பூண்டு கொள்முதல் நிலைய சேமிப்புக் கிடங்கு அமைக்காதது ஏன்? : உயர் நீதிமன்றம் கேள்வி
நேரடி பூண்டு கொள்முதல் நிலையத்தையும், கிடங்கு வசதியையும் கொடைக்கானல் பகுதியில் அமைக்கக் கோரிய வழக்கில் மாவட்ட ஆட்சியர், கொடைக்கானல் நகராட்சி ஆணையர் பதில் மனுத்தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதி மிகப்பெரும் சுற்றுலாத் தலங்களில் ஒன்று. இங்குள்ள மேல்மலை கிராமங்களான மன்னவனூர், பூண்டி, பூம்பாறை எனப் பல இடங்களில் 100 ஏக்கருக்கு மேல் மலைப்பூண்டு பயிர் செய்யப்படுகின்றன. தனித்துவமான நிறம், சுவை, காரத்தன்மை உள்ளதால் கொடைக்கானல் மலைப் பூண்டுக்கு புவிசார் குறியீடு (Geographical Indication Tag) வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கொடைக்கானலில் நேரடி பூண்டு கொள்முதல் நிலையத்தையும், கிடங்கு வசதியையும் அமைக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் கொடைக்கானல் பகுதியைச் சேர்ந்த மனோஜ் இம்மானுவேல் என்பவர் மனுத்தாக்கல் செய்திருந்தார். அவரது பொதுநல மனுவில், “கொடைக்கானலில் விளைவிக்கப்படும் மலைப்பூண்டு, தேனி மாவட்டம் வடுகபட்டி சந்தைக்குக் கொண்டு சென்று விற்பனை செய்யப்படுகிறது.
இதன் காரணமாக டிரான்ஸ்போர்ட் செலவு பன்மடங்கு ஏற்படுகிறது. அதோடு விளைவிக்கப்பட்ட பூண்டை பாதுகாப்பாகத் தேக்கி வைக்கும் நிலையங்கள் போன்ற வசதிகள் இல்லாத காரணத்தால் மழைக்காலங்களில் பூண்டை பாதுகாக்க இயலாத நிலை உருவாகிறது. கொடைக்கானலில் நேரடி பூண்டு கொள்முதல் நிலையங்களை அமைத்தால் சுற்றுவட்டார மாவட்டங்களிலிருந்து மட்டுமன்றி மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் வந்து செல்வர். இதனால் விவசாயிகள் பலனடைவர்” எனத் தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆனந்தி அமர்வு இது குறித்து, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர், கொடைக்கானல் நகராட்சி ஆணையர் பதில் மனுத்தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வரும் மார்ச் மாதம் 3-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
– முகமது ஆரிப்