தமிழக எம்பிக்கள் நாகரீகம் அற்றவர்கள் ! கனிமொழியின் எதிர்ப்பால் தனது கருத்தை திரும்பப் பெற்ற தர்மேந்திர பிரதான்

நிதிநிலை அறிக்கை தொடர்பாக இரண்டாவது முறையாக நாடாளுமன்றம் இன்று கூடியது. இந்த கூட்டத்தொடரில், தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கப் பாண்டியன் பேசுகையில், தமிழகத்திற்கு நிதி வழங்காமல், ஒன்றிய அரசு வஞ்சிக்கிறது என்று பேசினார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக, ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசுகையில், ஒன்றிய கல்வி கொள்கை விவகாரத்தில் திமுக தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டது. தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாகரீகம் இல்லாதவர்கள், ஜனநாயகத்திற்கு விரோதமானவர்கள் என எம்பிகளை கடுமையாக விமர்சித்து பேசினார்.

பின்னர் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் தலைவர் கனிமொழி உடனடியாக கண்டனம் தெரிவித்து பேசுகையில், தர்மேந்திர பிரதான் பேசியது மிகவும் வேதனை அளிக்கிறது, புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டதாக பொய்யான தகவலை பேசுகிறார் அமைச்சர். ஒட்டுமொத்த தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களையும் அவமானப்படுத்தி பேசியது, தமிழக மக்களை பேசியது போல்தான் என தனது கண்டனத்தை பதிவு செய்தார். அதன்பிறகு தனது கருத்தை வாபஸ் பெறுவதாக மத்திய அமைச்சர் பேசினார்.
நாடாளுமன்றத்தில் மத்திய கல்வி அமைச்சர் பேசிய விவகாரம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அனைத்து நகரங்களிலும் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உருவ பொம்மை எரிப்பு, ஆர்ப்பாட்டம் என தொடர்ந்து கண்டனக் குரல் எழுந்துள்ளது.