தமிழகம்

ஆன்லைன் லோன் செயலி வெளிவந்த அதிர்ச்சி தகவல்… : போலி ஆவணங்கள் மூலம் 1600 சிம்கார்டுகள் வாங்கி மோசடியில் சிக்கிய சீன சிறுவனம்

ஆன்லைனில் லோன் கொடுப்பதாகக் கூறி செயல்படும் செயலிகளால் நாளுக்குநாள் தற்கொலைகள் அதிகரித்து வருகின்றன. இதுகுறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடத்திய விசாரணையில் பெங்களூருவில் True kindle என்ற நிறுவனத்தின் பெயரில் நடத்தப்பட்ட கால்சென்டர் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நிறுவனம், பல லோன் செயலிகளை உருவாக்கி, இளைஞர்களுக்கு 2000 ரூபாய் முதல் 20000 ரூபாய் வரை கடன் கொடுத்தது அம்பலமானது.

True kindle நிறுவனம் நடத்தி வந்த சீனாவின் க்வாங்டோங் மாகாணத்தைச் சேர்ந்த 28 வயதான வூ யுவான்லும், 38 வயதான ஜியோவா யமோவா என்ற இரண்டு சீனர்களும், பிரமோதா மற்றும் பவன் என்ற இரண்டு இந்தியர்களும் பிடிபட்டனர். இந்த கால்சென்டரை சீனாவில் இருந்தபடி டிங்டாங் என்ற செயலி மூலம் கண்காணித்து இயக்கி வந்தவர் ஹாங்க் என்ற நபர் என்பதும் விசாரணையில் தெரியவந்தது.

True kindle நிறுவனம் தொலைத் தொடர்புகளை மேற்கொண்டது குறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. லோன் செயலிகளில் பயன்படுத்தப்படும் செல்போன் எண்களை ஆய்வு செய்ததில் ஒரு குறிப்பிட்ட நிறுவனத்திடமிருந்து மட்டும் சிம்கார்டுகள் வாங்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

சென்னை மற்றும் பெங்களூரில் கார்ப்பரேட் நிறுவனத்தில் பணிபுரிபவர்களுக்கு தர வேண்டியிருப்பதாகக் கூறி, மொத்தமாக ஒரு நிறுவனத்திடம் போலி ஆவணங்களை சமர்ப்பித்து 1600 சிம் கார்டுகளை வாங்கியுள்ளனர். இவற்றில் சென்னையில் மட்டும் 500 சிம் கார்டுகள் பெறப்பட்டுள்ளன.


போலி ஆவணங்களில் 10க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் ஒவ்வொரு நிறுவனத்திலும் 150 ஊழியர்கள் பணிபுரிவதாக குறிப்பிடப்பட்டிருந்ததும் தெரியவந்துள்ளது. ஒருமுறை அளிக்கப்பட்ட போலி ஆவணங்களை வைத்தே மீண்டும் மீண்டும் சிம்கார்டுகள் வாங்கப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.

மேலும், லோன் செயலிகளை பதிவிறக்கம் செய்தவர்களின் தகவல்களை திருடவும், லோனை திருப்பி செலுத்தாத நபர்களை மிரட்டவும் இந்த சிம் கார்டுகளைப் பயன்படுத்தியது அம்பலமாகியுள்ளது. சட்டவிரோத செயலுக்காக, சிம்கார்டுகள் அளித்த தொலைத்தொடர்பு சேவை நிறுவனத்திடம் விசாரிக்க மத்திய குற்றப்பிரிவு போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

இதையடுத்து ஆன்லைன் ஆப் மூலம் கடன் தந்து மக்களை ஏமாற்றி மிரட்டும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. இது தொடர்பாக பல்வேறு கோரிக்கைகள் ரிசர்வ் வங்கிக்கு வந்தததையடுத்து பொதுமக்களுக்கு முக்கிய அறிவுறுத்தலை ரிசர்வ் வங்கி வழங்கி உள்ளது.

ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில், “அங்கீகாரமற்ற கடன் செயலிகள் மூலம் கடன் பெற்று பலர் பாதிப்புக்கு உள்ளாகியிருப்பதாக தகவல்கள் வருகிறது. அங்கீகாரமற்ற லோன் ஆப் மூலம் கடன் பெற வேண்டாம். அங்கீகாரமற்ற ஆன்லைன் கடன் செயலிகள் மூலம் கடன் வாங்குவது சட்டத்திற்கு புறம்பானது. அங்கீகாரமற்ற ஆன்லைன் கடன் செயலிகள் மீது பொதுமக்கள் புகார் அளிக்கலாம்“ என அறிவித்துள்ளது.

ரபீக் அகமது

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button