சிறைக்குள் நான் சாகவும் தயார்… : நெல்லை கண்ணன்
கடந்த சில தினங்களாக நாடு தழுவிய பேசுபொருளாக இருந்து வருகிறார் நெல்லை கண்ணன். எஸ்.டி.பி.ஐ நடத்திய கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு பேசிய போது பிரதமர் மோடி , அமித்ஷா, மற்றும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோரை அவமதிக்கும் விதமாகவும், மத்திய உள்துறை அமைச்சருக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் விதத்தில் பேசியதாகவும் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பேச்சுக்காக, இந்திய தண்டனைச் சட்டத்தில் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், உடல்நலக் கோளாறால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் நெல்லை கண்ணன். இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து நெல்லைக் கண்ணன் தெரிவித்தது கவனிக்க வேண்டிய அம்சமாக உள்ளது.
அவர் தெரிவித்ததாவது, “எனக்கு வயது 75. சிறைக்குள்ளேயே இறந்துபோகவும் நான் தயாராகவே இருக்கிறேன்” என்று தெரிவித்தார். மருத்துவமனைக்குள் செல்வதற்கு முன் இவ்வாறு தெரிவித்த நெல்லை கண்ணன், தன் பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. நான் இறைவனை நோக்கி பிரார்த்தியுங்கள், இறைவன் மற்றதைப் பார்த்துக் கொள்வான் என்றும்தான் சொன்னேன் எனவும் தெரிவித்துள்ளார்.
போடப்பட்டிருக்கும் வழக்குகள் குறித்து கேட்டபோது, சட்டரீதியாக அவற்றைச் சந்திக்க நான் தயாராகவே உள்ளேன் என்றும் தெரிவித்தார்.
மேலும், “சில நாட்களாகவே மிரட்டல் அழைப்புகளும் வந்தவண்ணமாக உள்ளன. இதுதானா அவர்களின் மதம் அவர்களுக்கு கற்பிப்பது” என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்து நெல்லை கண்ணன் பேசிய வார்த்தை தவறானது. ஆனால், தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருக்கும் நோக்கத்தில் அவர் பேசியிருக்க மாட்டார் என்றார். மேலும், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு கடுமையாக எழுந்துள்ளது. இதனை பாஜக எதிர்பார்த்திருக்காது எனவும் வைகோ தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, நெல்லை கண்ணனை உடனடியாகக் கைது செய்யக் கோரி தமிழக பா.ஜ.க-வினர் போர்க்கொடி தூக்கினர். அவரை உடனடியாகக் கைது செய்யக் கோரி பா.ஜ.க சார்பில் சென்னை மெரினா காந்தி சிலை முன்பாகப் போராட்டமும் நடத்தப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட இல.கணேசன், பொன்.ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா, வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.
இதனால், நெல்லை கண்ணன் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். தன்னைக் கைது செய்துவிடுவார்கள் என நினைத்த நெல்லை கண்ணன், சிகிச்சை பெற்று வந்த மருத்துவமனையிலிருந்து வெளியேறினார்.
அவரை நெல்லை காவல்துறை தேடி வந்த நிலையில் பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகிலுள்ள தனியார் விடுதியில் தங்கியிருப்பதாக காவல்துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து பெரம்பலூர் போலீஸார் அந்தத் தனியார் விடுதியை முற்றுகையிட்டனர். நெல்லை கண்ணனை அறையை விட்டு வெளியே செல்லாதவாறு தடுப்பு அமைத்தனர்.
நெல்லை கண்ணன் தங்கள் பாதுகாப்பில் இருப்பது குறித்து நெல்லை காவல்துறைக்குத் தகவல் அளித்தனர். இந்நிலையில் தனியார் விடுதி முன்பு பா.ஜ.க-வினர் மற்றும் எஸ்.டி.பி.ஐ கட்சியினர் திரண்டனர். நெல்லை கண்ணனுக்கு எதிராகவும் ஆதரவாகவும் இருதரப்பினரும் கோஷமிட்டனர்.
நிலைமை மோசமாவதை உணர்ந்த பெரம்பலூர் போலீஸார் விடுதியின் பின்பக்க வாசல் வழியாக ஒரு காரில் ஏற்றி நெல்லை கண்ணனை ரகசிய இடத்துக்குப் பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர். இதுகுறித்து தகவலறிந்த பா.ஜ.க-வினர் அந்த காரை விரட்டிச் சென்று தாக்கினர். போலீஸ் பாதுகாப்பில் இருக்கும் நபரை அழைத்துச் செல்லும் வாகனத்தை பா.ஜ.க-வினர் தாக்குதல் நடத்துமளவுக்குப் பாதுகாப்பில் அஜாக்கிரதையாக இருந்ததாகக் கூறி காவல்துறையிடம் எஸ்.டி.பி.ஐ கட்சியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் நெல்லை கண்ணனுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. ஏற்கெனவே அவர் மீது மூன்று பிரிவுகள் மீது வழக்கு தொடரப்பட்டது.
இந்நிலையில் அந்த முதல் தகவல் அறிக்கையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு 153 ஏ, 506 (1) ஆகிய பிரிவுகளில் மேலும் இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த பிரிவுகளில் கைது செய்யப்பட்டால் பிணையில் வர முடியாது என கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து அவர் நெல்லை முதலாவது நீதிமன்றத்தில் நீதிபதி பாபு முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது நீதிபதி நெல்லை கண்ணனை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.
& உதுமான் அலி