‘காலை உணவை யாரும் தவறவிடக் கூடாது’ : மாணவர்கள் மத்தியில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு
தமிழக சட்டப்பேரவையில் கடந்த மே 7ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 110 விதியின் கீழ் வெளியிட்ட அறிவிப்பில், அரசு பள்ளிகளில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இனி காலை சிற்றுண்டி வழங்கப்படும். முதல் கட்டமாக இத்திட்டம் சில மாநகராட்சிகளிலும் தொலைதூர கிராமப்புறங்களிலும் செயல்படுத்தப்படும்’ என அறிவித்திருந்தார்.
இந்நிலையில், தமிழக அரசு சார்பில் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதில், அரசுத் தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு அனைத்து பள்ளி நாட்களிலும் காலை உணவு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 110 விதியின் கீழ் முதலமைச்சர் வெளியிட்ட அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக மாநகராட்சி, நகராட்சி, ஊரக மற்றும் மலைப்பகுதிகளில் உள்ள 1,545 அரசு தொடக்கப் பள்ளிகளில் பயிலும் 1,14, 095 தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு முதற்கட்டமாக காலை உணவு வழங்கும் திட்டத்தை ரூ.33.56 கோடி செலவில் செயல்படுத்த நிதி ஒப்பளிப்பு செய்து ஆணையிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை, அசோக் நகர், அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் “பள்ளி மாணவர்களுக்கான மனநலம், உடல்நலம் சார்ந்த விழிப்புணர்வு” தொடக்க விழாவில் உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், எத்தனையோ நிகழ்ச்சிகளுக்குச் சென்றாலும் பள்ளிக் கூடங்களுக்குச் செல்வதைப் போன்ற உற்சாகம் வேறு நிகழ்ச்சிகளில் நிச்சயமாக அமைவது இல்லை.
இந்த மேடைக்கு நான் வருவதற்கு முன்னால் ஒரு வகுப்பறைக்குச் சென்று அங்கிருக்கக்கூடிய மாணவச் செல்வங்களோடு கலந்து பேசினேன். ஒரு ஐந்தாறு மாணவியர்களிடத்தில் நான் சில கேள்விகளைக் கேட்டேன். அப்படி கேட்கிறபோது, நீங்கள் எந்தப் பகுதியிலிருந்து வருகிறீர்கள்? எப்படி வருகிறீர்கள், காலையில் உணவு சாப்பிட்டீர்களா? என்று 5 பேர்களிடத்தில் கேட்டேன். 5 பேர்களில் 3 பேர் காலையில் சாப்பிடாமல் வந்தார்கள் என்ற செய்தியை சொன்னார்கள். இது தான் உண்மை. இது தான் இன்றைக்கு இருக்கக்கூடிய நிலை. இது நகரப்பகுதி, ஆனால், கிராமப் பகுதிகளில் இருக்கக்கூடிய மாணவச் செல்வங்களை எண்ணிப் பார்க்கிறபோது, எந்த அளவுக்கு அவர்கள் துன்பத்திற்கு ஆளாகியிருக்கிறார்கள் என்பதை இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ளமுடியும்.
திராவிட இயக்கத்தின் தாய்க் கட்சியான நீதிக்கட்சித் தலைவராக இருந்த சர்.பிட்டி. தியாகராயர் சென்னை மாநகராட்சி மன்றத் தலைவராக இருந்தபோது ஆயிரம் விளக்கு மாநகராட்சிப் பள்ளியில்தான் முதன்முதலாக மதிய உணவுத் திட்டத்தை தொடங்கி வைத்தார். அதுவும் ஆயிரம் விளக்கில்தான் தொடங்கப்பட்டிருக்கிறது. என்னை முதன்முதலாக தேர்ந்தெடுத்த தொகுதி ஆயிரம் விளக்குத் தொகுதிதான்.
