அரசியல் பின்புலத்தில்… ரேசன் அரிசி கடத்தல் மன்னன் கைது ! குண்டர் சட்டம் பாயுமா ?.!

பொது விநியோகத் திட்டத்தின் கீழ், பொதுமக்களுக்கு தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் ரேஷன் அரிசி கடத்தலைத் தடுக்கும் வகையில், குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறையின் காவல்துறை தலைவர் ரூபேஷ் குமார் மீனா உத்தரவின் பேரில், சென்னை மண்டலம் காவல் கண்காணிப்பாளர் முத்தமிழ் தலைமையில், தனிப்படையினர் சென்னை பின்னி மில், ஜமாலியா பெரம்பூர் பகுதியில் ரேசன் அரிசி கடத்துவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், இரண்டு இலகுரக வாகனங்கள் மற்றும் மூன்று இரண்டு சக்கர வாகனங்கள் சோதனை செய்தபோது, சுமார் 7 டன் எடையுள்ள ரேஷன் அரிசி மூட்டைகள் இருந்தது தெரியவந்துள்ளது.

பின்னர் கடத்தலில் ஈடுபட்ட பெரம்பூர் ஜமாலியாவை சேர்ந்த அசன்மதார் என்கிற அசன்பாய் மற்றும் மூன்று நபர்களை கைது செய்ததோடு, கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஐந்து வாகனங்களையும் பறிமுதல் செய்துள்ளனர். விசாரணையில் பெரம்பூர், ஓட்டேரி, வியாசர்பாடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், பொது விநியோகத் திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு தமிழ்நாடு அரசு இலவசமாக வழங்கும் ரேஷன் அரிசியை, குறைந்த விலைக்கு வாங்கி, ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களுக்கு கடத்தி அதிக விலைக்கு விற்பனை செய்வதாக தெரியவந்துள்ளது.

பின்னர் ஜமாலியா அசன்பாய் தனக்கு அரசியல் பின்புலம் இருப்பதாக கூறிக்கொண்டு, அப்பகுதியில் நீண்டகாலமாக ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபட்டு வந்துள்ளார். இவர்மீது குடிமைப் பொருட்கள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யாதது ஏன் என்கிற கேள்வியும் அப்பகுதியினர் மத்தியில் எழுந்துள்ளது.

மேலும் எம்.கே.பி நகரில் அரிசி மாவு அறைத்து விற்பனை செய்து வருவதாக கிடைத்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்தபோது, சுமார் 1700 கிலோ ரேசன் அரிசியை பதுக்கி, வைத்திருந்தது தெரியவந்துள்ளது. பின்னர் ரேசன் அரிசி மூட்டைகள், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்ததோடு, கடத்தலில் ஈடுபட்ட நியூட்டன் என்பவர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளனர்.

ஆந்திர மாநிலத்திற்கு கடத்திச்செல்வதற்காக வைத்திருந்த அரிசி மூட்டைகளையும், வாகனங்களையும் பறிமுதல் செய்ததோடு, கடத்தல் கும்பலையும் கைது செய்த துணை கண்காணிப்பாளர் கோபாலகுரு, ஆய்வாளர் தாம்சன் சேவியர் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் போலீசாரை காவல்துறை தலைவர் ரூபேஷ்குமார் மீனா ஐபிஎஸ் வெகுவாக பாராட்டியுள்ளார். மேலும் இந்த வழக்கு தொடர்பாக விரிவான விசாரணை மேற்கொள்ளவும் உத்தரவிட்டுள்ளார்.
_கே.எம்.எஸ்