தலைதெறிக்க ஓடும் இளைஞர்கள்… ஹெலிகேம் வீடியோ..!
திருப்பூரில் காவல்துறையினரின் ஹெலி கேமரா கண்காணிப்புக்கு பயந்து ஊருக்கு வெளியே காட்டுப் பகுதியில் கேரம் விளையாடிக்கொண்டும், கும்பலாகவும் சுற்றிய இளைஞர்கள் தலைதெறிக்க ஓடிய காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்த உள்ளது.
தமிழ் சினிமா ஒன்றில்கேமராவை கண்டாலே கிராமமே தலைதெறிக்க ஓடும் காட்சி ஒன்று நகைச்சுவையாக படமாக்கப் பட்டிருக்கும்..!அதே பாணியில் திருப்பூரில் போலீசாரின் ஹெலி கேமராவை கண்டு உள்ளூர் இளைஞர்கள் பயந்துஓடிய சம்பவம் அரங்கேறி உள்ளது.
தமிழகத்தில்79 கொரோனா நோயாளிகளுடன் 3 வது இடத்தை எட்டிப்பிடித்துள்ளது திருப்பூர்..! இதில் 16கொரோனா நோயாளிகளை கொண்ட தேவாரம் பாளையம் கிராமத்திற்கு சீல் வைத்து பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. திருமுருகன் பூண்டி காவல்துறையினர் அந்தபகுதிக்குள் மக்கள் கூடுவதை தடுக்க ஹெலி கேம் மூலம் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்த நிலையில் கொரோனா குறித்த விழிப்புணர்வு கொஞ்சமுமின்றி 144 தடை உத்தரவை சற்றும் மதிக்காத இளைஞர்கள் அவிழ்த்து விட்ட காளைகள் போல ஊருக்கு அருகில் உள்ள கரிசல்காட்டு பகுதியில் கருவேலமர நிழலில் கும்பலாக கேரம் விளையாடிக் கொண்டிருந்தனர். இதனை ஹெலி கேமராவில் பார்த்த போலீசார், அந்த கும்பலை நோக்கி ஹெலி கேமராவை கொண்டு சென்றனர்.
அவ்வளவு தான் அலங்கா நல்லூர் ஜல்லிக்கட்டில் அடங்காத காளைபோல சுற்றிய அத்தனை பேரும், மதம் பிடித்த யானைக்கு பயந்து ஓடும் பயிற்சி பாகன்களை போல தலைதெறிக்க சிதறி ஓடினர்…
அந்த கும்பலில் ஒரு இளைஞர், மட்டும் திரும்ப ஓடி வந்து நேக்காக கேரம் போர்ட்டை கவ்விக் கொண்டு சோக்காக தலையை மறைத்தபடியே ஓடியது, அவரது கெட்ட நேரம், மானத்தை மறைத்துக் கொண்டிருந்த வேட்டி, இடுப்பில் இருந்து கழண்டு காற்றில் பறந்ததால், ஓடுவதை பாதியில் கைவிட்டு நடுவில் கொஞ்சம் பதுங்கியது.
தலைக்கு மேல் கேரம் போர்டு இருக்கும் தைரியத்தில் ஓடாமல் அப்படியே குத்தவைத்து மறைந்தும் மறையாமலும் அவர் கேமராவை நோக்க, கேமராவும் அவரை சரியாக நோக்கியது.
மறைந்து இருந்து பார்த்த அந்த மன்மதனின் தலைக்கு மேலே சட்டென்று ஒளிவட்டம் போல சென்ற ஹெலி கேமை பார்த்து தனது கவச குண்டலமான கேரம் போர்ட்டையும் உதறி விட்டு தெறித்து ஓடினார்..!
ஒருவழியாக போலீசின் கேமராவிடம் இருந்து தப்பினார்கள் அந்த ஊர் இளைஞர்கள்!
தெருவுக்கு வெளியே இப்படி ஓடிக்கொண்டிருக்க, தெருவுக்குள் தனி நபர் இடைவெளியை பின்பற்றாமல் கும்பலாக சுற்றிக் கொண்டிருந்த கும்பல், தலை தெரிக்க ஓடி அவரவர் வீடுகளுக்குள் பம்மிக் கொண்டனர்.
