தமிழகம்

உயிர்த்தெழுவார் என்ற நம்பிக்கையில் இறந்த பெண் காவலர் உடலை வீட்டில் வைத்திருந்த சகோதரி, மதபோதகர்

உயிர்த்தெழுவார் என்ற நம்பிக்கையில் இறந்த பெண் காவலரின் உடலை 22 நாள்கள் வீட்டில் வைத்திருந்த சம்பவம் திண்டுக்கலில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக இருவர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள்.

திண்டுக்கல் மாவட்டம், பட்டிவீரன்பட்டியைச் சேர்ந்தவர் அன்னை இந்திரா (வயது 38). திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் முதல்நிலைக் காவலராகப் பணியாற்றிவருகிறார். தேனியைச் சேர்ந்த பால்ராஜ் என்பவருக்கும், அன்னை இந்திராவுக்கும் திருமணம் நடைபெற்று இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர், அன்னை இந்திரா, கிறிஸ்தவ மதத்துக்கு மாறியிருக்கிறார். இதனால் பால்ராஜுக்கும் அன்னை இந்திராவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும், அதைத் தொடர்ந்து இருவரும் பிரிந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்தநிலையில், அன்னை இந்திரா, தனது இரண்டு குழந்தைகளுடன், திண்டுக்கல் நந்தவனப்பட்டி டிரஷரி காலனியில் வாடகை வீட்டில் வசித்துவந்திருக்கிறார். இவர்களுடன், அன்னை இந்திராவின் சகோதரி வாசுகி மற்றும் மதபோதகர் சுதர்சனம் ஆகியோர் அதே வீட்டில் தங்கியிருக்கிறார்கள். உடல்நலக் குறைவு காரணமாக, கடந்த ஒரு வருடத்துக்கு முன் விருப்ப ஓய்வுக்காக விண்ணப்பித்த அன்னை இந்திரா, கடந்த அக்டோபர் 16-ம் தேதி மருத்துவ விடுப்பில் சென்றிருக்கிறார். மருத்துவ விடுப்பு முடிந்து பணிக்குத் திரும்பாத அன்னை இந்திராவைப் பற்றி விசாரிக்க, அவரது வீட்டுக்கு இரண்டு பெண் காவலர்கள் சென்றிருக்கிறார்கள்.

அன்னை இந்திரா

ஆனால், வீட்டில் உள்ளவர்கள் அன்னை இந்திரா பற்றி முன்னுக்குப் பின் முரணான தகவல்களைக் கூறியிருக்கிறார்கள். மேலும், வீட்டின் ஒரு அறை மட்டும் பூட்டப்பட்டு, அதிலிருந்து துர்நாற்றம் வீசியிருக்கிறது. இதனால் சந்தேகமடைந்த பெண் காவலர்கள், தாடிக்கொம்பு போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்து வந்த தாடிக்கொம்பு போலீஸார், பூட்டிய அறையைத் திறந்து பார்த்தனர். அங்கே, இறந்தநிலையில் அன்னை இந்திராவின் உடல் துணியால் மூடப்பட்டு அழுகிய நிலையில் இருந்திருக்கிறது. அதைத் தொடர்ந்து சகோதரி வாசுகி மற்றும் மதபோதகர் சுதர்சனிடம் விசாரித்த போலீஸார் அதிர்ச்சியடைந்தனர்.

கடந்த டிசம்பர் 7-ம் தேதி படுக்கையிலிருந்த இந்திரா சுயநினைவை இழந்திருக்கிறார். ஜெபம் சொல்லி சரிசெய்வதாகக் கூறி, மதபோதகர் சுதர்சன் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல மறுத்திருக்கிறார். கண்விழிக்காத உடலிலிருந்து இரண்டு நாள்களில் துர்நாற்றம் வீச ஆரம்பித்திருக்கிறது. அப்போதும், அன்னை இந்திரா உயிர்தெழுவார் என்றும், இயேசு ரட்சிப்பார் என்றும் கூறியிருக்கிறார் சுதர்சன். மேலும், இரண்டு குழந்தைகள், சகோதரி வாசுகி ஆகியோர் தினமும் இந்திராவின் உடல் அருகே அமர்ந்து ஜெபம் சொல்லிவந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்ப போலீஸார் முயன்றபோது, அதை வாசுகியும் சுதர்சனும் தடுத்திருக்கிறார்கள். `அன்னை இந்திரா இறக்கவில்லை. அவர் ஓய்வு எடுத்துக்கொண்டிருக்கிறார். நிச்சயம் உயிர்தெழுவார்’ எனக் கூறியிருக்கிறார்கள். இருவரையும் சமாதானம் செய்த போலீஸார், விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச்சென்றனர். இந்திராவின் இரண்டு குழந்தைகளும் தனது தாய் உயிர்தெழுவார் என்ற நம்பிக்கையோடு வீட்டின் ஒரு பகுதியில் அமர்ந்திருந்தது, அங்கிருந்த அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

விசாரணை முடிவில், அன்னை இந்திராவின் சகோதரி வாசுகியையும் மதபோதகர் சுதர்சனையும் போலீஸார் கைதுசெய்தனர். அன்னை இந்திராவின் குழந்தைகளைத் தற்காலிகமாக காப்பத்தில் சேர்ந்த போலீஸார், அவர்களின் தந்தை பால்ராஜுக்குத் தகவல் தெரிவித்தனர். உயிர்தெழுவார் என்று கூறி, இறந்த பெண் காவலரின் உடலை 22 நாள்கள் வீட்டில்வைத்து ஜெபம் சொன்ன சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ரபீக்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button