடக்கூடாது, விளையாட்டு பிரிவு கிடையாது, மாணவர்கள் சமூக இடைவெளியுடன் பழக வேண்டும் என்பன போன்ற விதிமுறைகள் வருத்தத்தை அளிப்பதாக மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.
உணவை பகிர்ந்து சாப்பிடுவதும், நண்பர்களுடனான விளையாட்டும் தடைபடுவதால் தங்களது மகிழ்ச்சியான நேரங்கள் மீண்டும் கிடைக்காமல் போகும் என குறிப்பிடுகின்றனர் மாணவர்கள்.
இருப்பினும், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அரசு அறிவித்துள்ள விதிமுறைகளை கடைப்பிடித்து பள்ளிக்கு செல்வோம் என மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆன்லைன் வகுப்பில் குழந்தைகள் என்ன படிக்கின்றனர் என்பது கூட தங்களுக்கு தெரியாது என்கின்றனர் பெற்றோர். கட்டுபாடுகளுடன் பள்ளி திறப்பது வரவேற்க கூடியது என்றாலும், அதனை ஆசிரியர்களும், மாணவர்களும் முறையாக பின்பற்ற வேண்டும் எனக் குறிப்பிடுகின்றனர்.அரசு விதிமுறைகள் விதிப்பது மட்டுமின்றி அதனை கண்காணிக்க வேண்டும் என்றும் பெற்றோர்கள் வலியுறுத்துகின்றனர்.
நீண்ட நாள் கழித்து மாணவர்களை பார்க்க போவது மகிழ்ச்சி அளிப்பதாக ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். அரசு விதித்துள்ள கட்டுபாடுகள் நல்ல விஷயமாக இருந்தாலும், மாணவர்கள் அதனை கடைபிடிப்பார்களா என்பது சந்தேகம் தான் என ஆசிரியர்கள் கூறுகின்றனர்.
கொரோனா விடுமுறைக்கு பிறகு பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படுகிறது. மாநிலம் முழுவதும் இதற்கான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், எழும்பூரில் உள்ள பிரசிடென்ஸி மகளிர் பள்ளியில் மேற்கொள்ளப்பட்டுள்ள கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் கண்ணப்பன் நேரில் ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், அந்தந்த மாவட்டங்களில் மாவட்ட கல்வி அலுவலர்கள் பள்ளிகளில் ஆய்வு நடத்தி வருவதாக கூறினார்.
மேலும் பள்ளிகள் திறக்கப்பட்ட பிறகு கொரோனா அச்சத்தைப் போக்கும் விதமாக மாணவர்களுக்கு 2 நாட்கள் மனநல ஆலோசனை வழங்கப்படவுள்ளதாகவும் கண்ணப்பன் தெரிவித்தார்.