தடை செய்யப்பட்ட பகுதியில் உள்ளவர்கள் அரசுக்கு ஒத்துழைப்பு வழங்கி வீட்டிற்குள் இருக்காமல் இப்படி கும்பல் கும்பலாக வீதியில் சுற்றினால் கொரோனா வருகிறதோ இல்லையோ, வழக்கு அபராதம் போன்ற வில்லங்கம் வீடுதேடி வரும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர் காவல்துறையினர். இந்த வீடியோவை தங்களது முக நூல் பக்கத்திலும், பகிர்ந்து கொரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். தடை செய்யப்பட்ட பகுதிக்குள் அடங்க மறுத்து அத்து மீறினால் என்ன மாதிரியான ஓட்டம் ஓடவேண்டிவரும் என்பதற்கு இந்த காட்சிகளே சாட்சி..!
இந்த சூழலில் சேலம் மாவட்ட போலீசார் திருப்பூர் வீடியோவுக்கு போட்டியாக ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளனர். சேலம் மாவட்ட போலீசாரின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் அக்கவுண்ட்டில் வீடியோ பதிவு ஒன்று வெளியானது.
அந்த பதிவில் திருப்பூரில் நடந்த அதே காமெடி சேலம் மாவட்டத்தில், நகர மலை அடிவாரத்தில் நடந்துள்ளது என போலீசார் குறிப்பிட்டுச் சம்பந்தப்பட்ட வீடியோவை பதிவிட்டுள்ளனர்.
அந்த வீடியோ, திருப்பூரில் நடந்த அதே பாணியில் தொடங்குகிறது. கண்காணிப்பிற்குப் பயன்படுத்தப்பட்டிருந்த ட்ரோன் கேமரா உயரப் பறந்து சென்று கொண்டிருந்தபோது 20க்கும் மேற்பட்ட இளைஞர்கள் நகர மலை அடிவாரத்தில் இருப்பதைக் கண்டறிந்தது.
அதைத் தொடர்ந்து அவர்களை விரட்ட கேமராவை பயன்படுத்தியபோது உச்சக்கட்ட காமெடி அரங்கேறியது. கேமராவை பார்த்தவுடன் அங்கு கிரிகெட் விளையாடியவர்கள் நாலாபுரமும் சிதறி ஓடினர். அதில் சிலர் கேமராவிலிருந்து தப்பிப்பதற்குச் செய்த சாகசங்கள் தமிழ்படங்களில் வரும் காமெடி வசனங்கள் கொண்டு எடிட் செய்யப்பட்டிருந்தது.
கேமரா கண்காணிக்க வருகிறது என்றவுடன் வெட்டவெளியிலிருந்த ஒரு இளைஞர் தான் கட்டியிருந்த லுங்கியை அவிழ்த்து அதன் மூலம் உடலை மறைத்துக் கொண்டு அதே இடத்தில் அமர்ந்து கொண்டார். பின் தன் அருகில்தான் கேமரா நின்று கொண்டிருக்கிறது என்பதை உணர்ந்து சில சாகசங்களைச் செய்து முடித்து ஓடத் தொடங்கினார்.
மேலே குறிப்பிட்ட நபரை விரட்டியடித்த கேமரா தொடர்ந்து சிறிய மரத்தின் பின்னால் ஒளிந்துக் கொண்டிருந்த நபருக்கு ஆட்டம் காட்டியது. அதன்பின் ஒரு பள்ளத்தை நோக்கி சென்றபோது, அங்கு மரக்கிளைகளைக் கையில் பிடித்து மரக்கன்று போல் மறைந்து நின்றவர்களை விரட்டியது.
இப்படி கேமராவை வைத்து ஊரடங்கை மீறி சமூகத்துக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்திய அந்த இளைஞர்கள் சிலரை போலீஸ் இருவர் நிற்கும் பக்கம் கொண்டு சென்றனர். சம்பந்தப்பட்ட இளைஞர்களுக்கு போலீசார் உரிய அறிவுரை வழங்கி வீட்டிற்கு அனுப்பி வைத்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
- ரா.வெற்றிவேல்,பா.வேல்மணி