தமிழகம்

மனைவியை கொன்றுவிட்டு நாடகமாடிய கணவன் !

விழுப்புரம் சுதாகர் நகரைச் சேர்ந்த இந்திரா, பெட்டிக்கடையுடன், வட்டிக்கு பணம் கொடுத்து வந்தார். இந்த நிலையில் கடந்த 7ம் தேதி அதிகாலை அவர் எரிந்த நிலையில் சடலமாக கிடப்பதாக விழுப்புரம் தாலுகா போலீசாருக்கு அவரது கணவர் நடராஜன் தகவல் கொடுத்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தடயங்களை சேகரித்ததோடு, இந்திராவின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்திரா வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்ததால், பணம் கொடுக்கல்-வாங்கலில் கொலை செய்யப்பட்டாரா அல்லது அவர் அணிந்திருந்த நகைகள் மாயமானதால் கொள்ளையர்கள் கொலைசெய்தனரா என்ற கோணத்தில் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில், தனக்கு நடராஜன் மீது சந்தேகம் இருப்பதாக இந்திராவின் தம்பி வெங்கடேசன் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். அவரிடம் கிடுக்குப்பிடி விசாரணை மேற்கொண்டதில் மனைவியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

ஓய்வுப்பெற்ற அரசுப்பள்ளியின் ஆசிரியரான நடராஜனுக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவி இந்திராவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக திருக்கோவிலூரில் இரண்டாவது மனைவியான லீலாவுடன் வசித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த 5ம் தேதி நள்ளிரவு இந்திராவை பார்க்க வந்தபோது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றியதில், இந்திராவின் தலையில் இரும்பு கம்பியால் தாக்கிய நடராஜன் அவரது உடல் மீது பழைய துணிகளை போட்டு மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்து எரித்துள்ளார்.

திருட்டு சம்பவம் போல் தெரியவேண்டும் என்பதற்காக வீட்டிலிருந்த 8 சவரன் நகையை எடுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பியுள்ளார். மறுநாள் வீட்டிற்கு வந்து மனைவி இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். நடராஜனிடம் வாக்குமூலத்தை பெற்ற போலீசார் அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்து விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்துள்ளனர்.

நகைக்காக பெண் கொலை செய்யப்பட்டதாக முதலில் கூறப்பட்ட நிலையில், ஓய்வு எடுக்கும் வயதில் மனைவியை கொன்றுவிட்டு சிறைக் கம்பிகளை எண்ணுகிறார் இந்த ஓய்வுபெற்ற ஆசிரியர்..

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button