வெள்ளுடை வேந்தர் தியாகராயர், பெருந்தலைவர் காமராசர், முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். ஆகியோரால் வளர்த்தெடுக்கப்பட்ட இந்த திட்டமானது இன்றைய அரசால் அடுத்த வளர்ச்சியை அடையப் போகின்றது. மாணவர்களுக்குக் காலைச் சிற்றுண்டியை நாம் வழங்கப் போகிறோம். மாணவர்களாகிய நீங்கள் தன்னம்பிக்கையை முதலில் பெற்றாக வேண்டும். இந்த தன்னம்பிக்கை மட்டும் வந்துவிட்டால் போதும்! படிப்பு தானாகவே வந்துவிடும். அத்தகைய தன்னம்பிக்கையை ஊட்டுவதற்காகத்தான் இந்த பயிற்சி முகாம் என்பதை நீங்கள் மறந்துவிடக் கூடாது.
மன நலன் – உடல் நலன் – ஆகிய இரண்டும் சரியாக இருந்தால் அனைத்து நலன்களும் சிறப்பாக இருக்கும். எப்போதும் நீங்கள் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும். சோர்வாக இருக்கக் கூடாது. சோம்பேறித்தனம்தான் வளர்ச்சிக்கு மிகப்பெரிய தடை! எதையும் நாளைக்குப் பார்த்துக்கலாம், நாளைக்கு படிச்சிக்கலாம், நாளைக்கு எழுதிக்கலாம் என்று தள்ளிப் போடாதீங்க. வாழ்வில் எதையும் சுறுசுறுப்பாக எதிர்கொள்ளக்கூடிய அந்த உணர்வு உங்களுக்கு வந்தாக வேண்டும். அதற்கு உங்கள் உடல் நலத்தை நன்றாக பாதுகாத்துக் கொள்ளவேண்டும், பார்த்துக் கொள்ளவேண்டும்.
நன்றாக சாப்பிடுங்கள், நன்றாக உடம்பைப் பார்த்துக் கொள்ளுங்கள், நன்றாக படியுங்கள், இந்த மூன்றும் தான் நான் உங்களுக்கு சொல்வது. இப்படி சொல்கிறேன் என்றால் நான் முதலமைச்சராக என்ற அதிகாரத்தில் இருந்து சொல்கிறேன் என்று நினைக்காதீர்கள். உங்கள் அப்பாவாக, அம்மாவாக உங்களுடைய பெற்றோரில் ஒருவனாக இருந்து இந்த வேண்டுகோளை இங்கே இருக்கக்கூடிய பிள்ளைகளுக்கு நான் எடுத்து வைக்க விரும்புகிறேன். பள்ளிக்கூடங்கள், பாடங்கள் நடத்தும் கூடங்களாக மட்டுமில்லாமல் அறிவு – ஆற்றல் – மனம் – உடல் ஆகிய அனைத்தையும் வளப்படுத்த வேண்டும். பாதி பெற்றோர்களாக, ஆசிரியர்களும் – பாதி ஆசிரியர்களாக, பெற்றோர்களும் செயல்படவேண்டும். கல்விக் கூடங்கள் மதிப்பெண் கூடங்களாக இல்லாமல், மதிப்புயர் கூடங்களாக அது மாறவேண்டும். எல்லோருக்கும் எல்லாம் என்ற இலக்கை நோக்கிய திராவிட மாடல் அரசு நடந்து கொண்டிருக்கிறது. எல்லாவற்றையும் எல்லோரும் எல்லாவற்றையும் அடைவதற்கு அனைவரும் அனைத்துத் தகுதிகளையும் பெற்றாகவேண்டும்.
எனது மாணவக் கண்மணிகள் முகத்தில் நான் உற்சாகத்தை பார்க்கிறேன். மகிழ்ச்சியைப் பார்க்கிறேன். மலர்ச்சியைப் பார்க்கிறேன். வானம் தொட்டு விடும் தூரம்தான். உங்களால் முடியும், உங்களால் மட்டுமே முடியும். அதற்கான முயற்சிகளில் ஈடுபடுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.